Sunday, November 19, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 2

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 2

இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம் சிங்கள சமூகத்தில் சாதி முறை பற்றி ஆராய்கிறது. பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் என்பதால் முழுமையாக பௌத்த சமூக நெறிகளை உள்வாங்கியதோ சிங்கள் பௌத்த நிலை என்றால், அது இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கின்றது. ஆக சிங்கள பௌத்தம் என்பதை அடிப்படை பௌத்த நெறிகளுள் மாற்றம் செய்து கொண்ட ஒன்றாகக் காண வேண்டியது இதனைப் புரிந்து கொள்ள அவசியமாகின்றது.  இந்திய சமூகம் போன்ற சாதி அமைப்பு ஒன்று சிங்கள சமூக அமைப்பில் அடிப்படையாக இருப்பதை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.

நூலாசிரியர் ஏராளமான பல நூல்களை இந்த பகுதிக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் மிக முக்கியமாக இரண்டு நூல்கள் வழங்குகின்ற செய்திகள் இந்த அத்தியாயத்தில் மிகப்பரவலாக கையாளப்படுகின்றன. Bryce Ryan எழுதிய Cast in modern Ceylon: The Sinhalese system in transition (1953) என்ற நூல் மிக அதிகமாகவும் Richard Fick எழுதிய The social organisation in North-East in Buddhas time (1920) ஓரளவும்  கையாளப்பட்டுள்ளன.

புத்தர் காலத்தில் மனு கூறிய நான்கு வருணப் பாகுபாட்டை இலங்கை சூழலில் காணவில்லை என்கிறது ரீச்சர்ட் ஃபிக் அவர்களது ஆய்வு. தொழில்முறை சார்ந்த குடிகள் அமைப்பே சிங்களவர் சூழலில் இருந்தது என்பதை இது குறிப்பிடுகிறது. இந்திய சூழலில் சங்க இலக்கிய தரவுகள் தருகின்ற குடி முறையிலான சமூக அமைப்பு போன்ற ஒரு முறையே இது எனலாம்.

சிங்கள மக்களிடையே, எவ்வகையில் சாதி என்ற கருத்தாக்கம் முதன்முதலாக தோன்றியது என்பது கண்டி மலைப்பகுதியில் ஒரு தொன்மமாக வழக்கில் உள்ளது. இதனை நூர் யால்மண் தான் எழுதிய Under the Bo tree (1971)  என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தொன்மத்தின் படி சிங்கள மக்களின் புராணகால மூதாதையராக மகா சம்மாத என்பவர் இருந்ததாகவும், அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்வதற்காக பல்வேறு சாதிகளை அவர் உருவாக்கி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெயரை அவர் இட்டார் என்கிறது இந்தப் புராணக்கதை.

இந்திய சூழலில் வர்ணாசிரம அடிப்படையில்  பிராமணர்கள் சாதி அடுக்கின் உயர்ந்த நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் சிங்களவர் சாதிப் படிநிலை வரிசையில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கொவிகம  (விவசாய தொழில்) என்ற சாதி உயர் சாதியாக குறிப்பிடப்படுகிறது. இதே படிநிலை வரிசையை இலங்கை தமிழர் சூழலிலும் நாம் காண்கிறோம். வெள்ளாளர் அல்லது வேளாளர் என குறிப்பிடப்படும் சமூகமே இலங்கை தமிழ் சாதி வரிசையில் உயர் அந்தஸ்தைப் பெறும் சாதியாக வழக்கில் இருக்கின்றது. ஆக இது ஒரு ஒற்ருமையைப் புலப்படுத்துகிறது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்களாயினும் தமிழராயினும் விவசாயக் குடிகளே சாதி கட்டமைப்பு வரிசையில் முதலிடத்தைப் பெறுகின்றனர் என்பதே!

நூலின் இந்தப் பகுதி ஒவ்வொரு சாதி குழுவினரைப் பற்றியும் அடிப்படைத் தகவல்களை வழங்கியிருக்கின்றது. சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சாதி கட்டுமான அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள இந்த விளக்கம் நிச்சயம் உதவும் என்பதால் சிறு குறிப்பாக அவற்றை தொடர்ந்து காண்போம்.

1. கொய்கம அல்லது கொவிகம - இதன் பொருள் `நிலத்தை உழுது பயிர் செய்வோர்` என்பதாகும். . இலங்கையின் சமூக அமைப்பில் உயர் சாதியினராக கருதப்படுபவர்கள் இவர்கள். சிங்கள  மக்கள் தொகையில் 1960ம் ஆண்டு கணக்கின்படி 60% இவர்கள் இருக்கின்றனர். இச் சாதிக்குள் பல கிளை சாதிகள் உள்ளன. 

2. கராவ - இவர்கள் சிங்கள மீனவர்கள். ஆய்வாளர்களின் கருத்தின்படி இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள். இலங்கையில் கரையார் எனும் தமிழ் மீனவர்களை ஒத்தவர்கள் இந்தச் சாதி குழுவினர். இந்தச் சமூகத்தில் பௌத்தர்கள், கிறித்தவர்கள் என இரண்டு பிரிவு இருக்கின்றது. குறிப்பாக நீர்கொழும்பு பகுதியில் கிராம மக்கள் முழுமையாக கத்தோலிக்கர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை சத்திரியர் வம்சத்தினர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். மீன் பிடிக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

3. சலாகம - இவர்களும் தென்னிந்தியாவில் இருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் என்றும் இவர்களுக்குச் சாலியர் என்று ஒரு பெயர் ஒரு காலத்தில் இருந்தது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தென்னிந்திய சாலியர் சமூகத்தவர் போன்றே இவர்கள் கண்டி பகுதியில் நெசவாளர்களாக இருந்தனர். தொன்மையான டச்சு ஆவணங்களை ஆராயும்போது குறிப்பாக 1250ல் சீன வணிகர்களின் உதவியுடன்  இவர்களின் மூதாதையர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன.

4.துராவ - இவர்கள் கள் இறக்கும் சாதியினர். கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

5. நவண்டண்ண - தமிழகத்தில் பஞ்ச கம்மாளர்கள் எனக் குறிப்பிடப்படும் சமூகத்தை ஒத்தவர்கள். சிங்கள மக்கள் பெரும்பாலும் இவர்களை `ஆசாரி` என்றே அழைக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சிங்கள மொழியில் பல தமிழ் சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைகிறது. இவர்கள் தங்களைப்பிராமண சாதியில் இருந்து தோன்றியவர்கள் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் திராவிட பஞ்ச கம்மாளர்கள் தங்களை விஸ்வகர்ம பிராமணர் என்று கூறிக் கொள்வது போல இவ்வழக்கம் தொடர்வதை உற்று நோக்க வேண்டியுள்ளது.

6. ஹண்ணாலி - சிங்கள சமூகத்தில் தையல்காரர்கள் தனி சாதியாக இடம்பற்றிருக்கின்றனர் . மன்னராட்சி காலத்தில் அரண்மனைக்குத் துணி தயாரிக்கும் பணியில் இருந்தார்கள். இன்றைய நவீன இலங்கையில் இச்சமூகத்தினர் சாதி அடையாளத்தை இழந்து இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் கண்டியில் தமிழ் பேசும் தையல்காரர்கள் நிறைந்து விட்டார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

7.ஹுணு - பாரம்பரியமாக சுண்ணாம்பு சுடும் தொழில் செய்பவர்கள். மிகச் சிறிய அளவில் இவர்கள் எண்ணிக்கை உள்ளது.

8. ஹேன- சலவைத் தொழில் செய்பவர்கள். சிங்கள மக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்தியாவில் டோபி என அழைக்கப்படும் சமூகத்தவர் போன்றவர்கள். சிங்கள சமூகத்தில் உயர்குடி சாதியினருக்குச் சலவை ஊழியம் செய்வது இவர்களுடைய பாரம்பரிய தொழில். பூப்பு இறப்பு சடங்குகளின் போது தீட்டுத் துணிகளை நீக்குவதும், திருமணத்தில் பழைய துணிகளைப் பெறுவதும் சடங்கு சம்பிரதாயங்களைக் கவனிப்பதும் இவர்களின் முக்கிய வேலை.

9.வகும்புர -  வெல்லம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள்.  இலங்கையின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் சமூகத்தினர். வணிகம் முதலாளித்துவம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுபவர்களாக வசதி படைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

10. ஹின்னா -சாலியர் சமூகத்தினருக்கு வண்ணார் தொழில் செய்பவர்கள். பழங்காலத்தில் இவர்கள் சிங்கள சமூக அடுக்கில் மிகவும் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டனர்.

11. படஹல - சிங்கள குயவர்கள். இலங்கைத் தீவின் எல்லா பகுதிகளிலும் களிமண் கிடைப்பதால் இவர்கள் எல்லா பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

12. பணிக்கி-  தமிழகத்தில் அம்பட்டர் என வழங்கப்படும் சாதியினருக்கு ஒப்பான சமூகநிலை படைத்தவர்கள். அம்பட்டர் என்ற தமிழ் வழக்குச்சொல் சிங்கள மொழியில் `எம்பட்டியோ` என்றும் வழங்கப்படுகிறது.

13. வெள்ளி துரயி -  இவர்கள் பொ.ஆ. 289 ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அனுராதபுரம் வந்தடைந்தார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது. புனித போதி மரத்தை காவல் காப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இன்றைக்கு கோயில் பணியோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வெள்ளி துரயி என்ற சமூக அடையாளத்தை கொண்டுள்ளனர். பௌத்த மதத்தின் புனித குறியீடான போதி மரத்தை காவல் செய்பவர்கள் எனும் தகுதி இவர்களுக்கு பெருமை சேர்க்கிறது.

14. பண்ண துரயி - துரயி சாதியின் ஒரு பிரிவாக இவர்கள் அமைகிறார்கள். இவர்கள் மன்னர் ஆட்சியின் போது அரச குடும்பத்துக்கு சொந்தமான குதிரை யானை போன்ற கால்நடைகளுக்கு புல் அறுத்துப் போடும் வேலை செய்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.

15. பெரவா - மேளக்கருவி வாசிக்கும் சாதியினர். சிங்கள சமூகத்தில் சற்று தகுதி குறைந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். ஜோசியம் பார்த்தல் நெசவு செய்தல் சாமியாடி விடதல் போன்ற தொழில்களும் செய்கின்றனர். தமிழகத்தில் மேளக்கருவி (பறை)  வாச்க்கும் பறையர் சாதியில் ஒரு பிரிவினர் நெசவுத் தொழில் செய்து வந்ததை எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்திய சாதிகளும் குடிகளும் தொகுதி 6ல் குறிப்பிடுகின்றார் என்பதும்  இங்கு குறிப்பிடத்தக்கது.

16. பட்கம் பெரவா - சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடிக்கும் சாதியின் ஒரு பிரிவினர்.

17.  கொண்ட துரயி - இந்த சமூகத்தினர் பாரம்பரியமாகக் கையில் வேலேந்தி போதி மரங்களைக் காவல் காப்பவர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். மன்னர்களின் பல்லக்குகளைத் தூக்கி செல்பவர்களாக இருந்தனர்.

18. பட்கம் - கண்டிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் அடித்தள சாதியினர். உயர்சாதியினர் வீடுகளில் வேலைகளுக்கு ஈடுபடுபவர்கள். தமக்கென சொந்தமான நிலமற்றவர்கள். கூலி வேலை செய்பவர்கள்.

19. கவிக்கார - வட்டார சாதியினராக அறியப்படுபவர்கள். இச் சமூகத்துப் பெண்கள் நடன மாந்தர்களாக ஆண்கள் பாட்டு கலைஞர்களாக இருக்கின்றனர். கோயில்களில் பெண்கள் நடனம் ஆடுவதும் ஆண்கள் பாணர் தொழிலைச் செய்வது இச்சமூகத்தினர் தொழிலாக அமைகிறது. 

20.ஒலீ - கோயில்களில் நடனம் ஆடுபவர்களாகவும் திருவிழாக்களில் பங்களிப்பவர்களாகவும், விழாக்களில் அசுரர்களை வதம் செய்யும் பாவனைகளைச் செய்பவர்களாகவும் உள்ளவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சாதியினர்.

21. தெய்வ கட்டர -  இதனைத் தமிழ்ப் படுத்தினால் `தமிழ் புறச்சாதிகள்` என்ற பொருள் வருகிறது. இவர்கள் உடல் தோற்றம் நடை உடை பாவனையிலும் வாழ்க்கை முறையிலும் சிங்கள மக்களாகவே காணப்படுகின்றனர் என்றாலும் சிங்கள மக்கள் இவர்களைத் `தமிழ்ப்புறச்சாதிகளாக` அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையை ஆண்ட எல்லாளன் எனும் தமிழ் மன்னனின் படை வீரர்கள் `தெய்வ கட்டர` என அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு கலப்படைந்து விட்டாலும் இன்றும் தமிழச் சாதி மரபினர் என அடையாளப் படுத்தப் படுகின்றனர்.

22.பலீ - தமிழகத்தில் புதிரை வண்ணார்கள் போன்று அடித்தள சாதி சமூக மக்களின் அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் வண்ணார்களாக உள்ளனர்.

23. கஹலபெரவா- இலங்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்று. ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடித்தல், பிணம் எரித்தல், அடக்கம் செய்தல், குப்பை அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை மிக நீண்ட காலமாக சிங்கள சமூகத்தில் செய்துவரும் மரபினர்.

பொதுவாகவே சிங்கள மக்கள் மொழியின் அடிப்படையில் ஒன்றுபட்டாலும் சாதிப்பிரிவு கட்டமைப்பைச் சார்ந்தே இவர்களது சமூக அமைப்பு அமைந்திருக்கின்றது.  

இந்தியாவில் உள்ளது போன்ற சாதி கட்டமைப்பு சிங்கள சமூகத்தில் ஆழமாக வேரூன்றி அமைந்திருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரம்ப காலத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த சமூகப் பிரிவுகளாக இருந்த நிலை மாறி இந்திய வர்ணாசிரம தத்துவத்தின் தாக்கத்தின் அடிப்படையில், அதனை உள்வாங்கிய வகையில் விரிவான சாதி அமைப்பைக் கொண்டதாக வளர்ச்சி கண்டு விட்டதைக் காண முடிகிறது. இலங்கை வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றான சூளவம்சம் குறிப்பிடுவதுபோல இலங்கை பௌத்த அரசு சார்ந்த நடவடிக்கைகளில் இந்திய வைதீக தொடர்புகள் இருந்தமையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. 

குறிப்பு: சிங்களவர் சமூகச் சூழலை விரிவாக அறிந்தவர்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மேலுள்ள செய்திகளில் ஏதேனும் தவறான குறிப்புகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டலாம். இது சிங்களவர் சமூக அமைப்பை புரிந்து கொள்ள மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும்.

தொடரும்....

புகைப்படம்:  அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயத்தில் உள்ள போதி மரம், கோயில்

-சுபா



Saturday, November 18, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 1

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி

முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 1

மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களும் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வழங்குவதால் இந்த நூல் கூறும் முக்கிய விஷயங்களைத் தனித்தனியே ஆராய்வது அவசியமாகின்றது.

தமிழக வரலாற்றை ஆராய முற்படும் பலரும் தமிழக நில எல்லைக்குள் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு அருகில் இருக்கும் இலங்கையில் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவருக்கு கிடைத்த நேரடி அனுபவங்களும மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நூலாசிரியர் மூன்று முறை வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யக் கிடைத்த தனது வாய்ப்பையும் அதன் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு தீவிர வாசிப்பு, கலந்துரையாடல்கள் மற்றும் நூல் ஆய்வு என்ற அடிப்படையிலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இலங்கையைப் பற்றி ஆராய முற்படும் எல்லோருக்கும் பொதுவாகவே ஆய்வுக்கவனம் `தமிழர்கள், தமிழ் மொழி` என்ற அடிப்படையில் அமைவதுண்டு. ஆனால், இந்த நூல் இலங்கையில் சிங்களவர் பற்றி பேசுகிறது. `சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்; பௌத்தத்தைத் தனது சமயமாக கடைபிடிப்பவர்கள்; ஆயினும் திராவிட பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்`, என்ற கருத்துடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.வரலாற்று ஆய்வுகளில் நமக்கு அருகில் இருக்கும் நாடுகளைப் பற்றிய, அங்கு வாழ்கின்ற மக்களின் சமுதாய நிலை பற்றிய ஆய்வுகளிலும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ச்சி நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கை ஏறக்குறைய இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்து அதன் பின்னர் கடல் ஏற்றத்தால் தனித்தீவாகியது.  சிங்கள, சிஹல போன்ற சொற்கள் பொ.ஆ. 3 முதல் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சொல். ஆயினும் ஈழம் (ஈலம்) என்னும் சொல் மிகப் பழங்காலத்தில் வழக்கில் இருந்தது என்பதை சான்று கூற பல எடுத்துக்காட்டுகள் வழங்குகின்றார். சங்க இலக்கியத்தில் ஈழம் என்ற சொல்லைக் குறிப்பிட்டு வருகின்ற செய்யுட்கள் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவினை ஈழம் என்று அழைக்கும் மரபு இருந்துள்ளது என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.

இலங்கை வரலாறு எனும் போது மகாவம்சமும், தீபவம்சமும், சூளவம்சமும் முக்கியத்துவம் பெறுபவை. இவை கூறும் செய்திகளின் அடிப்படையில் இலங்கையில் மக்கள் குடியேற்றம் பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் விஜயனின் தலைமையில் நடந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை வாசிக்கும் போது எல்லோருக்கும் எழுகின்ற கேள்வி, இலங்கை தீவில் விஜயனின் வருகைக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களது இன அடையாளம் என்ன? அவரது பண்பாடு எது? போன்றவையாகும்.

இலங்கைத் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்த மக்களுள் பூர்வகுடிகளான நாகர் இன மக்கள் என்னும் இக்கருத்தை வலியுறுத்தும்  வகையில் அமைந்த தொல்லியல் ஆய்வுகள் அண்மைய கால கண்டுபிடிப்புகளில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணத்திற்கு அருகே மன்னார் தீவுக்கு அருகே உள்ள கட்டுக்கரை பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் நாகர் பண்பாட்டுச் சான்றுகள் பல கிடைக்கப் பெற்றமை குறித்து அந்த அகழாய்விற்குத்  தலைமை தாங்கிய பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது கட்டுரைகள் நமக்கு நல்ல சான்றுகளாக அமைகின்றன. இந்த நாகர் மக்கள் தமிழர்களின் மூதாதையர்கள். தென்னிந்தியாவில் கிடைப்பது போல தொல்தமிழ்  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இன்று இலங்கைத் தீவில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அனுராதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைத்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஆக சிங்களமொழி உருவான பொ.ஆ 5ம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தீவில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்த அடிப்படையில் இலங்கைத் தீவிற்குக் குடிபெயர்ந்த சிங்கள மக்களின் மரபணு, பண்பாடு, சமயம், சமூக நிலை, வரலாறு ஆகியவற்றை ஆராய்வதே இந்த நூலில் அடிப்படை நோக்கமாக அமைகிறது.

மகாவம்சத்தை மொழிபெயர்த்த  ஜெர்மானியரான வில்கம் கெய்கர் (1938),  இலங்கைக்கு வந்த விஜயன் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து புறப்பட்டு வந்தவன் என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதனடிப்படையில் காணும்பொழுது அனேகமாக பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஒரு சில ஆய்வாளர்கள் சிங்களவர்கள் இன்றைய ஒரிசா மாநில பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் ஒரு சிலர் இன்றைய வங்காளதேசம் நாட்டின் நிலப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்ற ஆய்வுகளையும் காண்கிறோம். இத்தகைய குழப்பத்தைத் தெளிவு படுத்த மரபணு ஆய்வு என்பது முக்கியமாகிறது.

இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் நூலாசிரியர் சிங்கள இன மக்களின் மரபணு ஆய்வுகளை விரிவாக அலசுகிறார். இலங்கையில் இன்று நாம் காணும் போது அங்கு வாழ்கின்ற மக்களை சிங்களவர், இலங்கை தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மலாய்க்காரர்கள், வேடர்கள், பர்கர் (டச்சு போர்த்துகீசிய நாட்டவர்கள்) என்ற வகையில் பிரிக்கலாம். மரபினக் குழு C, F, H, L, R2, J2 O3, R1A1, என்ற வகையிலும் இன அடையாள கூறு M130, M89, M69, M20, M124, M172, M122, M17   அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிங்களவர் மரபணு எந்த இனக் குழு மற்றும் மரபின குழு வட்டத்திற்குள் வருகிறது என்பதை நூலாசிரியர் இந்தப்பகுதியில் விளக்குகின்றார்.  M17 இன அடையாள கூறு கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு உரியது. இதனை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள். உதாரணமாக பஞ்சாபியர் குஜராத்தியர் மராத்தியர் ஆகியோரிடம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அதேபோல மேற்குவங்க பிராமணர்களிடம் 72% அளவும் பிராமணர்களிடம் 48% அளவு உள்ளன. அதேபோல தென்னிந்தியாவில் ஐயங்கார் பிராமணர்களிடம் 31% , செஞ்சு பழங்குடிகளிடம் 26% இது காணப்படுகிறது என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார். இதற்கு எதிர் மாறாக M20 இன அடையாளக் கூறு மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மிகப்பெரிய எண்ணிக்கையில் அமைந்த குழு என்றும்,  இந்த மரபணு மூலத்தைக் கொண்ட மக்களே இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிக அதிகம் இருக்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.

1. டாக்டர் கிர்க் ஆய்வு - இவரது ஆய்வு The legend of Prince Vijaya: A study of Sinhalese origins.1976ம் ஆண்டு வெளிவந்தது. இவரது ஆய்வின் படி இன்றைய சிங்களவர்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது சிங்களவருக்கும் தமிழருக்குமான தொடர்பு நெருக்கமாக இருப்பதும் ஏனைய பஞ்சாபியர் குஜராத்தியர் வங்காளியரோடு ஒப்பிடும்போது  நெருக்கம் குறைந்து இருப்பதும் வெளிப்பட்டது. சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே உள்ள தூரமும் சிங்களவருக்கும் வங்காளியருக்கமான தூரமும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதை இவரது ஆய்வுகள் சுட்டிக் காட்டின. ஆக வங்காளியர்கள் முன்னர் திராவிட மொழி சமூகத்தாராக இருந்து பின்னர் இந்தோ-ஆரிய மொழி தாக்குதலுக்கு ஆட்பட்டு அந்த மொழியை ஏற்றுக் கொண்டு இருத்தல் வேண்டும் என்கிறது இவரது ஆய்வு.

2. டாக்டர் சாஹா ஆய்வு - இவரது ஆய்வுகள் இலங்கை சிங்கள மக்கள் வங்காளியர்களைவிட இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழருடனும் மரபணு ரீதியில் நெருங்கி காணப்படுகின்றனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. வங்காள மக்களோடு சிங்களவர்களுக்குத் தொடர்பு உண்டு எனும் பழங்கதை காலம் காலமாக இருந்து வந்தாலும் அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மரபணு நெருக்கம் இந்த இரண்டு இனக் குழுவினருக்கும் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனால்,  வரலாற்றின் ஒரு காலகட்டம் வரை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  ஒத்த மரபணு (gene pool) கொண்டவர்களாக இருந்து பின்னர் பல்வேறு சமூக நிலை மாற்றங்களின் அடிப்படையில் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்தனர் என்று இவரது ஆய்வு குறிப்பிடுகிறது.

3. பாத்திஹா ஆய்வு (முதல் கட்டம்) - இந்த ஆய்வு மரபணு நெருக்கத்தை ஆராயும்போது சிங்களமக்கள் தமிழர்களுடன் மரபணு அடிப்படையில் மிகவும் நெருங்கி காணப்படுகின்றனர் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது.

4. பாத்திஹா ஆய்வு (இரண்டாம் கட்டம்) - சிங்களவர்களுக்கும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நேரடியான மரபணு உறவு ஏதும் இலலை என்று குறிப்பிடுவதோடு  மரபணு நெருக்கம் வங்காளியருடனும் தமிழருடனும் நெருக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படுத்துகிறது.

5. டாக்டர் சத்ரியா ஆய்வு - genetic distance analysis என்ற ஆய்வு முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், தென்னிந்திய முஸ்லிம்கள் அனைவரும் நெருக்கமான உறவு கொண்டவர்கள் என்றும், குஜராத்தியர், பஞ்சாபியர், வடமேற்கு இந்திய பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குழுவாக காணப்படுகின்றனர் என்றும், வங்காளியர் தனி ஒரு குழுவாக காணப்படுகின்றனர்   என்றும், இலங்கை வேடர்கள் மரபணு ரீதியில் தனித்த ஒரு இனக்குழுவாக காணப்படுகின்றனர் என்றும்  ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியது. சத்ரியா ஆய்வின் மிக முக்கிய பங்களிப்பாகக் கருதப்பட வேண்டியது சிங்கள மக்களின் இனக்குழு உருவாக்கத்தில் ஏறக்குறைய 70 விழுக்காடு மரபணு நெருக்கம் இந்தியத் தமிழரின் மரபு கொண்டதாக இருக்கிறது என்பதாகும்.

6. டாக்டர் டுமாஸ் கிவிசில்டு ஆய்வு -இந்த ஆய்வின் படி இலங்கை சிங்களவர் மரபணு அடையாளக் கூறுகள்,  இந்தியாவிற்கு ஆரியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்த தென்னாசிய திராவிட சமூகங்களுக்கு உரிய மரபணு அடையாளக் கூறுகள் M20, M124, M172 ஆகியவை மிக அதிகமாக, அதாவது ஏறக்குறைய 26.6% இருப்பதாக வெளிப்படுத்தியது.

மேற்குறிப்பிட்ட அனைத்து ஆய்வுகளையும் விரிவாக விளக்கி, சிங்களவர்கள் இதுகாறும் பொதுவாக குறிப்பிடப்பட்ட வகையில் பொ.ஆ முதலாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் பெரும் கூட்டமாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எனும் வாதம் தவறானது என்பதையும், சிங்களவர்கள் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றவர்கள் தான் என்ற கருத்தையும் நூல் நிலைநாட்டுகிறது.

இத்தகைய ஆய்வுகள் இலங்கைத்தீவில் பெருவாரியாக வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் அடிப்படையில் ஒரே மரபணு கூறுகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது.

தொடர்வோம்!

-சுபா

Wednesday, August 16, 2023

”தமிழகத்தில் பௌத்தம்” - நூல் திறனாய்வு

சுந்தர சோழன்



முனைவர் தேமொழி அவர்கள் எழுதி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள மிகச் சிறப்பான நூல்.  கடந்த வார இறுதியில் இதனை வாங்கிய நான், இரண்டு நாட்களில் ஒரே மூச்சில் இதனை வாசித்து முடித்தேன். மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம்.

பண்டைத் தமிழகத்தில் பவுத்தம் செழித்தோங்கியது என்பதை மறுக்க முடியாத சான்றுகளுடன் நிறுவும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதனை நிறுவும் தனது முயற்சியில் நூலாசிரியர் முனைவர் தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெறுகிறார் என்பது மகிழ்வளிக்கும் செய்தி.

இந்நூல் 94 பக்கங்கள் மட்டுமே கொண்டது. நீண்ட சலிப்பூட்டும் நூல்களை வாசிக்கத் தயங்கும் 2K Kids எனப்படும் இளம் தலைமுறையினர் கூட இதனை வாசிக்கும் வகையில், சுருக்கமாக நறுக்குத் தெறித்த வகையில் இதனை எழுதி இருக்கிறார் ஆசிரியர் முனைவர் தேமொழி அவர்கள். அவருக்கு நமது வாழ்த்துகள்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்

என்னும் கதையாக நூறுக்கும் குறைவான பக்கங்களில் தான் சொல்ல வந்த அனைத்தையும் மிகச் சிறப்பாக முன்வைத்து விடுகிறார் இதன் ஆசிரியர்.

1. புத்தரின் திருவுருவத் தோற்றம்

2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள்

3. முக்கோற்பவர்

4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

5. எண்குணத்தான்

என இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டதாகத் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.


இவ்வைந்து பகுதிகளிலும் வரலாறு, இலக்கியம், கல்வெட்டியல் எனப் பல்வேறு துறை சார் சான்றுகள் முன்வைக்கப் பட்டுள்ளன என்ற போதிலும், கீழ்க்கண்டவாறு இவற்றில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருப்பதை நான் காண்கிறேன். அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

1. புத்தரின் திருவுருவத் தோற்றம் – Iconography – சிலை வடிவமைப்பியல்?

2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள் – History and Archeology – வரலாறு மற்றும் தொல்லியல்

3. முக்கோற்பவர் – Literature and Iconography – இலக்கியம் மற்றும் சிலை வடிவமைப்பியல்

4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள் –Epigraphy and History – கல்வெட்டு ஆய்வியல் மற்றும் வரலாறு

5. எண்குணத்தான் –Comparative study of Thirukkural & Buddhist Phiolosophy

இது குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் எழுத வேண்டும். செய்கிறேன். தற்போதைக்கு எனது வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையிலான புரிதல் மட்டும்.


மிகச் சிறப்பான நூலை வாசித்தேன் என்பதும் பயனுள்ள வாசிப்பு அனுபவம் ஆக இருந்தது என்பதிலும் ஐயமில்லை.

ரூ.120 விலை கொண்ட இந்நூலை வாசிக்க விரும்பும் அன்பர்கள் www.commonfolks.in தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்நூல் பேசும் தலைப்புகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொரு வாசகரும் தவறாது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பன்னாட்டு அமைப்பு மிகச் சிறப்பானதொரு நூலை நமக்கு அளித்துள்ளது. அவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

Tuesday, August 1, 2023

தமிழகத்தில் பௌத்தம் - நூல் விமர்சனம்


அருள் பெர்வின்
பாசல், சுவிசர்லாந்து

இந்தியக் குடியுரிமையைக் கன்சுலேட்டில் கடாசிவிட்டு ஐரோப்பிய நாடு ஒன்றின் குடியுரிமையை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு  வெளிநாட்டில் வாழும் பாரத தேச பக்தர்கள் என்று - இன்றைய வரையறைப்படி - அறியப்படும் கூட்டத்தில் உள்ள ஒருவருடன் சென்ற வருடம் ஓர் இரவுப் பொழுதில் உரையாடிக் கொண்டிருக்க நேர்ந்தது. “பாரதத்தில் இருந்தது இருப்பது ஒரே கலாச்சாரம்தான் ஒரே மதம்தான், மற்றதெல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் கொண்டுவந்ததுதான், இல்லையென்று நீங்கள் சொன்னால் அதை எனக்கு புரிய வையுங்கள். புரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று காவிபடிந்த வெள்ளை மனதுடன் என்னுடன் ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார். 

பௌத்தம் என்று ஒரு மதம் பாரத தேசமெங்கும் இருந்ததே அது தெரியுமா என்றேன். “ஆமாம், இன்று ஜக்கி வாசுதேவ் போல புத்தர் அன்றைய பாரதத்தில் மக்களுக்கு நல்வழியை போதித்துக் கொண்டிருந்தார். அதனாலென்ன?” என்றார். இனிமேல் ஜக்கியைப் பற்றி இவரிடம் பேசுவதா அல்லது புத்தரைப் பற்றிப் பேசுவதா என்று டாபிக்கை அவர் அலைக்கழிக்க வைத்தது தெரிந்தது. (வாழ்க்கையில் நேராகப் பேசும் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள். ஆனால் இந்த உவமைகளை நடுவில் போட்டுப் பேசுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அது ஆம்வே வியாபார டெக்னிக்.) அசோகர், மணிமேகலை, அமராவதி, அழகர் கோவில், அகழாராய்ச்சி என்றெல்லாம் பௌத்தம் பற்றி இரண்டு மூன்று கியர்களை மாற்ற ஆரம்பித்தேன். உடனே இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா ஹாண்ட் ப்ரேக் போட ஆரம்பித்தார். கரடுமுரடான சில புத்தகங்களைச் சொன்னேன். உடனே அந்த புத்தகங்களுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று ரிவர்ஸ் கியர் போட ஆரம்பித்துவிட்டார். சரி, இனி இவரிடம் ஆடு புழுக்கை போடுகிறது என்று சொன்னால் கூட அதற்கு ஆதாரம் கேட்பார் என்று ஒதுங்கிக் கொண்டு வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்து கிளாஸைக் கவுத்திவிட்டேன். 

இந்தியாவில் பௌத்தம் பற்றிய விவரங்கள் ஆன்ட்ராய்ட் போனில் எடுத்த போட்டோக்கள் ஐபோனுக்கு மாறியதும் டவுன்லோட் செய்யப்படாமல் விடப்பட்டது போல எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டது. இதில் தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏசுநாதரைத் தெரிந்த அளவுக்குக் கூட புத்தரை இன்றைய தமிழர்களுக்குத் தெரிந்திருக்காது. உன் மூதாதையர் என் மூதாதையர் என்று பெரும்பாலானோர் புத்தமதத்தைத் தழுவியிருந்த நாடு தமிழ்நாடு. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. அப்படியா என்று நீங்கள் வாயைப் பிளந்தால் உங்கள் வாய்க்குள் செருகப்பட வேண்டிய புத்தகம் முனைவர் தேமொழி எழுதிய ‘தமிழகத்தில் பௌத்தம்’ என்ற புத்தகம். நூறு பக்க புத்தகத்தில் ஐம்பது பக்கங்கள் இதற்கான ஆதாரங்கள்தான்.

இப்படித் தமிழகத்தில் பல ஆயிரம் மடங்கள், கோவில்கள் என்று தழைத்தோங்கியிருந்த பௌத்த மதம் ஏன் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்று நீங்கள் கேட்டால் அதற்குப் பதில் ‘இல்லை’. பௌத்தம் இன்றும் நீக்கமற தமிழ்நாடு முழுவதும் நிரம்பியிருக்கிறது, வேறு வேறு வடிவங்களில். ஆயிரமாண்டு மதம் காணாமல் போக முடியாது.

தெற்காசியா முழுவதும் கடல் வழியாக பௌத்தம் பரவியிருக்கிறது. வட இந்தியாவில் கடல் கிடையாது. பௌத்தத்தைத் தெற்காசியாவெங்கும் பரப்பியவர்கள் கடல் கடந்து சென்ற தமிழர்கள். புத்ததத்தர் என்ற தமிழர் பாலி மொழியில் எழுதிய பௌத்த நூற்கள் இன்றும் மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வாழ்கின்றன.

முனைவர் தேமொழி தமிழகத்தில் இன்றும் முனீஸ்வரர்களாக, ‘பூத’ என்ற ஊர்ப்பெயர்களாக, பல கோவில்களில் இன்றும் மதம் மாற்றப்பட்ட சிலைகளாக வாழும் புத்தரின் ஆதாரங்களைத் தொகுத்ததுடன் மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்களில் வரும் முக்கோற்பகவர், அந்தணர், திருக்குறளில் வரும் எண்குணத்தான் போன்ற புத்தத் தொடர்புகளை ஆப்கானிஸ்தான், கனிஷ்கர் வரைச் சென்று நம் கபாலங்களைப் பிளந்து உண்மைகளை உள்ளே வைக்கிறார். 

தேமொழியின் புத்தகத்தை வாசித்ததும் எனக்கு உடனே தோன்றியது இதுதான். தலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள். நாம் அவர் ஆன்மாவை உடைத்து வைத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் சிதறிக் கிடக்கிறார்.

புத்தகத்தை வாசிக்க ஆர்வமிருந்தால்…

Arul Mervin 

https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham




Saturday, July 22, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

சரண்யா

எனக்கு சிறுவயதில் கோடியக்கரையில் ராமர் பாதம் என்று ஒன்று காட்டினார்கள்! அப்பொழுது எனக்குள் ஒரு கேள்வி, ராமர் என்பதே புனைவு கதை தானே அப்புறம் எப்படி அவருக்கு பாதம் வந்தது ? இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிகிறது அது புத்தர் பாதமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பது !

இன்றும் சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா, இன்னும் பல நாடுகளில் புத்த பிக்குகள் அதிகமாக இருக்கின்றனர். சீனர்களில் பெரும்பாலானோர் bhudhism முறையை இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஆச்சரியம் இல்லை!

இந்த புத்தகம் பல சங்க கால செப்பேடுகளும், பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் தொகுப்பு அடிப்படையில் எழுதப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை முனைவரால் எழுதப்பட்டது .

புத்தர் என்பவர் 'சொல் 'செயல்' 'எண்ணம்' மூன்றும் ஒத்தவாறு இருக்க வேண்டும் என்பதை போதித்த ஒரு மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கிறார். அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. கடவுள் வழிபாட்டை மறுத்தவர். அவர் மிருக மாமிசம் பலியிடுவதை உடன்படாதவர் ஆக அவர் சைவமாக இருந்திருக்கிறார்.

நிறைய புத்த விகாரங்கள் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் அப்பொழுது உள்ள புத்த பிக்குகள் வாழ்ந்த காலத்தில் தமிழகம் என்பது மிகவும் செழுமையான சோலைவனமாக இருந்திருக்கிறது. பூக்களாலும் தாமரை மலர்கள் நிறைந்த குளங்களாலும், மரங்களாலும் பறவைகளாலும் நிறைந்திருக்கிறது !! இப்படி செழுமையாக இருந்த தமிழகம் பல்வேறு இயற்கை சீற்றங்களால் அழிந்து பஞ்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

அப்பொழுது பல்வேறு அரசர்கள் பிக்குகளின் புத்த கொள்கைகளை ஆதரித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அப்பொழுது நிறைய புத்த விகாரங்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது. கடல் வழி ஊர்களில் அதிகமாக இருந்திருக்கிறது. அங்கு பல வெளிநாட்டவர்கள் வந்து சென்று கொள்கைகளை பல நாடுகளிலும் பரப்பி இருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அங்கு வந்து சென்று கொண்டிருந்தார்கள் என்பதற்கான குறிப்புகள் இருக்கிறார்கள்.

புத்த பிக்குகள் எல்லா நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டு மொழியில் புத்த கொள்கைகளை பற்றி சொன்னதால் இன்றும் பல நாடுகளில் புத்த கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். ஆங்காங்கே இங்கு கிடைத்த புத்த சிலைகள் எப்படி மற்ற வழிபாட்டு சிலைகளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் ஆதாரங்களோடு இந்த புத்தகம் சொல்கிறது.

புத்தத்தில் வழிபாடு முறை என்பது கிடையாது. ஆனால் அதற்குப் பிறகு அது மாறி, பூக்களாலும் தூபங்களாலும் வழிபடும் வெவ்வேறு கடவுளாக மாற்றப்படுகிறது.

இன்றளவும் படுத்திருக்கும் நிலையிலும், அமர்ந்திருக்கும் நிலையிலும் புத்த சிலைகள் பல ஊர்களில் தமிழ்நாட்டில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அது மிகவும் பழமையான சிலைகள் என்பதற்கு பல தரவுகள் இருக்கின்றன.

இப்படி பல பல தகவல்களோடு இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

வரலாற்றை தெரிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.

Monday, May 29, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

கும்பகோணம் ஜம்புலிங்கம்



முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33),  தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் (பக்.45-59) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் (பக்.60-79) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் (பக்.60-91) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது.  இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.


"தொடக்க கால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்." (ப.14) "கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது." (ப.23)  "சிந்து சமவெளிக்கு அப்பால் வளர்ந்த காந்தார புத்த சிற்பங்களுக்கு இணையாகவே கங்கைச்சமவெளி அருகில் மதுராவிலும் புத்த சிற்பங்கள் உருவாயின."(ப.25) "மதுரா வடிவங்களிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக குப்த வடிவங்கள் தோன்றிப் பின்னர் குப்த வடிவமே அஜந்தா எல்லோரா, அமராவதி நாகார்ஜுனகொண்டா, காஞ்சி நாகப்பட்டினம் என இந்தியாவின் பிற பகுதிகளிலும் கிழக்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்.... உள்ளிட்ட நாடுகளில் உருவான வடிவங்களுக்கும் அடித்தளமாக அமைந்தன." (ப.27)


"தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு தொடர்ந்து பல பௌத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது."(ப.34) "சில புத்தர் சிலைகள் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர்.. ஆகிய இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றி உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை."(ப.42)


"கலித்தொகையில் முக்கோற்பவர் குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு."(ப.45) "முக்கோல் குறித்துத் தமிழின் தொன்மையான நூலை எழுதிய தொல்காப்பியரும் அந்தணர்க்குரியவை எவை என்பதைக் குறிப்பிடுகையில் ஒரு நூற்பாவில் சுட்டுகிறார்."(ப.48) "தொல்காப்பியம் குறிப்பிடுவது போல அந்தணர்கள்/துறவிகள் முக்கோல் ஏந்துவர் என்பது வழக்கம்." (ப.52) "துறவிகள் அவ்வாறு முக்கோல் அமைப்பைத் தங்களுடன் எடுத்துச்சென்ற நோக்கம் என்ன என்பதற்கான சான்றுகள் சிற்பங்களிலோ ஓவியங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை, அதாவது பௌத்த சிற்பங்களைத் தவிர."(ப.54)


"விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்ததத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார்."(ப.64) "ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தபுத்ததத்தர் அவர் காலத்தில் தமிழகம் முழுவதும் ஆண்டதாகக் களப்பிர மன்னன் என அச்சுத விக்கந்தனைக் குறிப்பிடுகிறார்."(ப.67) "புத்ததத்தர் காலமான ஐந்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியதையும் அதன் பின்னரே கடல்கோளால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையின் பதிவு காட்டுவதாகவும் கணிக்கலாம்."(ப.70)


"எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறியமுற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்."(ப.80) "...எட்டு பண்புகளைக் கொண்டவரும் துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்."(ப.90) "திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரை குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப்பொருத்தமானதாக இருக்கும்."(ப.90)


ஒட்டுமொத்த நூலையும் வாசிக்கும்போது முழுமையாக பல புதிய செய்திகளைக் காணலாம்.  நூலாசிரியர் பல இடங்களில் என் ஆய்வினை மேற்கோளாகச் சுட்டியுள்ளதைக் காணமுடிந்தது. உரிய இடங்களில் ஒளிப்படங்களும், மேற்கோள் சான்றுகளும் தரப்பட்டுள்ளன.


தமிழகத்தில் பௌத்தம் என்பதை பல்வேறு பொருண்மைகளில் நோக்குகின்ற நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கும், பதிப்பித்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.


நூல் : தமிழகத்தில் பௌத்தம்

ஆசிரியர் : முனைவர் தேமொழி

பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மே 2023

விலை ரூ.120, ஐரோப்பாவில் யூரோ 4

நூலை இணையம் வழி பெற :

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation


சோழ நாட்டில் பௌத்தம் தளத்தில் வாசிக்க:

https://ponnibuddha.blogspot.com/2023/05/blog-post_29.html

Wednesday, May 24, 2023

திருகோணமலை செருவவிலா மங்கள ராஜ விகாரை



திருகோணமலை செருவவிலா மங்கள ராஜ விகாரை - இது இலங்கையில் இருக்கின்ற 17 புனித பௌத்த விகாரங்களில் ஒன்று. புத்தரின் நெற்றிப் பகுதி எலும்பின் சிறு பகுதி பாதுகாக்கப்படும் புனிதப் பகுதியாக இது கருதப்படுகின்றது.

கிமு 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் கட்டுமானம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வளாகத்தில் பண்டைய சிதலம் அடைந்த பகுதிகளும் காணப்படுகின்றன. அவற்றிற்கிடையே புதிய கட்டுமானங்கள் அழகாக அமைந்திருக்கின்றன.
அருகாமையிலேயே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அதில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.















Tuesday, May 16, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

முனைவர் நா. கண்ணன்



டாக்டர் தேமொழி எழுதியுள்ள "தமிழகத்தில் பௌத்தம்" எனும் நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக சனி, மே 14, 2023 ல் வெளியீடு கண்டது.

1. புத்தரின் திருவுருவத்தோற்றம்

2. தமிழ் நாட்டு பௌத்த சிற்பங்கள்

3. முக்கோற்பகவர்

4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

5. எண் குணத்தான்

எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது இப்புத்தகம்.


பௌத்தம் தொன்மையானது, வடநாட்டிலிருந்து மௌரிய அரசர் அசோகர் காலத்தில் (கிமு 3) தெற்கே வந்தது. எனவே பௌத்த போதனைகளை பாலி மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்து பின் தமிழ் சுயமாக இது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது.


அலெக்ஸாண்டர் படையெடுப்பின் விளைவாக பௌத்தம் முதலில் காந்தாரம் (பாகிஸ்தான், ஆஃப்கான்) செல்கிறது. பாக்டீரியா எனும் பகுதியில் கிடைத்த சிற்பங்களே புத்தரின் முதல் உருவச்சிற்பங்களாகும். அவை கிரேக்கச் சிலைகளின் கலை வடிவில் இருக்கும். பின் பரவிய வெவ்வேறு பிரதேசங்களின் தன்மையை புத்தர் சிற்பங்கள் கொள்கின்றன. மீசை வைத்த புத்தர் சிலை தமிழகத்தில் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது. மீசை ஆண்மையின் குறியீடு. ரவி வர்மா கூட சிவனுக்கு மீசை வைத்து அழகு பார்க்கிறார்.  தமிழ் நாட்டில் மொத்தம் 70 புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன அறிகிறோம். பெரும்பாலும் அவை மகத நாடு என அறியப்படும் ஆறகளூர் (சேலம்)  பகுதியாகும். அங்குதான் பௌத்த எழுச்சி மாநாடு நடந்தது.


இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு முக்கோர்பகவர் யார்? பகவான் யார்? அந்தணர் யார்? எனும் கேள்விகளுக்கான பதில்கள். பௌத்த சந்நியாசிகள் தங்கள் சிறு உடைமைகளை வைக்க மூன்று கோல்கள் கொண்ட ஒரு உண்டியை உருவாக்குவார்களாம். அதுவே இந்த முக்கோல். இதற்கு எந்த தத்துவப்பின்னணியும் கிடையாது என்பது டாக்டர் தேமொழியின் கண்டுபிடிப்பு. மேலும், பகவர், பகவன் எனும் சொற்கள் புத்த பகவானைக் குறிக்க வந்தவையே தவிர இந்துத் தெய்வங்களையோ, அடியார்களையோ குறிக்க வந்தவை அல்ல என்றும் விளக்குகிறார் தேமொழி.


திருக்குறள் சொல்லும் அறவாழி அந்தணன் என்பது பௌத்த துறவிகளைச் சுட்ட வந்த சொல் என்கிறார் தேமொழி. வ.உ.சி அவர்கள் திருக்குறள் பாயிரம் அனைத்தும் துறவிகளின் புகழ் பாடுபவையேயன்றி இறைவனுக்கான பாடல்கள் அல்ல என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுகிறார் தேமொழி  இந்நூலில்.


இதன் அடிப்படையில் முக்கோல் பௌத்த பிக்குகளுக்கு அன்று கொடுக்கப்பட்டது. இனிமேல் தமிழ் பௌத்த பிக்குகள் முன் போல் முக்கோர் பகவர் ஆவர் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் டோல்னா பையே சௌகர்யம் என பிக்குகள் செல்வதும், சிலர் பேக்பேக் வைத்துக் கொண்டு இலகுவாகச் செல்வதும் காணக்கிடைக்கிறது. நான் ஜப்பானில், கொரியாவில், தாய்லாந்தில், தைவானில் பார்த்த புத்த பிக்குகள் ரொம்ப மாடர்ன். அவர்களுக்கு முக்கோல் தேவைப்படாது.


இந்து சந்நியாசிகளும் கோல் தாங்குகின்றனர். அது தத்துவத்தின் பாற்பட்டது. சர்வம் ஏகம் எனும் அத்வைத சந்நியாசிகள் ஒரு கோல், இறைவன்-அடியார் எனப்பட்டது உலகம் எனும் மாத்வ சந்நியாசிகள் இரண்டு கோல்களைத் தாங்குகின்றனர். இராமானுஜர் போன்ற விசிட்டாத்துவ சந்நியாசிகள் சித், அசித், ஈஸ்வரன் எனும் மூன்று உண்மைகளைச் சுட்ட மூன்று கோல்கள் தாங்குகின்றனர். It has no utility value and is only symbolic.

சங்கம் மருவிய காலத்தின் வரலாறு களப்பிரர் காலத்து வரலாறு. அவர்கள் சநாதன தர்மம் விட்டு பௌத்த தர்மத்தைக் காத்தனர் எனும் முக்கிய தகவல் புத்ததத்தர் நூல்களின் வழியாகத் தெரிய வருகிறது.


இறுதியாக வள்ளுவர் பேசும் எண்குணத்தான் யார்? ஆதிசிவனா? இல்லை ஆதிநாதரான புத்தரா? என விளக்குகிறார் தேமொழி. ஆய்விற்குப் பின் எழுதப்பட்ட நூல். இந்நூல் சொல்லும் கருத்துகள் ஆராயப்பட வேண்டியவை.


முக்கோர் பகவர் என்பதற்கு இவர் தரும் சிற்பச்சான்று வடநாட்டு சிற்பங்களில் மட்டும் காணக்கிடைக்கிறது. சங்ககாலச் சிற்பங்கள் என ஏதுமில்லை. இலக்கியச்சான்று மட்டுமே. பௌத்தம் தமிழ் வயப்படுத்தப்பட்டதா? எனும் கேள்விக்கு இரண்டே சான்றுகள். ஒன்று வீரசோழியம் எனும் இலக்கண நூல். மற்றது மணிமேகலை எனும் காப்பியம். பௌத்தத்தின் முக்கிய நூலான திரிபிடிகம் தமிழாக்கப்பட்டதா? எனத்தெரியவில்லை. ஆனால் அயோத்திதாசர் திருக்குறள் என்பது உண்மையில், பௌத்தம் பேசும் மூன்று உண்மைகளைச் சொல்லும் திரிக்குறள் என்கிறார். பெரபடூர் (இந்தோனீசியா) கோயிலின் அமைப்பு இந்த திரிபிடிகம், திருக்குறள் சொல்லும் தத்துவங்களே என்பார் மலேசிய நண்பர் அரங்கண்ணல். (இது குறித்து அவரொரு வீடியோ வெளியிட்டுள்ளார்). ஆசைப்படுவோருக்கு துடுப்பு கிடைக்கும்). உலகமெல்லாம் பௌத்தக்குறியீடாக பிரபலமான தாமரைச் சூத்திரம் தமிழில் இன்னும் கிடைக்கவில்லை. பாலி மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.


எண்குணத்தான் யார்? எனும் கேள்வியைக் கேட்டு விடை தேடுகிறார் இறுதி அத்தியாயத்தில். எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய எளிய நூல் இது. இதன் மின் வடிவில் படங்கள் கலரில் இருக்கும் என நம்புகிறேன்.


இப்புத்தகம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு. தேவைப்படுவோர் mythforg@gmail.com எனும்முகவரிக்கு எழுதிப் பெறவும்.

Monday, May 15, 2023

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை

 


சிந்து சமவெளித் தமிழர்கள் தெற்கே இடம்பெயர்வு செய்த காலையில் புத்த நெறி தமிழக மக்களால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு கிமு 300 தொடங்கி கிபி 12 நூற்றாண்டுவரை கோலோட்சிக் கொண்டிருந்தது. அதன் பின் மெல்ல, மெல்ல மறையத் தொடங்கியது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களும் புத்த, சமணக் காப்பியங்களே. உலகின் முதல் கட்டமைக்கபட்ட missionary religion சமயம் என்றால் அது புத்தநெறிதான். வடக்கே கிமு 500 வாக்கில் உருவாகிய இம்மதம் மெல்ல மெல்ல இந்தியாவெங்கும் பரவி தமிழகம் வழியாக இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனீசியா, சீனா, கொரியா, ஜப்பான் என்று பரவுகிறது. உலக பௌத்த பரவலுக்கு தமிழகம் பெரும் பங்களித்துள்ளது. ஜென் பௌத்தம் எனும் ஒரு அறிவுடை நெறியை உலகிற்குத் தந்தது தமிழகம். பல பல்கலைக்கழங்கள் இருந்த இடம் இத்தமிழ்பூமி. 

தியாகனூர் பகுதியில் எங்கு தேடினாலும் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. பௌத்தம் பின்னால் வைணவத்துடன் இணைந்து விட்டதற்கான ஆதாரங்களும் அப்பகுதியில் கிடைக்கின்றன. சமத்துவம், சகோதர தத்துவம், மானுட நல்லிணக்கம் இவைகளை போதித்த புத்த நெறி 12 ம் நூற்றாண்டிற்குப் பிறகு காணாமல் போய்விடுகிறது. புழக்கத்தில் இல்லையெனினும் அது போதித்த நன்னெறிகள் இம்மண்ணில் இன்றளவும் தமிழ்ப் பண்பாடாக வாழ்ந்து வருகிறது. அதற்கு புத்துயிர் கொடுத்து மக்களிடமிருந்து புத்த சங்கத்திற்கு மாற்றும் பெருவிழா தியாகனூரில் நடந்தது. முக்கோல் என்பதை அடையாளமாக மக்கள் புத்த பிக்குகளிடம் கொடுத்து சங்க பரிபாலனம் செய்வித்தனர். புதுமையான இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடும் தமிழகத்தில் பௌத்தம் எனும் நூல் வெளியீடும் அடங்கும். 

பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்.

-நா.கண்ணன்











Sunday, May 14, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் வெளியீடு



"தமிழகத்தில் பௌத்தம்" தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு) -  இன்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின்  பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  மாண்புமிகு டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது.







தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு கிராமமும் வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருக்கின்றன. 

தியாகனூருக்கு 2 நாட்களுக்கு முன் சென்ற போது அங்குள்ள இரண்டு 12ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பங்களைப் பார்த்து அதிசயித்தேன். அருமையான சிற்பங்கள்.  சிறு கோயில் தான் என்றாலும் உள்ளே இருந்த சிற்பங்கள் வரலாற்றை நமக்கு உணர்த்துகின்றன.

அதே ஊரில் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயில். ஆண்டாள் சன்னிதி, பத்மாவதி தாயார் சன்னிதி, பெருமாள் சிலை.. அனைத்தும் பிற்கால பாண்டியர், சோழர், நாயக்கர் காலத்தில் வளர்ச்சியுற்றிருக்கின்றன.     

இதன் தெப்பக்குளம் சிறப்பு.

அருகே ஸ்ரீகாமனாதீஸ்வரர் கோயில். மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நந்தியின் சிற்பம், ஏனைய சன்னிதிகள்.. அனைத்திலும்  பிற்கால கல்வெட்டுகள்.. ஆறகளூர் என்ற ஊரின் பெயரோடு கூடிய கல்வெட்டு என அனைத்துமே வரலாற்றுச் சிறப்புகள்.

இந்த சிற்றூரின் பல பகுதிகளில் நாட்டார் வழிபாடுகளைக் கொண்டாடும் வகையில் ஆங்காங்கே நாட்டார் வழிபாட்டுக் கோயில்கள். ஏழுகன்னிமார் வழிபாடு, வீரர் வழிபாடு, குதிரை, நாய் சுடுமண் பொம்மைகள் என அனைத்துமே மக்களின் பக்திக்கு ஊற்று.

ஒரு கிராமமே இப்படி பல வகையான சமய வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இன்னும் தேடிச் சென்றால் சில தேவாலயங்கள்.. மசூதிகள்.. இப்படி.

இவற்றோடு தென்னை, பனை, நெல்வயல்கள்.. பருத்தி வயல்.. எள்.. கரும்பு, உளுந்து வயல்கள்.  

பறவைகள் மகிழ்ந்திருக்கின்றன. 

இயற்கை கொஞ்சி விளையாடும் ஒரு கிராமம் தியாகனூர்.

வரலாறு சமயங்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது இத்தமிழ் நிலத்தில். மக்கள் தான் இவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற காவலர்களாகத் திகழ்கின்றனர். 

அன்பை வளர்ப்பதுதானே சமயங்களின் நோக்கம்?  அன்பை மட்டுமே உங்கள்  சிந்தனைகளிலும் செயல்களிலும்  எழுத்துக்களிலும் வெளிப்படுத்துங்கள் நண்பர்களே.  உங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கட்டும். 

-சுபா

16.5.2023

முனைவர் க.சுபாஷிணி 

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


Tuesday, December 27, 2022

புஷ்பவனம் புத்தர் சிலை

 


விழுதுகள் வேரூன்றி அடர்ந்து படர்ந்த ஆலமரத்தின் அருகே..

 4 1/2 அடி உயரத்தில் மண்ணுள் புதை உண்டு திறந்த புத்தர் சிலையை நீட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அங்கு சென்று வந்த போது மாலை அணிவித்து இந்த புத்தர் சிலையை பற்றிய ஒரு சிறிய காணொளி ஆவணப் பதிவும் செய்து வந்தோம்.








Tuesday, November 29, 2022

திசைக்கூடல் 312: சோழ நாட்டில் புத்தர் சிலைகள்

சோழ நாட்டில் புத்தர் சிலைகள் —  முனைவர் பா.ஜம்புலிங்கம்



Wednesday, November 2, 2022

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3



முனைவர் க.சுபாஷிணி


புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி


வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

இந்த நூலில்  மூன்றாம் அத்தியாயம் சங்க காலத்து தமிழ் நிலத்து மன்னர்களைப் பற்றியும், அவர்களின் அரசு, ஆட்சி மற்றும் சமூகம் பற்றிய சங்கப்பாடல்கள் தரும் சான்றுகள் சிலவற்றோடு தொடங்குகிறது. 


சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஆட்சி செய்த கொங்கர், கோசர், வேளிர் போன்ற சிற்றரசர்கள், சிற்றூர் தலைவர்கள் பற்றிய சங்கப் பாடல் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊர் தலைவர்களாக இருந்தவர்களும் புலவர்களாக   கவி பாடியிருக்கின்றனர் என்ற செய்தியும், கல்வியாளர்களாக ஆட்சியாளர்கள் இருந்த செய்தியையும் இப்பகுதி விளக்குகிறது.


வணிகர்கள் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் பேணியவர்களாக இருந்த செய்திகள்; கடல் கடந்து சென்று வணிகம் செய்து வந்த செய்திகள்; தூர நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த அயல் நாட்டினர் உள்ளூர் வணிகர்களுடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் வணிகப் பொருட்கள் பற்றி சங்கப்பாடல்கள் கூறுகின்ற செய்திகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

கல்வி வளர்ச்சியும், வளமான சமூகச் சூழலும், சிறந்த வணிகச் சூழலும் இருந்த காலகட்டத்தில் ஆரியர்களின் தென்னாட்டிற்கான வருகை மிகப் பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகள் நடத்துகின்ற மரபினர் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து மன்னர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இதன் காரணத்தால் மன்னர்களும் வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகளில் ஈடுபாடு கொண்டு அந்தணர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் வழங்கத் தொடங்கிய சமூக மாற்றமும் தொடங்கியது. அந்தணர்கள் அரசு நிர்வாகத்துறையில் புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சடங்குகள் நிறைந்த மதக் கோட்பாட்டை ஆதரித்துத் தங்கள் ஆட்சியில் மாற்றத்தைப் புகுத்தினர் என்று விளக்குகிறார் நூலாசிரியர்.


இத்தகைய சூழலில், சங்க கால மன்னர்களுக்குத் தாங்கள் வழங்கி வந்த ஆதரவை வணிகர்கள் விலக்கிக் கொள்ள நேர்ந்தமையே களப்பிரர் கால ஆட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்கக் காரணமாக அமைந்தது  என்பதாக இந்த அத்தியாயம் நமக்குச் சங்கம் மருவிய காலத்திற்கான காரணத்தை விளக்குகிறது.


இதன் தொடர்ச்சியாக அமைகின்ற நூலின் நான்காவது பகுதி களப்பிரர் கால அரசமைப்பு  பற்றிய செய்திகளை விளக்குவதாக அமைகின்றது.


வரலாற்று ஆய்வறிஞர்களுக்குக்   களப்பிரர் கால சமூக சூழலை அறிந்து கொள்வதற்கு தேவையான சான்றுகள் கிடைக்கவில்லையே என்ற ஒரு குறை மிக நீண்ட காலமாக இருந்தது.   இதற்கு நூலாசிரியர் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தரியும் செயல் முறையை பயன்படுத்தும் வகையைச் சுட்டிக்காட்டுகிறார்.

சிறு மன்னர்களும், வேளிர்களும், வணிகத் தலைவர்களும் சங்க கால அரசர்கள் வேத கேள்வியை அடிப்படையாகக் கொண்ட அந்தணர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை ஆதரிக்க தொடங்கிய பின்னர் இயல்பாகவே தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டு களப்பிரர்க்கு ஆதரவளித்து அவர்களின் அரசு தமிழகத்தில் அமைய காரணமாகியது என்ற காரணத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பூலாங்குறிச்சி கல்வெட்டும் கரூர் கல்வெட்டும் களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கின்ற முக்கியச் சான்றுகளாக அமைகின்றன. இதில் குறிப்பாக கரூர் கல்வெட்டு ஐம்பெருங்குழு, சங்கம் போன்ற முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிற ஒரு கல்வெட்டாக அமைகிறது. சங்கம் என்பது பௌத்த அறிஞர்களும், சமண அறிஞர்களும் தங்கள் சமயப் பணியை ஆற்ற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பு என்பதோடு ஐம்பெரும் குழுக்கள் என்ற வணிகக் குழுக்கள் நிர்வாகத்தை நடத்துகின்ற பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்த செய்திகளையும்  அறிய முடிகின்றது.


பூலாங்குறிச்சி கல்வெட்டு, முக்கியமாக மூன்று பௌத்த ஆலயங்கள் இருந்த செய்தியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பௌத்த கோயில்கள் ஏரியின் கண்மாயை ஒட்டியவாறு அமைந்தது என்றும், தேவகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும், இது பற்றிய கல்வெட்டை உருவாக்கிய போது மன்னர் இந்த ஆணையை வெளியிட,  அறிஞர் குழு இதனை ஓலையில் எழுதி சரி பார்த்து பின்னர் இது கல்வெட்டில் செதுக்கப்பட்டது என்ற செய்தியையும் நாம் அறிய முடிகிறது.  இந்த தேவகுலம் என குறிப்பிடப்படும் கோயில் அமைப்பானது சிறந்த நிர்வாக மையமாகவும் இருந்தது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.


இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இங்கு முக்கியமாக குறிப்பிடப்படும் கரூர் கல்வெட்டு இப்போது தொலைந்து போய்விட்டது என்ற செய்தி. அது ஒரு சிறு பாறையாக இருந்ததாலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்ததாகவும், அதனைப் பற்றிய செய்தியை அறிந்து அது பதியப்பட்ட பின்னரும் கூட பாதுகாப்பு 

ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் சாலை விரிவாக்கத்தின் போது அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ அது சிதைந்து உடைந்து காணாமல் போய்விட்டது.  ஐம்பெரும் குழுவான வணிகக் குழுவைப் பற்றி கூறுகின்ற இந்த மிக முக்கியம் வாய்ந்த கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இன்று நாம் தொலைத்த ஒரு வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.


இந்த ஒரு கல்வெட்டு மட்டுமல்ல; நமது அக்கறையின்மை காரணத்தினாலும் வரலாற்றுச் சான்றுகளை மதிக்க தெரியாத மூடத்தனத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் இழந்தவை ஏராளம். 


இழந்து கொண்டிருப்பதும் ஏராளம்!

தொடர்கிறது..!


-சுபா

--------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி

வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்