இந்தியக் குடியுரிமையைக் கன்சுலேட்டில் கடாசிவிட்டு ஐரோப்பிய நாடு ஒன்றின் குடியுரிமையை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் பாரத தேச பக்தர்கள் என்று - இன்றைய வரையறைப்படி - அறியப்படும் கூட்டத்தில் உள்ள ஒருவருடன் சென்ற வருடம் ஓர் இரவுப் பொழுதில் உரையாடிக் கொண்டிருக்க நேர்ந்தது. “பாரதத்தில் இருந்தது இருப்பது ஒரே கலாச்சாரம்தான் ஒரே மதம்தான், மற்றதெல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் கொண்டுவந்ததுதான், இல்லையென்று நீங்கள் சொன்னால் அதை எனக்கு புரிய வையுங்கள். புரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று காவிபடிந்த வெள்ளை மனதுடன் என்னுடன் ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார்.
பௌத்தம் என்று ஒரு மதம் பாரத தேசமெங்கும் இருந்ததே அது தெரியுமா என்றேன். “ஆமாம், இன்று ஜக்கி வாசுதேவ் போல புத்தர் அன்றைய பாரதத்தில் மக்களுக்கு நல்வழியை போதித்துக் கொண்டிருந்தார். அதனாலென்ன?” என்றார். இனிமேல் ஜக்கியைப் பற்றி இவரிடம் பேசுவதா அல்லது புத்தரைப் பற்றிப் பேசுவதா என்று டாபிக்கை அவர் அலைக்கழிக்க வைத்தது தெரிந்தது. (வாழ்க்கையில் நேராகப் பேசும் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள். ஆனால் இந்த உவமைகளை நடுவில் போட்டுப் பேசுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அது ஆம்வே வியாபார டெக்னிக்.) அசோகர், மணிமேகலை, அமராவதி, அழகர் கோவில், அகழாராய்ச்சி என்றெல்லாம் பௌத்தம் பற்றி இரண்டு மூன்று கியர்களை மாற்ற ஆரம்பித்தேன். உடனே இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா ஹாண்ட் ப்ரேக் போட ஆரம்பித்தார். கரடுமுரடான சில புத்தகங்களைச் சொன்னேன். உடனே அந்த புத்தகங்களுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று ரிவர்ஸ் கியர் போட ஆரம்பித்துவிட்டார். சரி, இனி இவரிடம் ஆடு புழுக்கை போடுகிறது என்று சொன்னால் கூட அதற்கு ஆதாரம் கேட்பார் என்று ஒதுங்கிக் கொண்டு வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்து கிளாஸைக் கவுத்திவிட்டேன்.
இந்தியாவில் பௌத்தம் பற்றிய விவரங்கள் ஆன்ட்ராய்ட் போனில் எடுத்த போட்டோக்கள் ஐபோனுக்கு மாறியதும் டவுன்லோட் செய்யப்படாமல் விடப்பட்டது போல எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டது. இதில் தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏசுநாதரைத் தெரிந்த அளவுக்குக் கூட புத்தரை இன்றைய தமிழர்களுக்குத் தெரிந்திருக்காது. உன் மூதாதையர் என் மூதாதையர் என்று பெரும்பாலானோர் புத்தமதத்தைத் தழுவியிருந்த நாடு தமிழ்நாடு. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. அப்படியா என்று நீங்கள் வாயைப் பிளந்தால் உங்கள் வாய்க்குள் செருகப்பட வேண்டிய புத்தகம் முனைவர் தேமொழி எழுதிய ‘தமிழகத்தில் பௌத்தம்’ என்ற புத்தகம். நூறு பக்க புத்தகத்தில் ஐம்பது பக்கங்கள் இதற்கான ஆதாரங்கள்தான்.
இப்படித் தமிழகத்தில் பல ஆயிரம் மடங்கள், கோவில்கள் என்று தழைத்தோங்கியிருந்த பௌத்த மதம் ஏன் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்று நீங்கள் கேட்டால் அதற்குப் பதில் ‘இல்லை’. பௌத்தம் இன்றும் நீக்கமற தமிழ்நாடு முழுவதும் நிரம்பியிருக்கிறது, வேறு வேறு வடிவங்களில். ஆயிரமாண்டு மதம் காணாமல் போக முடியாது.
தெற்காசியா முழுவதும் கடல் வழியாக பௌத்தம் பரவியிருக்கிறது. வட இந்தியாவில் கடல் கிடையாது. பௌத்தத்தைத் தெற்காசியாவெங்கும் பரப்பியவர்கள் கடல் கடந்து சென்ற தமிழர்கள். புத்ததத்தர் என்ற தமிழர் பாலி மொழியில் எழுதிய பௌத்த நூற்கள் இன்றும் மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வாழ்கின்றன.
முனைவர் தேமொழி தமிழகத்தில் இன்றும் முனீஸ்வரர்களாக, ‘பூத’ என்ற ஊர்ப்பெயர்களாக, பல கோவில்களில் இன்றும் மதம் மாற்றப்பட்ட சிலைகளாக வாழும் புத்தரின் ஆதாரங்களைத் தொகுத்ததுடன் மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்களில் வரும் முக்கோற்பகவர், அந்தணர், திருக்குறளில் வரும் எண்குணத்தான் போன்ற புத்தத் தொடர்புகளை ஆப்கானிஸ்தான், கனிஷ்கர் வரைச் சென்று நம் கபாலங்களைப் பிளந்து உண்மைகளை உள்ளே வைக்கிறார்.
தேமொழியின் புத்தகத்தை வாசித்ததும் எனக்கு உடனே தோன்றியது இதுதான். தலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள். நாம் அவர் ஆன்மாவை உடைத்து வைத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் சிதறிக் கிடக்கிறார்.
புத்தகத்தை வாசிக்க ஆர்வமிருந்தால்…
Arul Mervin
https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham
No comments:
Post a Comment