Thursday, April 7, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 6


வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்குக் கிழக்காசியா மற்றும் தூர கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் வரலாறு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அடங்கவில்லை. உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக, கிழக்காசிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த, இருக்கின்ற தொடர்புகள் என்பவை மிக முக்கியமானவை.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பௌத்த விகாரைகளைப் பற்றி சில பதிவுகளைக் கடந்த சில நாட்கள் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தேன். இணையத்தில் மேலும் தேடியபோது கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலும் சில செய்திகள் கிட்டின.
இன்று கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைந்துள்ளது. ஆயினும் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும்போது தாய்லாந்து, அதாவது பண்டைய சயாம் நாட்டுடன் நீண்ட தொடர்பு கொண்ட நிலப்பகுதியாக அமைந்தது என்று கூற வேண்டும்.

இப்பகுதியில் ஆட்சி அமைத்திருந்த பண்டைய பேரரசனான பூஃனான், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் ஆகும். இவற்றின் காலம் கிபி 11 வரை எனக் கூறலாம். இதன் பின்னர் ராஜேந்திர சோழனின் படை எடுப்பு இப்பகுதியில் நிகழ்ந்த பின்னர் மலாய் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். 

 அரேபிய இஸ்லாமிய வணிகர்களின் வருகை இப்பகுதியில் படிப்படியாக இஸ்லாமிய மதம் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கிபி 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்பகுதி தொடக்கம், மலாக்கா, தீபகற்ப மலேசியா ஆகிய பகுதிகள் முழுமையாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய வகையில் இஸ்லாமிய நாடாக சமய அடிப்படையில் மாற்றம் பெற்றது.

இத்தகைய சமய பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த போதிலும் கூட கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்க்கும் உள்ள தொடர்பு என்பது இன்றும் தொடர்கின்றது. கெடா மாநிலத்தின் ஒரு பகுதி தாய்லாந்தில் எல்லையாகவும் அமைகிறது.
1909ஆம் ஆண்டு Anglo-Siam Treaty அடிப்படையில் இன்று நாம் காண்கின்ற பிரித்தானிய மலாயாவிற்கும் தாய்லாந்து நாட்டிற்குமான எல்லை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.  Satun பகுதி மலையாவிற்கும், Patani பகுதி சயாம் நாட்டிற்கும் எனப் பிரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் வாழ்ந்த சயாமிய மக்கள் தனித்துவத்துடன் கூடிய பண்பாட்டு கூறுகளைக் கொண்டவர்களாகத் தொடர்கின்றனர். 

இன்றும்கூட தாய்மொழியை(தாய்லாந்து மொழி) இப்பகுதி மக்கள் ஓரளவிற்கு இயல்பாகப் பேசுகின்றனர். தாய் மொழியைப் பேசுகின்ற இம்மக்களை சாம்சாம்ஸ் (The Samsams) என்று அழைக்கின்றனர். இவர்களில் சிலர் இஸ்லாமியர்களாகவும் பெரும்பான்மையோர் பௌத்தத்தைதா தொடர்ந்து சமயமாகக் கொண்டிருப்பவர்களாகவும் அதிலும் குறிப்பாகத் தேரவாத பௌத்தத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகின்றனர். இந்த சாம்சாம்ஸ் இனத்தவர்கள் பற்றிய எண்ணிக்கை தகவல்கள் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

The Siamese  in Kedah under nation state making (Keiko Kuruda, Kagoshima University) என்ற கட்டுரை 1892 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அன்றைய கெடா மாநில சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களது கடிதங்களின் வழி பென்டாங் பகுதியில் 13 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் அதில் வாட் லம்டின் விகாரையில் மட்டும் 22 பௌத்த பிக்குகள் பதிவு செய்திருந்தார்கள் என்ற தகவலையும் வழங்குகிறது.

இதே கட்டுரை 1974-ஆம் ஆண்டு அறிக்கையின்படி கெடா மாநிலத்தில் மட்டுமே 26 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் 27 கிராமங்கள் இருந்ததாகவும், அதில் ஏறக்குறைய 3500 குடும்பத்தினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
கெடா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பவுத்த விகாரைகள் இன்று புதிய கட்டிடங்களில் அழகுறத் திகழ்கின்றன. ஆனால் இவை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இவை. பண்டைய பேரரசுகளின் அரச சமயமாக பௌத்தம் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட விகாரைகளின் எச்சத்தின் தொடர்ச்சி. பழைய கட்டுமானப் பகுதி சிதலம் அடையும்போது புதிய கட்டுமானங்களை உருவாக்கி வழிபாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

கெடா மாநிலத்து சயாம் பௌத்த பின்னணி கொண்ட மக்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்திலும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முக்கிய ஆண்டு விழாக்கள், பண்டிகைகள் நிகழும்போது பினாங்கிலிருந்து பெருவாரியாக மக்கள் வழிபாட்டிற்கு வருகிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

-சுபா
7.4.2022



No comments:

Post a Comment