Sunday, October 30, 2022

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2



புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2

க.சுபாஷிணி


நூலாசிரியர்: ஆ.பத்மாவதி


வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

நேற்று நூல் பற்றிய பொதுவான தகவல்களை வழங்கியிருந்தேன். இனி தொடர்ந்து அதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறு அறிமுகமாகக் காண்போம்.

இந்த நூலின் முதல் அத்தியாயம் களப்பிரர் என்பவர் யார்? அவர்கள் ஆட்சி செய்த காலம், களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் போன்ற தரவுகள்  எத்தகைய மூலச்சான்றுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவல்களை வழங்குகின்றது. அந்த வகையில், இன்றைக்கு இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் களப்பிரர் பற்றிய  மூலச் சான்றுகளுள் மிகப் பழமையானதாக, புத்ததத்தர் என்ற பௌத்த தேரர் எழுதிய வினய விநிச்சயம் என்ற நூலையும், பூலாங்குறிச்சி கல்வெட்டையும் நூலாசிரியர் முனைவர். ஆ.பத்மாவதி குறிப்பிடுகின்றார்.


பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் என்பன  இன்றைய தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள,  திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன.  இக்கல்வெட்டுகள் 1979ஆம் ஆண்டில்  கல்வெட்டு ஆய்வாளர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் அவர்களால் கண்டறியப்பட்டன. களப்பிர மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களது ஆட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் போன்றவை பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் வழங்குகின்றன. 


பாண்டியர் காலத்து வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புறச் செப்பேடு கூறும் களப்பிரர் பற்றிய செய்திகள், பல்லவர் காலத்து முப்பது செப்பேடுகள், சாளுக்கியர் காலத்து செப்பேடுகள் போன்றவற்றையும், இலக்கியச் சான்றுகளாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறும் மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார் புராணங்களோடு வருகின்ற சில செய்திகளையும், கல்லாடம், யாப்பெருங்கலும் போன்ற இலக்கியங்களையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.


இத்தகைய மூலச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் களப்பிரர்கள் இன்றைய கர்நாடக பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், பாண்டிய மன்னர்களால் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை மீட்டவர்கள் என்ற செய்தியையும், சேர சோழ பாண்டிய மன்னர்களை வென்று அவர்களுடைய சின்னங்களை தமது சின்னங்களாகக் கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் பௌத்த, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் களப்பிரர் கால நிலையின் அடிப்படையை நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.


இந்த நூலின் இரண்டாவது அத்தியாயம் களப்பிரர் காலம் பற்றியும், களப்பிரர்கள் பற்றியும், அவர்களது பூர்வீகம் பற்றியும் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் எழுதிய கருத்துக்களை ஆய்வு செய்வதாக அமைகிறது.


தமிழக வரலாற்று ஆய்வறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார், மு. ராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமி. க.ப. அறவாணன், பி. ஜி. எல். சுவாமி, சி.மீனாட்சி, இரா. பன்னீர்செல்வம்,   மா. இராசமாணிக்கனார், பா. மாசிலாமணி, ந. சுப்பிரமணியன், கிருஷ்ணசாமி ஐயங்கார், கே. கே. பிள்ளை, நடன காசிநாதன், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் இன்னும் சில ஆய்வாளர்களின் நூல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை அலசும் வகையில் இந்த அத்தியாயத்தை நூலாசிரியர் ஆ.பத்மாவதி அமைத்திருக்கின்றார்.


வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தவர்கள் என்பதையும், இவர்கள் இன்றைய கர்நாடகத்தைச் சேர்ந்த கோலாரில் உள்ள நந்தி மலை பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பதையும், ஆய்வாளர் க.ப.அறவாணன் களப்பிரர்கள் தமிழர்களே என்றும், அவர்கள் பிராமணர்களையும் பிராமணர்களின் யாகங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் என்று  கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆய்வாளர் மா. ராஜமாணிக்கனார், ’தமிழக வரலாறு’ என்னும் தனது நூலில் களப்பிறர் ஆட்சி செய்த காலம் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த காலமாகியதால் அதாவது கிபி 300 இருந்து கிபி 575 வரை, ’தமிழகத்து வரலாற்றின் இருண்டு காலம்’ எனக் கூறுவதையும் குறிப்பிடுகின்றார். 


இதற்கு பதிலளிக்கும் வகையில் பொற்கோ அவர்கள்,  ’களப்பிரர் தமிழர் அல்லர் என்றும் அவர்கள் காலம் இருண்ட காலம் என்று கூறுவதும் சரியல்ல. களப்பிரர் காலம் தமிழர் ஆட்சி செய்த காலம்தான்; ஒளியுள்ள காலம் தான்; அது பதினென்கீழ்கணக்கு போன்ற நூல்கள் தோன்றிய காலம்  தான்’,  என்று கூறுவதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். 


களப்பிரர்கள் தமிழர்கள் தானா அல்லது வேங்கடத்திற்கும் இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த வடுகர்களா அல்லது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது முத்தரையர்கள் என குறிப்பிடப்படுபவர்களா என்ற பல்வேறு கருத்துக்களும் இந்த அத்தியாயத்தில் அலசப்படுகிறன.

நூலாசிரியர் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள ஏராளமான நூல்கள், வரலாற்று ஆய்வாலர்களுக்குத் தமிழக வரலாற்றின் பல்வேறு பார்வைகளை வழங்கக்கூடியவை.  

தொடரும்..!


-சுபா

--------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி

வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


Saturday, October 29, 2022

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் திறனாய்வு - 1



-முனைவர் க.சுபாஷிணி


களப்பிரர் காலம் இருண்ட காலம் எனத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் நீண்ட காலமாகக் கூறி வருவதை நாம் வாசித்தும் கேட்டும் அறிந்துள்ளோம். நான் மலேசிய சூழலில் தமிழ் மொழி பற்றிய வரலாறு, தமிழக வரலாறு என வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கூட கிபி 2ஆம் நூற்றாண்டு அதாவது, சங்கம் மருவிய காலம் முதல் பல்லவர் காலம் வரை இருண்ட காலம் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதை  அப்போது தமிழ் கற்றபோது படித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

களப்பிரர் காலம் என்பது இருண்டு காலம் என்றால் அது யாருக்கு இருண்ட காலம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது; ஆயினும் பெரும்பாலும் இதனை நாம் யோசிப்பதில்லை. இந்த கேள்வியை எழுப்ப வேண்டியதும் ஆராய வேண்டியதும் அவசியம் அல்லவா? 


சேர, சோழ, பாண்டியர், பல்லவர், நாயக்கர் கால வரலாற்றை அறிந்து கொள்ள இன்று நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் அல்லது ஏதாவது தொல்லியல் தடயங்கள், களப்பிரர் வரலாறு கூறும் வகையில் கிடைக்குமா என்பது பல வரலாற்று ஆசிரியர்களுக்கு இருந்த ஒரு ஏக்கமாகவும் இருந்தது எனலாம். களப்பிரர் காலம் பற்றி விவரிக்கும் ஆய்வு நூல்கள் சில வெளிவந்துள்ளன. அவை களப்பிரர் பற்றிய சில தகவல்களை வழங்கினாலும் ஓரிரு நூல்கள் பொருந்தாத பல தகவல்களை வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கின என்பதை மறுக்க முடியாது. 


இத்தகைய சூழலில், முழுமையான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பணி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளை நிகழ்த்தி வரும் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் எழுதி, மிக நீண்ட காலமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு  செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் ’புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற இந்த நூல்.


2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது  நானும் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவும் அமர்வுகளுக்குத் தலைமையேற்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்தச் சூழலில் முனைவர். பத்மாவதி அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்தக் களப்பிரர் கால ஆய்வுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் அவருக்கே உரித்தான எக்ஸைட்மண்ட் குறையாமலும் 🙂 என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.  


அதற்கு மறு ஆண்டு சென்னையில் மீண்டும் சந்தித்த போது  அவரை விளக்கச் சொல்லி களப்பிரர் கால வரலாறு பற்றிய  சில ஒலிப்பதிவுகளைச் செய்திருந்தேன். அப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ‘மன்ணின் குரல்’ வெளியீடாக அப்போது வெளியீடு செய்திருந்தேன்.  http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

2021ஆம் ஆண்டு இறுதியில் அவரது ஆய்வு நூல் வடிவில் வெளிவந்தது.  களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையை வழங்கும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது.


இந்த நூலின் அத்தியாயங்கள் பேசும் சில செய்திகளைச் சிறு பதிவுகளாக அடுத்த சில நாட்களுக்கு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யலாம் எனக் கருதுகிறேன்.  

இதுவரை இந்த நூலை வாங்கவில்லை என்றால் இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்!

தொடரும்..!

--------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி

வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


-சுபா


Sunday, October 2, 2022

புழல் நகர் புதிய பௌத்த விகாரை அடிக்கல் நாட்டு விழா



சென்னை புழல் நகரில் இன்று ஒரு புதிய பௌத்த விகாரையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த திரு கௌதம் சன்னாவுடன் சென்றிருந்தபோது இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திரு கௌதம சன்னா இந்த தாய்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பௌத்த சிலையைத் திறந்து வைத்தார்.

தாய்லாந்தில் இருந்து வந்திருந்த பௌத்தப்பிக்குகள் இருவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமின்றி தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பௌத்தர் சிலை அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியில் வைக்கப்பட உள்ளது. சென்னை புழல் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு புத்தபிரானுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து வந்த பௌத்தப்பிக்குகள் பாலி மொழியில் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்தனர்.
இன்றைய காலைப் பொழுது இனியதொரு அனுபவமாக அமைந்தது.
-சுபா
2.10.222