மலேசியா கெடா மாநிலத்தில் சிக் மற்றும் ஜெனியாங் பகுதியில் மட்டுமே ஏறக்குறைய 12 க்கும் மேற்பட்ட பவுத்த விகாரைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய செய்தியைக் கடந்த வாரம் நான் அங்கு நேரில் சென்றிருந்தபோது பார்த்து பதிவு செய்திருந்தேன். அதில் அடுத்ததாக நான் விவரிக்கவிருப்பது வாட் புக்கிட் பேராக் ( Wat Bukit Perak / Samnak Ratchakhiri) என அழைக்கப்படும் ஒரு பவுத்த விகாரையாகும்.
இப்பகுதியில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம் இப்பகுதி மலைப்பாங்கான ஒரு பகுதிதான். சாலையை ஒட்டியவாறு 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த பௌத்த விகாரை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
தாய்லாந்து வகை பவுத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த பௌத்த விகாரை. இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் தாய்லாந்து மட்டுமன்றி குறிப்பாகக் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் வசிக்கின்ற சீன மக்கள் என்று அங்கு பேசிய போது அறிந்து கொண்டேன்.
வளாகம் அமைந்திருப்பது காட்டுப் பகுதி என்றாலும் சீர்படுத்தி தோட்டங்கள் உருவாக்கி அதற்குள் ஆங்காங்கே சிறிய சிறிய சன்னதி போல பௌத்த விகாரைகளை அமைத்திருக்கின்றார்கள்.
சாய்ந்து உறங்கும் நிலையில் அமைந்த புத்தரின் சிலை மற்றும் ஒரு சிறிய கோயிலில் தாரா தேவியின் சீன வடிவ சிற்பம், ஆங்காங்கே புத்தரின் சிற்பம் மற்றும் நின்ற நிலையில் அமைந்திருக்கும் சிற்பங்கள் இங்கு அமைத்திருக்கின்றார்கள்.
உள்ளே பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் அமர்ந்து தியானம் செய்யும் வகையிலும் தியான மண்டபமும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
பௌத்த பிக்குகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
ஏனைய பௌத்த விகாரைகளில் இருப்பது போல யானை, புலி போன்ற வடிவங்களுடன் குரங்கின் சிற்பமும் இங்கே புத்தர் சிலைகளோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பௌத்த விகாரையின் முகவரி
K556, Kampung Gajah Putih, 08210 Sik, Kedah, Malaysia
-சுபா
6.4.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia
No comments:
Post a Comment