நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 2
இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம் சிங்கள சமூகத்தில் சாதி முறை பற்றி ஆராய்கிறது. பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் என்பதால் முழுமையாக பௌத்த சமூக நெறிகளை உள்வாங்கியதோ சிங்கள் பௌத்த நிலை என்றால், அது இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கின்றது. ஆக சிங்கள பௌத்தம் என்பதை அடிப்படை பௌத்த நெறிகளுள் மாற்றம் செய்து கொண்ட ஒன்றாகக் காண வேண்டியது இதனைப் புரிந்து கொள்ள அவசியமாகின்றது. இந்திய சமூகம் போன்ற சாதி அமைப்பு ஒன்று சிங்கள சமூக அமைப்பில் அடிப்படையாக இருப்பதை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.
நூலாசிரியர் ஏராளமான பல நூல்களை இந்த பகுதிக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் மிக முக்கியமாக இரண்டு நூல்கள் வழங்குகின்ற செய்திகள் இந்த அத்தியாயத்தில் மிகப்பரவலாக கையாளப்படுகின்றன. Bryce Ryan எழுதிய Cast in modern Ceylon: The Sinhalese system in transition (1953) என்ற நூல் மிக அதிகமாகவும் Richard Fick எழுதிய The social organisation in North-East in Buddhas time (1920) ஓரளவும் கையாளப்பட்டுள்ளன.
புத்தர் காலத்தில் மனு கூறிய நான்கு வருணப் பாகுபாட்டை இலங்கை சூழலில் காணவில்லை என்கிறது ரீச்சர்ட் ஃபிக் அவர்களது ஆய்வு. தொழில்முறை சார்ந்த குடிகள் அமைப்பே சிங்களவர் சூழலில் இருந்தது என்பதை இது குறிப்பிடுகிறது. இந்திய சூழலில் சங்க இலக்கிய தரவுகள் தருகின்ற குடி முறையிலான சமூக அமைப்பு போன்ற ஒரு முறையே இது எனலாம்.
சிங்கள மக்களிடையே, எவ்வகையில் சாதி என்ற கருத்தாக்கம் முதன்முதலாக தோன்றியது என்பது கண்டி மலைப்பகுதியில் ஒரு தொன்மமாக வழக்கில் உள்ளது. இதனை நூர் யால்மண் தான் எழுதிய Under the Bo tree (1971) என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தொன்மத்தின் படி சிங்கள மக்களின் புராணகால மூதாதையராக மகா சம்மாத என்பவர் இருந்ததாகவும், அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்வதற்காக பல்வேறு சாதிகளை அவர் உருவாக்கி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெயரை அவர் இட்டார் என்கிறது இந்தப் புராணக்கதை.
இந்திய சூழலில் வர்ணாசிரம அடிப்படையில் பிராமணர்கள் சாதி அடுக்கின் உயர்ந்த நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் சிங்களவர் சாதிப் படிநிலை வரிசையில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கொவிகம (விவசாய தொழில்) என்ற சாதி உயர் சாதியாக குறிப்பிடப்படுகிறது. இதே படிநிலை வரிசையை இலங்கை தமிழர் சூழலிலும் நாம் காண்கிறோம். வெள்ளாளர் அல்லது வேளாளர் என குறிப்பிடப்படும் சமூகமே இலங்கை தமிழ் சாதி வரிசையில் உயர் அந்தஸ்தைப் பெறும் சாதியாக வழக்கில் இருக்கின்றது. ஆக இது ஒரு ஒற்ருமையைப் புலப்படுத்துகிறது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்களாயினும் தமிழராயினும் விவசாயக் குடிகளே சாதி கட்டமைப்பு வரிசையில் முதலிடத்தைப் பெறுகின்றனர் என்பதே!
நூலின் இந்தப் பகுதி ஒவ்வொரு சாதி குழுவினரைப் பற்றியும் அடிப்படைத் தகவல்களை வழங்கியிருக்கின்றது. சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சாதி கட்டுமான அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள இந்த விளக்கம் நிச்சயம் உதவும் என்பதால் சிறு குறிப்பாக அவற்றை தொடர்ந்து காண்போம்.
1. கொய்கம அல்லது கொவிகம - இதன் பொருள் `நிலத்தை உழுது பயிர் செய்வோர்` என்பதாகும். . இலங்கையின் சமூக அமைப்பில் உயர் சாதியினராக கருதப்படுபவர்கள் இவர்கள். சிங்கள மக்கள் தொகையில் 1960ம் ஆண்டு கணக்கின்படி 60% இவர்கள் இருக்கின்றனர். இச் சாதிக்குள் பல கிளை சாதிகள் உள்ளன.
2. கராவ - இவர்கள் சிங்கள மீனவர்கள். ஆய்வாளர்களின் கருத்தின்படி இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள். இலங்கையில் கரையார் எனும் தமிழ் மீனவர்களை ஒத்தவர்கள் இந்தச் சாதி குழுவினர். இந்தச் சமூகத்தில் பௌத்தர்கள், கிறித்தவர்கள் என இரண்டு பிரிவு இருக்கின்றது. குறிப்பாக நீர்கொழும்பு பகுதியில் கிராம மக்கள் முழுமையாக கத்தோலிக்கர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை சத்திரியர் வம்சத்தினர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். மீன் பிடிக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
3. சலாகம - இவர்களும் தென்னிந்தியாவில் இருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் என்றும் இவர்களுக்குச் சாலியர் என்று ஒரு பெயர் ஒரு காலத்தில் இருந்தது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தென்னிந்திய சாலியர் சமூகத்தவர் போன்றே இவர்கள் கண்டி பகுதியில் நெசவாளர்களாக இருந்தனர். தொன்மையான டச்சு ஆவணங்களை ஆராயும்போது குறிப்பாக 1250ல் சீன வணிகர்களின் உதவியுடன் இவர்களின் மூதாதையர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன.
4.துராவ - இவர்கள் கள் இறக்கும் சாதியினர். கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
5. நவண்டண்ண - தமிழகத்தில் பஞ்ச கம்மாளர்கள் எனக் குறிப்பிடப்படும் சமூகத்தை ஒத்தவர்கள். சிங்கள மக்கள் பெரும்பாலும் இவர்களை `ஆசாரி` என்றே அழைக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சிங்கள மொழியில் பல தமிழ் சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைகிறது. இவர்கள் தங்களைப்பிராமண சாதியில் இருந்து தோன்றியவர்கள் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் திராவிட பஞ்ச கம்மாளர்கள் தங்களை விஸ்வகர்ம பிராமணர் என்று கூறிக் கொள்வது போல இவ்வழக்கம் தொடர்வதை உற்று நோக்க வேண்டியுள்ளது.
6. ஹண்ணாலி - சிங்கள சமூகத்தில் தையல்காரர்கள் தனி சாதியாக இடம்பற்றிருக்கின்றனர் . மன்னராட்சி காலத்தில் அரண்மனைக்குத் துணி தயாரிக்கும் பணியில் இருந்தார்கள். இன்றைய நவீன இலங்கையில் இச்சமூகத்தினர் சாதி அடையாளத்தை இழந்து இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் கண்டியில் தமிழ் பேசும் தையல்காரர்கள் நிறைந்து விட்டார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
7.ஹுணு - பாரம்பரியமாக சுண்ணாம்பு சுடும் தொழில் செய்பவர்கள். மிகச் சிறிய அளவில் இவர்கள் எண்ணிக்கை உள்ளது.
8. ஹேன- சலவைத் தொழில் செய்பவர்கள். சிங்கள மக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்தியாவில் டோபி என அழைக்கப்படும் சமூகத்தவர் போன்றவர்கள். சிங்கள சமூகத்தில் உயர்குடி சாதியினருக்குச் சலவை ஊழியம் செய்வது இவர்களுடைய பாரம்பரிய தொழில். பூப்பு இறப்பு சடங்குகளின் போது தீட்டுத் துணிகளை நீக்குவதும், திருமணத்தில் பழைய துணிகளைப் பெறுவதும் சடங்கு சம்பிரதாயங்களைக் கவனிப்பதும் இவர்களின் முக்கிய வேலை.
9.வகும்புர - வெல்லம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள். இலங்கையின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் சமூகத்தினர். வணிகம் முதலாளித்துவம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுபவர்களாக வசதி படைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
10. ஹின்னா -சாலியர் சமூகத்தினருக்கு வண்ணார் தொழில் செய்பவர்கள். பழங்காலத்தில் இவர்கள் சிங்கள சமூக அடுக்கில் மிகவும் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டனர்.
11. படஹல - சிங்கள குயவர்கள். இலங்கைத் தீவின் எல்லா பகுதிகளிலும் களிமண் கிடைப்பதால் இவர்கள் எல்லா பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.
12. பணிக்கி- தமிழகத்தில் அம்பட்டர் என வழங்கப்படும் சாதியினருக்கு ஒப்பான சமூகநிலை படைத்தவர்கள். அம்பட்டர் என்ற தமிழ் வழக்குச்சொல் சிங்கள மொழியில் `எம்பட்டியோ` என்றும் வழங்கப்படுகிறது.
13. வெள்ளி துரயி - இவர்கள் பொ.ஆ. 289 ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அனுராதபுரம் வந்தடைந்தார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது. புனித போதி மரத்தை காவல் காப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இன்றைக்கு கோயில் பணியோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வெள்ளி துரயி என்ற சமூக அடையாளத்தை கொண்டுள்ளனர். பௌத்த மதத்தின் புனித குறியீடான போதி மரத்தை காவல் செய்பவர்கள் எனும் தகுதி இவர்களுக்கு பெருமை சேர்க்கிறது.
14. பண்ண துரயி - துரயி சாதியின் ஒரு பிரிவாக இவர்கள் அமைகிறார்கள். இவர்கள் மன்னர் ஆட்சியின் போது அரச குடும்பத்துக்கு சொந்தமான குதிரை யானை போன்ற கால்நடைகளுக்கு புல் அறுத்துப் போடும் வேலை செய்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
15. பெரவா - மேளக்கருவி வாசிக்கும் சாதியினர். சிங்கள சமூகத்தில் சற்று தகுதி குறைந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். ஜோசியம் பார்த்தல் நெசவு செய்தல் சாமியாடி விடதல் போன்ற தொழில்களும் செய்கின்றனர். தமிழகத்தில் மேளக்கருவி (பறை) வாச்க்கும் பறையர் சாதியில் ஒரு பிரிவினர் நெசவுத் தொழில் செய்து வந்ததை எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்திய சாதிகளும் குடிகளும் தொகுதி 6ல் குறிப்பிடுகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
16. பட்கம் பெரவா - சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடிக்கும் சாதியின் ஒரு பிரிவினர்.
17. கொண்ட துரயி - இந்த சமூகத்தினர் பாரம்பரியமாகக் கையில் வேலேந்தி போதி மரங்களைக் காவல் காப்பவர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். மன்னர்களின் பல்லக்குகளைத் தூக்கி செல்பவர்களாக இருந்தனர்.
18. பட்கம் - கண்டிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் அடித்தள சாதியினர். உயர்சாதியினர் வீடுகளில் வேலைகளுக்கு ஈடுபடுபவர்கள். தமக்கென சொந்தமான நிலமற்றவர்கள். கூலி வேலை செய்பவர்கள்.
19. கவிக்கார - வட்டார சாதியினராக அறியப்படுபவர்கள். இச் சமூகத்துப் பெண்கள் நடன மாந்தர்களாக ஆண்கள் பாட்டு கலைஞர்களாக இருக்கின்றனர். கோயில்களில் பெண்கள் நடனம் ஆடுவதும் ஆண்கள் பாணர் தொழிலைச் செய்வது இச்சமூகத்தினர் தொழிலாக அமைகிறது.
20.ஒலீ - கோயில்களில் நடனம் ஆடுபவர்களாகவும் திருவிழாக்களில் பங்களிப்பவர்களாகவும், விழாக்களில் அசுரர்களை வதம் செய்யும் பாவனைகளைச் செய்பவர்களாகவும் உள்ளவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சாதியினர்.
21. தெய்வ கட்டர - இதனைத் தமிழ்ப் படுத்தினால் `தமிழ் புறச்சாதிகள்` என்ற பொருள் வருகிறது. இவர்கள் உடல் தோற்றம் நடை உடை பாவனையிலும் வாழ்க்கை முறையிலும் சிங்கள மக்களாகவே காணப்படுகின்றனர் என்றாலும் சிங்கள மக்கள் இவர்களைத் `தமிழ்ப்புறச்சாதிகளாக` அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையை ஆண்ட எல்லாளன் எனும் தமிழ் மன்னனின் படை வீரர்கள் `தெய்வ கட்டர` என அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு கலப்படைந்து விட்டாலும் இன்றும் தமிழச் சாதி மரபினர் என அடையாளப் படுத்தப் படுகின்றனர்.
22.பலீ - தமிழகத்தில் புதிரை வண்ணார்கள் போன்று அடித்தள சாதி சமூக மக்களின் அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் வண்ணார்களாக உள்ளனர்.
23. கஹலபெரவா- இலங்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்று. ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடித்தல், பிணம் எரித்தல், அடக்கம் செய்தல், குப்பை அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை மிக நீண்ட காலமாக சிங்கள சமூகத்தில் செய்துவரும் மரபினர்.
பொதுவாகவே சிங்கள மக்கள் மொழியின் அடிப்படையில் ஒன்றுபட்டாலும் சாதிப்பிரிவு கட்டமைப்பைச் சார்ந்தே இவர்களது சமூக அமைப்பு அமைந்திருக்கின்றது.
இந்தியாவில் உள்ளது போன்ற சாதி கட்டமைப்பு சிங்கள சமூகத்தில் ஆழமாக வேரூன்றி அமைந்திருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரம்ப காலத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த சமூகப் பிரிவுகளாக இருந்த நிலை மாறி இந்திய வர்ணாசிரம தத்துவத்தின் தாக்கத்தின் அடிப்படையில், அதனை உள்வாங்கிய வகையில் விரிவான சாதி அமைப்பைக் கொண்டதாக வளர்ச்சி கண்டு விட்டதைக் காண முடிகிறது. இலங்கை வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றான சூளவம்சம் குறிப்பிடுவதுபோல இலங்கை பௌத்த அரசு சார்ந்த நடவடிக்கைகளில் இந்திய வைதீக தொடர்புகள் இருந்தமையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.
குறிப்பு: சிங்களவர் சமூகச் சூழலை விரிவாக அறிந்தவர்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலுள்ள செய்திகளில் ஏதேனும் தவறான குறிப்புகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டலாம். இது சிங்களவர் சமூக அமைப்பை புரிந்து கொள்ள மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும்.
தொடரும்....
புகைப்படம்: அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயத்தில் உள்ள போதி மரம், கோயில்
-சுபா
No comments:
Post a Comment