காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வெளிப்புற சுற்றுச் சுவரில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்வையிட்ட போது..
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வெளிப்புற சுற்றுச் சுவரில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்வையிட்ட போது..
செய்யாறு நகரில் இன்று ஒரு புத்தர் ஆலயம் திறக்கப்பட்டது.
பேரரசர் பிம்பிசாரர் புத்தர் திருக்கோயில் மற்றும் அசோக விகார்.
இங்க புத்தர் ஆலயத்தில் உள்ள தராதேவி சிலை ( க்வான்யிங்) மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.
மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் அடிக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா புத்தர் சிலைகள் ஒவ்வொரு இடங்களிலும் அலங்கரிக்கின்றன.
அர்ஷா
உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் இன்று, காரணம் ஈழத்துப்போர் அவர்கள் சென்ற வழித்தடங்கள் மிகவும் ரத்தகரை படிந்தது. இரண்டாம் தலைமுறை தம் கால்களில் நிற்க ஆரம்பித்த பிறகுச் சற்று ஆசுவாசக் கொள்கிறோம்.
இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனா ஜப்பான், கொரியா,மீயான் மார்க், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலாய் தீவுகள், என மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி நம் முன்னோர்கள் தமிழ் மொழி பண்பாடு தாம் பின்பற்றிய மதங்களையும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
பள்ளிக்காலத்திலேயே வரலாறு பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை சேர்த்து இருந்தது. நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதும் ஆட்சி முறைகள், மன்னர்களைக் குறித்தது. அந்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதுமாக ஒருவரை வெறிகொண்டு தாக்கி கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறுகளாக இருந்தன. மேலும் அவை கற்பனை மிகுந்த புனைவுகளையும் கொண்டிருந்தது அதனால் எதை நம்புவது எதை விடுவது என்று சந்தேகத்தில் வரலாற்றுப் பதிவுகளைப் படிக்கும்போது எப்போதுமே முழுமைய நம்பிக்கை வருவதில்லை.
சோழ மன்னர்களின் ஆட்சி இலங்கை வரை நீடித்திருந்ததையும், சோழப் பேரரசு இலங்கையிலிருந்து மிகப்பெரிய செல்வங்களை அங்கிருந்து சூறையாடி வந்தார்கள் என்ற கதைகள் உண்மைதானா என்று அறியும் ஆவல் எப்போதும் எனக்கு இருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வம் கொழித்த நாடா இன்று, பசியிலும் பஞ்சத்தாலும் வாடுகிறது, அன்றைய காலத்தில் தமிழன் அங்கு இருந்திருந்தால் இன்று 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற தமிழினம் அவர்களை சந்திக்கவே இல்லையா என்று எத்தனையோ கேள்விகள் எழும்போது வரலாற்றை மீண்டும் தேடுகிறோம்.
இலங்கையின் வரலாற்று புத்தகங்களை படிக்கும் போது, அவை பல குழப்பங்களை கொண்டு வரும் சில பெயர்கள் மீண்டும் மீண்டும் வரும் ஆனால் மிக நீண்ட காலம் வித்தியாசம் இருக்கும் அப்படியானால் அவன் இருந்திருப்பான் இவன் புதியவனாக இருக்க வேண்டும் புதியவனுக்கு ஏன் அவன் பெயரை வைத்தார்கள், ஒருவனுக்கே பல பெயர்கள் இருக்கும். குழப்பங்களை தாண்டி தீர்வுகளை தேடுவது தானே வாழ்க்கை அந்த வகையில் சமீபத்தில் படித்த மிக முக்கியமான ஒரு நூலாக ராஜராஜனின் கொடையை நான் பார்க்கிறேன். முனைவர் சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கடுமையான மழையில் மூழ்கி இருந்தபோது என்னை முழுவதுமாக மூழ்கடிக்க செய்த நூல்.
பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட தகவல்கள் அத்தனையும் ஆதாரங்களோடு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பேனாவையும் டைரியும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன். எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரிக்கு வரி தகவல்கள் நிறைந்ததாகவே இருந்தது இந்த புத்தகமே ஒரு குறிப்பு தான். இந்த குறிப்பேட்டை வைத்துக்கொண்டு தேடிப் படிக்க அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன என்பதை வாசிப்பின் ஓட்டத்தில் உணர்ந்து கொண்டேன்.
ராஜராஜ சோழன் என்றால் அனைவருக்கும் ஒரு தனித்த உணர்வைத் தரும். சிலருக்கு அவன் மீது கோபம் பலருக்கு அவன் மீது காதல்.
தலைவனுக்கு உரிய சகல பண்புகள் நிறைந்த ஒருவனாக ஆட்சியும் எல்லைக்கோட்டை தமிழகம் இந்தியா என்ற வட்டத்துக்குள் வரையாமல் தன் விடாமுயற்சி நேர்த்தியான திட்டமிடலால் உலகெங்கும் பரவச் செய்த ஒருவன்.
"ராஜராஜனின் கொடை" என்ற இந்த நூலில், மொத்தம் ஒன்பது கட்டுரைகள் அவை விஜயநகர பேரரசு நாகப்பட்டினம் சூளாமணி பன்ம விகாரை சோழர் செப்பேடுகள் சோழர்களின் கடாரப் படையெடுப்பு ஆனைமங்கல செப்பேடுகளுக்கும் கடாரப்படையெடுப்புக்கும் இடையிலான விவரிப்பு, இவை தாண்டி இங்க இருக்க வேண்டிய பரபரப்பாக பேசப்பட்ட பெரிய லைய்டன் செப்பேடுகள் சிறிய லெய்டன் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி செப்பேடுகள் கூறும் தகவல்கள் வரிக்கு வரி என்னென்ன என்பது குறித்தெல்லாம் மிக விவரமாக கூறப்பட்டுள்ள நூலாக அமைந்திருக்கிறது.
நூலின் ஆசிரியர் ஆனைமங்கல செப்பேடுகள் பற்றி அறிந்ததும் அவை எங்கு இருக்கின்றன என்ற ஆராய்ச்சியில் மூன்று ஆண்டுகளாக தேடி இறுதியில் அவை நெதர்லாந்து நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக நூலகப் பிரிவினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தவுடன், அவர்கள் அனுமதியோடு நேரில் சென்று ஆனிமங்கல செப்பேடுகளை பார்வையிட்டு அதனை பல மணி நேரங்கள் செலவு செய்து குறிப்புகளாக இப்ப புத்தகத்தில் தந்துள்ளார் படிக்கும் போது ஆச்சரியமாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் பெருமை நிறைந்த தருணம் ஆகவும் இருந்தது அந்தப் பக்கங்கள். அவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆசிரியர் தொடர்ச்சியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆணைமங்கல செப்பேடுகளை தம் தாய் நாட்டுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் உடனடியாக தமிழக அரசோடு தொடர்பு கொண்டு அதனை சட்டரீதியாக எடுத்து வரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பன குறித்த தகவல்களையும் கட்டுரைகள் படிக்கும் போது புல்லரிக்கச் செய்தது உண்மை.
அன்றைய தமிழர்கள் இரண்டு காரணங்களுக்காக கடல் கடந்து பிற நாடுகளில் சென்றடையும் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். முதலாவது காரணம் தம் மதங்களை பரப்புவது, அது அன்றைய சூழ்நிலையில் பௌத்த மதமாக இருக்கலாம். இரண்டாவது முக்கிய காரணம் மிகவும் ஆளுமை நிறைந்த வணிகர்களைக் கொண்டிருந்த தமிழ்ச் சூழல், ஐரோப்பா மத்திய கிழக்காசிய நாடுகளை மட்டும் இன்றி இந்தோனேசிய நாடுகளுக்கும் மலாய் தீவுகளுக்கும் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக வணிக நிமிர்த்தமாக சரளமாக போய்வந்திருக்கிறார்கள்.
செப்பேடுகளை ஆராயும் போது, இந்த வணிகப் பயணத்திற்கு மிகவும் அதிகமாக விஜயநகர பேரரசு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பெரும்பாலமாக மையப் பகுதியாக துறைமுகங்களைக் கொண்ட நகரமாக விளங்கி இருப்பதுஅதற்கு ஒரு காரணம்.
திருகோணமலையில் இயற்கை துறைமுகத்தை கொண்ட இலங்கை இன்று எங்கனம் வணிக போக்குவரத்துக்கு முக்கிய இடமாக பங்களிப்பு செய்கிறதோ அதுபோல இது என்று புரிந்து கொள்ளலாம்.
அதேபோன்றுதான் நாகப்பட்டினம் துறைமுக நகரம் என்றே சொல்லும் அளவிற்கு மிக நீண்ட காலமாக வணிக மையமாகவும் பௌத்த சமய மையமாகும் நாகப்பட்டினம் திகழ்ந்து இருக்கிறது. நாகப்பட்டினம் கட்டுரை வழியாக அறிய முடிகின்றது அதேபோல் நூலாசிரியர் அங்கு அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பல்வேறு அகழாய்வு பொருட்கள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன அல்லது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றார்.
இந்த நூலின் முக்கிய பொருள் ஆணைமங்கல சொற்பொழிவுகள் செப்பேடுகள் என்ன கூறுகின்றன என்பதிலிருந்து தான் முக்கியம் பெரும் மற்ற விஷயங்களை ஆராகின்றார்கள்.. அந்த வகையில் சூளாமணி பன்ம விகாரை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது, பெரிய லெய்டன் செப்பேடுகளில் சூளாமணி பன்வகாரை குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது, இது மிக முக்கியமான ஆதாரங்களாக பார்க்கப்பட வேண்டியது மாமன் ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசுக்கும் சோழ பேரரசுக்கும் நட்புறவு இருந்ததையும் அதனை அவர்கள் செப்பு சாசனம் மூலம் உறுதி செய்து கொண்டதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும் அந்த பொருளை புதிதாக வாங்கிய போது கிடைத்ததை விட, ஏற்கனவே இருந்த பொருள் மீண்டும் கிடைத்தது புதிதாக எந்த வரவும் இல்லை ஆனாலும் மகிழ்ச்சி வார்த்தைக்குள் உள்ளடக்க முடியாத ஒன்றுதான் அப்படித்தான் ஆனைமங்கல செப்பேடுகள் நெதர்லாந்தில் கிடைக்கப்பெற்ற போது ஆய்வாளர்களுக்கு இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அந்த சிப்பெடுகள் நெதர்லாந்துக்குச் சென்ற பின்னணி மிகவும் சுவாரசியமான கதை. ஹெச் ஏ ஹமாகர் பற்றிய கதை.
நூலாசிரியர் செப்பேடுகளை பார்த்ததோடு தன் கடமையை முடித்துக் கொள்ளாமல் அதனை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளார் அதனையும் நூலில் காண முடிகிறது
சோழர்களின் கடாரப் படை எடுப்பின் போது சுங்க வரி செலுத்திய விபரங்கள் சோழப் பேரரசின் வணிகக் குழுவை வரவேற்று 81 ஆயிரத்து 800 பணமும் 5,200 டன் வெள்ளியும் பரிசாக அளித்தது என்ற செய்தி வாசிக்கும் போதே ஆச்சரியத்தை தந்தது.
தெற்காசிய நாடுகளில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் சிலவற்றை குறித்த விபரங்கள் புகைப்படங்களோடு எழுதப்பட்டுள்ளன அவை பெரும்பாலும் வணிக செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை ஆதாரங்களே கொண்டிருக்கின்றன என்பது நம் வணிக மேலாண்மை குறித்த பல்வேறு செய்திகளை அறிய பயன்படுகிறது
நூலில் இலங்கை ஆதி குடிமகன் யாராக இருந்திருக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது பல கேள்விகளுக்கான விடை கிடைக்கின்றது.
நூல் பல்வேறு தேடல்களுக்கான நுழைவுச்சீட்டு ஆக எழுதப்பட்டிருக்கின்றது இதனை எடுத்துக் கொண்டு நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் அரை மனநிலை சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய தேடல்களுக்கான ரூட் மேப் என்று சொல்லலாம்.
அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய முக்கியமான நூல். ஆசிரியருக்கு பேரன்புகள் பெரும் கடமைப்பட்டவர்கள் நாங்கள் உங்களுக்கு 🙏❤️
அர்ஷா ❤️
நூலாசிரியர்: க.சுபாஷிணி
பதிப்பகம்: தமிழ் மரபு ரக்கட்டளை
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நேரடி களப்பணியின் போது செய்யப்பட்ட ஆவணப் பதிவு.
ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை
சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று பாழடைந்த நிலையில் தற்சமயம் உள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் கடந்த 2022 - டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த ஆனைமங்கலம் பகுதிக்கு நேரில் சென்றிருந்த போது கோயிலின் இன்றைய நிலையை ஆவணப்படுத்த பதியப்பட்ட காணொளிப் பதிவு இது.
முனைவர் அரங்க மல்லிகா
தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் தேமொழி எழுதிய பௌத்தம் சார்ந்த ஓர் ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிறது. முனைவர் தேமொழி ஓர் ஆய்வாளராகக் காய்தல் உவத்தலின்றி இந்நூலில் புத்தர் காலத்தினுடைய குறிப்புகளை, வரலாற்றை இலக்கியம் தொடங்கி தமிழகத்தில் புத்தருடைய சிலைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு மீளாய்வு செய்திருக்கிறார். இது ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது.
முதல் இயல்— புத்தரின் திருவுருவத் தோற்றம்
இரண்டாவது இயல்— தமிழ்நாட்டுப் பௌத்தச் சிற்பங்கள்
மூன்றாவது இயல்— முக்கோற்பகவர்
நான்காவது இயல்— புத்த தத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
ஐந்தாவது இயல்— எண்குணத்தான்
ஆகிய தலைப்புகளில் பௌத்தத்தின் மீளாய்வாகத் தமிழகத்தில் புத்த தத்துவம் இருந்ததினுடைய வரலாற்றையும் வேர் அழித்ததினுடைய வரலாற்றையும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
புத்தரின் திருவுருவத் தோற்றம்:
புத்தருடைய திருவுருவத் தோற்றம் என்ற இயலானது தமிழகத்தில் எங்கெல்லாம் புத்தருடைய சிலைகள் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றை மையமாகக் கொண்டு அவர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் பௌத்தம் இருந்ததா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்து அவருடைய ஆய்வு தொடங்குகிறது. இந்தியாவில் பிறந்தாலும் கூட இலங்கை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தம் பரவி இருக்கிறது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் செப்பேடு சான்றுகளுடன் புத்தருடைய சிலைகள் மூலமாக விரிவான ஆய்வை அவர் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை பௌத்தம் தமிழகத்தில் இருந்தது என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார். மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.
உருவத் தோற்றம் என்ற ஒன்றின் மூலமாக புத்தரின் கொடை பௌத்தம் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
தொடக்கக் காலத்தில் புத்தர்கள் பற்றிய செய்திகளை அறிய சாஞ்சி ஸ்தூபியைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கட்டுரையில் நான்கு முக்கியமான விடயங்களை புத்தர் சார்ந்து எழுதுகிறார்.
1. புத்தரின் பிறப்பு; புத்தரின் பிறப்பைக் குறிக்கும் இடம் லும்பினி என்ற அந்த இடத்திற்கான வரைபடத்தைக் காட்டியிருக்கிறார் .
2. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெறக்கூடிய காட்சி; போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெறுவது என்பது ஞானம் பெறுவதற்கான அடையாளத்தைக் காட்டக்கூடிய படச்சிற்பம் காட்டப்பட்டிருக்கிறது.
3. அவர் நிகழ்த்திய முதல் உரை. ஐந்து சீடர்கள் அவர் முன் அமர்ந்து கேட்பதைப் போல ஒரு வரைபடம் காட்டப்பட்டிருக்கிறது. சாரநாத் வரைபடம்.
4. பரிநிர்வாணம் சொல்லப்பட்டு இருக்கிறது. படுத்த நிலையில் மூடிய கண்கள் சற்றே திறந்தபடி இருக்க வலது கையைத் தலைக்கு அடியில் கொடுத்தவாறு இடது கையை இயல்பாக உடலில் வைத்த வாரும் காட்டப்பட்டிருக்கிறார்.
சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என இருவகையாக இருப்பதைக் கொண்டு அவர் இதை எல்லாம் சொல்லி இருக்கிறார். குறியீடுகளாக புத்தருடைய பிறப்பைச் சொல்லும் போது அவருடைய பிச்சை ஏற்பதைக் குறிக்கக்கூடிய திருவோடும் ஒரு குறியீடாகக் காட்டப்பட்டு இருக்கிறது.
பாதச்சுவடுகள் என்பது புத்தரின் வனவாசத்தைக் குறிக்கிறது. போதி மரக் குறியீடாக ஞானம் பெறுதலைக் குறிக்கிறது. பரிநிர்வாணம் என்பது ஸ்தூபி குறியீடாக நாம் புரிந்து கொள்ளுகிறோம். இப்படி குறியீட்டின் மூலமாக எவ்வாறு புத்தர் அறியப்படுகிறார் என்பதை விளக்கும் இந்த முதல் கட்டுரை மிக அற்புதமான ஓர் ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருக்கிறது.
இதில் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். ஒன்று கந்தகார்; பாகிஸ்தானுடைய வடமேற்குப் பகுதியாக இருக்கிறது. மேற்கே இந்துகுஷ் மலை இருக்கிறது. கிழக்கே சிந்து ஆறு ஓடுகிறது. வடக்கே உலகில் கூரை பாமீர் பீடபூமி, இமயத்தின் எல்லையாகக் கொண்டுள்ளதை அவர் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். இங்கு மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக் காலம் இருந்திருக்கிறது. அலெக்ஸாண்டர் ஆட்சி செய்த இந்த இடங்களை சந்திரகுப்த மௌரியர் (பொ.ஆ.மு.305-303) கைப்பற்றுகிறார்.
சந்திரகுப்த மௌரியரின் பேரன் அசோகர் புத்தசமயத்தை கல்வெட்டின் மூலம் (பொ.ஆ.மு259) நிறுவுகிறார். இது பௌத்தத்தின் திருப்புமுனை. பௌத்தம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம். அதனால் புத்தர் உருவங்கள் காந்தாரப் புத்த சிற்ப வகைகளை ஒத்திருக்கும் என்று ஆனந்த குமாரசாமி கூறுவதை நினைவுபடுத்துகிறார். காந்தாரச் சிற்பங்களில் பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து தான் புத்தரின் உருவங்கள் கிடைக்கப்பெறுகின்றன. காந்தாரத்தின் கிரேக்க பௌத்தக் கலை (Greco- Buddhist Art) அல்லது ஹெல்னிஸ்டிக் கலை(Helenistic Art) கிரேக்கக் கலை பாணிகளில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற புத்த வடிவங்களைக் காந்தாரப்பகுதியில் காண முடிகிறது என்று விளக்குகிறார். இதுதொடர்பான புத்தர் தொல்லியல் தடயங்களைப் பதிவுசெய்கிறார். கனிஷ்கருடைய முயற்சியினால் புத்த சமயம் தேரவாத பௌத்தம் மகாயானப் பௌத்தம் என்ற இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகிறது. மகாயானப் பௌத்தம் கனிஷ்கரால் வளர்த்தெடுக்கப் படுகிறது.
புத்தரின் உருவங்கள் முழு உருவச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பார்க்கப்படுகின்றன. புத்தரின் தலைக்குப் பின்புறம் ஒளி வட்டமும், ஞானம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் ஞான முடிச்சும், இரு புருவங்களின் இடையில் சிறிய வட்டத் திலகமும் கொண்டையைச் சுற்றிலும் வலப்புறம் சுருண்டு இருக்கும் சிறுசிறு சுருள்களாக முடியும் , அரச வாழ்வு காலத்தில் காதுகளில் தொங்கிய கனமான குழைகளால் துளைகொண்டு நீண்டு தொங்கும் காதுகளையும், அமைதி தவழும் முகத்துடன் மென்மையான சற்றே திறந்த விழிகளால் புன்சிரிப்புடன் அருளுடன் நோக்குமாக புத்தர் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். எப்போதும் துறவாடை அணிந்த நிலையிலேயே காட்டப்படும் புத்தர் அமர்ந்த நிலையிலோ நின்ற நிலையிலோ படுத்த நிலையிலோ காட்சிப்படுத்தப்படுவர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய இந்துக் கடவுள்கள் குறிப்பாக அவதாரத்துடன் காட்சிப்படுத்தப்படும் கடவுள் சிற்பங்களை நாம் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது புத்தருடைய தோற்றம்தான் சைவ வைணவத்தினால் மாற்றம் பெற்று இருக்கிறது என்பதை உணரமுடியும்.
தமிழ் மரபு அறக்கட்டளைச் சொற்பொழிவு:
"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு
— முனைவர் அரங்க மல்லிகா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 345 [நவம்பர் 26, 2023]
https://youtu.be/QnP-IR4RS5A
நூல்: தமிழகத்தில் பௌத்தம்
ஆசிரியர்: தேமொழி
விலை:₹120
வெளியீடு: 2023
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை
கிடைக்குமிடம்:
https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 8 - இறுதிப் பகுதி
இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்திய தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய புராணக்கதைகளை மூல பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் மற்றும் மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் சிங்களவர்கள் வட இந்தியப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்ற வகையிலான கருத்தாக்கமும் ஒரு காரணம். இது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் பரணவிதான எழுதிய இலங்கை வரலாறு, அதாவது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் இன்றுள்ள தலைமுறையினர் வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர்.
மேற்குறிப்பிட்ட இந்த கருத்தாக்கங்கள் இலங்கையிலேயே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர் இலங்கைக்கு அன்னியர் என்ற பார்வையை முன்வைத்து துட்டகாமினி தொடுத்த போர் சிங்கள மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.
இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவன் தமிழ் மன்னன் எல்லாளன். இவனைப் பற்றி பௌத்த பிக்கு மகாநாமதேரர் தனது நூலான மஹாவங்ச என்ற நூலில் விளக்கியிருந்தாலும் அதற்கு விளக்கம் கூறும் சிங்கள தேசியவாத வரலாற்றாசிரியர்கள் இதற்குத் தவறான விளக்கங்களைக் கூற முற்பட்டனர் என்பதும் இது ஒரு பக்கச் சார்பாக அமைந்துவிட்டது என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சிங்கள மொழி வளர்ச்சி பெற்ற விதத்தை நான்கு கட்டங்களாக அறிஞர்கள் பிரிக்கின்றனர்.
1. ஸ்ரீலங்கா பிராகிருதம் இது பொ.ஆ.மு. 400க்கும் முந்தியது
2. தொடக்ககால சிங்களம் பொ.ஆ 400 இல் இருந்து 700 வரை
3. இடைக்கால சிங்களம் பொ.ஆ 700 இல் இருந்து 1200 வரை
4. தற்கால சிங்களம் பொ.ஆ 1200 முதல்
இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல - மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.
நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்காணும் வகையில் காணலாம்.
1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பகால மொழியாக இருந்தது.
2. புத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டில் பவுத்தர்கள் வருகையால் மகதி மொழி இலங்கைக்கு வந்தது. இது பாலி மொழியாக வளர்ச்சி பெற்றது.
3. இலங்கையில் கலையும் அறிவியலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிமுகமானது.
4. சமஸ்கிருதம் கலந்த மொழியில் இருந்த மகாயான அல்லது வைத்தூலிய பௌத்த மதப் பிரிவு இலக்கியங்கள் வழியாகவும் சமஸ்கிருதம் பரவியது. இதன் காலம் பொ.ஆ 3ம் நூற்றாண்டு.
5. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவின் இன்றைய கேரள (அன்றைய தமிழகம்) பகுதியிலிருந்து அரசியல் மாற்றங்களின் காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய பௌத்தர்களும் சமணர்களும் இலங்கைத் தீவிற்கு வந்த நிகழ்வும் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் சிங்களத்தில் சமஸ்கிருத பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
6. சிங்கள இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற காலம் பொ.ஆ. 1250.
7. சிங்கள மொழி இலக்கணமும் தொடரிலும் திராவிடம் சார்ந்திருக்கின்றன.
8. கால ஓட்டத்தில் மேலும் பல ஐரோப்பிய மொழிகளையும் உள்வாங்கிய வகையில் இக்கால சிங்கள மொழி உள்ளது
சிங்கள இலக்கியங்கள் எனக் காணும் போது அதில் பழமையானது 'சித்தத் சங்கரவா' எனும் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்த நூல் இரண்டு வகையான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது.
1. எளு வரி வடிவம் ( பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்காதவை)
2. மிஸ்ர என்னும் பாலி மற்றும் சமஸ்கிருத ஒலிகள் கலந்த கலப்பு வடிவம். இந்த நூல் வீரசோழியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் சங்கராஜா அனோமதச்சி.
இன்றைய சிங்கள மொழியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் இலங்கையில் பௌத்த மத அறிமுகம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது கண்கூடு.
சாதாரணமாகப் பார்த்தாலே சிங்கள மொழியின் எழுத்து வரிவடிவம் தமிழ் வட்டெழுத்து வகையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைய மலையாள எழுத்துக்கு மிக நெருக்கமான வகையில் இந்த எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிங்கள மொழி உருவான சமயத்தில் பொறிக்கப்பட்ட சிகிரியா கல்வெட்டுக்களை காணும்போது அதில் பல இடங்களில் தமிழ் மலையாள சிங்கள எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.
சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. புராணங்களைச் சார்ந்த கருத்தாக்கங்களை விலக்கிவிட்டு, மொழியியல், மரபணு மற்றும் மானுடவியல் பார்வையில் ஆய்வுகளைச் தனிச்சார்பற்ற நிலையில் மேற்கொள்ளும்போது தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த முடியும்.
சிங்கள வாழ்வியல் மொழி பண்பாடு என விரிவான பல்வேறு தகவல்களை வழங்கும் சிறந்த ஒரு ஆய்வு நூலாக இந்நூல் அமைகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
-சுபா
புகைப்படம்: கந்தரோடை, பௌத்த சின்னங்கள், யாழ்ப்பாணம்.
"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு: முனைவர் அரங்க மல்லிகா
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 7
கண்ணகி வழிபாடு சிங்கள பண்பாட்டில் பின்னிப்பிணைந்து இருப்பது போல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு வழிபாடாக அமைகிறது முருகன் வழிபாடு. தமிழர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதிர்காமக் கந்தன் சிங்களவர்களது 'கதரகமத் தெய்யோ' என்று வழிபடும் ஒரு கடவுளாகவும் அமைகிறார். சிங்கள பண்பாட்டில் முருகன் வழிபாடு - தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், என்ற பொருளில் இந்த நூலின் ஏழாவது அத்தியாயம் அமைகிறது.
இலங்கையின் மூன்று பூர்வகுடிகள் முருகனைத் தங்களது கடவுளாகச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
1. சிங்கள பௌத்தர்கள்
2. இலங்கை தமிழர்கள்
3. இலங்கை வேடர்கள்
நூலின் இந்த இயலில் சில முக்கிய நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு B.Paffenberger , எழுதிய The Kataragama pilgrimage Hindu Buddha's interaction and its significance in Sri Lanka polyethnic social system, 1979, என் டி ராகவன் ஆய்வில் வெளிவந்த India in Ceylonese history: Society and culture 1969 மற்றும் பேராசிரியர் என் சண்முகலிங்கன் எழுதிய கதிர்காம முருகன் சமூக மானிடவியல் தரிசனம் 2014, பேராசிரியர் டெஸ்மணட் மல்லிகாரச்சி எழுதிய சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி 2003, ஆகிய நூல்களை நூலாசிரியர் பல இடங்களில் சான்று குறிப்பிடுகின்றார்.
இவர்கள் மட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்களும் கதிர்காம கடவுளை வணங்குகின்றனர் என்பதும் ஒரு கூடுதல் தகவலாக அமைகிறது.
இலங்கைத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் ஊவா மாகாணத்தின் புத்தளம் பகுதியில் இருக்கின்ற 'தியனகம' என்ற பெயர் கொண்ட காட்டின் நடுவில் அமைந்திருக்கின்றது கதிர்காமம்.
சிங்கள பௌத்தர்களைப் பொருத்தவரை,
1. சிங்கள பௌத்தர்களது தொன்மையான குடியேற்றங்களில் ஒன்று கதிர்காமம்.
2. அங்கிருக்கும் அரசமரம் தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலிருந்த அரசமரத்திலிருந்து கொண்டுவந்து நட்ட கிளை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.
3. மரபுவழி சிங்கள இலக்கியமான `கந்த உபாத` எனும் இலக்கியம் தமிழ் அரசனான எல்லாளனை வெற்றி கொண்டதால் நேர்த்திக்கடனாக துட்டகைமுனு என்ற அரசன் கட்டியது இந்த ஆலயம் என்கிறது.
4. மகாசேனன் என்ற சிங்கள மன்னனின் மறுபிறப்பு கதிர்காமக் கந்தன் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இதன் அடிப்படையை வைத்து இன்று வரை பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழ் கதிர்காமம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களவர் வருகைக்கு முன்னரே கதிர்காம முருகன் தமிழர்களின் கடவுளாகக் கொள்ளப்படுகின்றார். துட்டகைமுனு அதனை ஒரு சிங்களவர் ஆலயமாக மாற்றி அமைத்திருக்கக் கூடும் என்றே தமிழர்கள கருதுகின்றனர். குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளான திருமுருகனின் கோயில் இது என்றும், சமஸ்கிருத தொடர்பின்றி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்தக் கோயில் அமைந்தஇருக்கின்றது என்பதும் தொல்காப்பியம் குறிக்கும் `கந்தழி` வழிபாடு இது என்றும் குறிப்பிடலாம் என மு.கணபதிப்பிள்ளை (1967) குறிப்பிடுவது இங்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது.
வேடர்களைப் பொருத்தவரை, வள்ளி தமது தமக்கையாகவும் கந்தன் தனது மைத்துனனாகவும் பலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது நமது கடமை என வேடர்கள் ஒவ்வொருவரும் நம்புகின்றார்கள். வேடர் குலத் தலைவன் மகள் வள்ளியை களவு மணம் புரிந்த இடமாகக் கதிர்காமத்தை இலங்கை வேடர் சமூகம் நம்புகின்றது. சூரனைத் தாக்கிக் கொன்ற பின்னர் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என நம்புகின்றார்கள். கதிர்காமத்திறகு மேற்கே 3 மைல் தொலைவில் மாணிக்ககங்கை நதிக்கரையில் செல்லக்கதிர்காமம் அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கின்றது. முருகனின் வேண்டுகோளின்படி யானையாக பிள்ளையார் தோன்றி வள்ளி திருமணத்திற்கு உதவினார் என்ற புராண கதையும் வேடர்கள் வழக்கில் இருக்கின்றது.
இலங்கை தமிழர்களின் வாழ்வியலில் தமிழர் கடவுளாகவே கதிர்காம கடவுள் கருதப்படுகின்றார். கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாகவே முருகனுக்கு நைவேத்தியமாக மான் இறைச்சி படைக்கப்பட்டு வந்தது. 1960 களுக்குப் பிறகு கதிர்காமத்தைப் புனித நகரமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்திய பிறகு மான் இறைச்சி படைப்பது நிறுத்தப்பட்டது என நூலாசிரியர் கூறுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. ஆக மான் இறைச்சி முருகக் கடவுளுக்குப் படைத்த பண்பாட்டு கூறுகளைக் காணும்போது பழங்குடி சமூகத்தின் வழிபாட்டு மரபை உணர்த்துவதாக அமைகிறது.
கதிர்காமத்தைப் போலவே கண்டியிலும் இருக்கும் கதரகமா கோயில் இலங்கை சிங்களவர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ஒரு கோயிலாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிங்கள வணிகர்கள் இந்த முருகன் கோயிலை தங்களது வழிபாட்டின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். சிங்கள வணிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை தங்கள் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களின் முருக வழிபாட்டு முறையில் உடலில் சிறிய இரும்பு முட்கள் மற்றும் ஆணிகளைத் துளைத்து வேண்டுதல் வழிபாடு செய்வது வழக்கில் இருப்பதை ஓபயசேகர (1988) அவர்களது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கதிர்காமத்தில் தூக்குக் காவடி எடுக்கும் இஸ்லாமியர்களும் இத்தகைய வழிபாட்டில் இணைந்து கொள்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை கதிர்காமம் மற்றும் கண்டி கதிரகமத் தெய்யோ என்ற வடிவில் முருகவழிபாடு தென்னிந்திய பண்பாட்டு நீட்சியாகத் தொடர்கிறது.
தொடரும்..
-சுபா
குறிப்பு: கதிர்காமம் தொடர்பாக கூறப்பட்டுள்ள செய்திகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இணைக்கப்பட்டிருந்தால் நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்து உதவலாம்.
புகைப்படம் - கதிர்காமம், ஊவா மாநில காட்டுப் பகுதி, இலங்கை வேடர்கள்.
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 6
வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் முதலே தாய் தெய்வ வழிபாடு என்பது உலக மக்களின் அனைத்து சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுவதை இன்றைய தொல்லியல் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது தொன்மையான வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கண்ணகிக்குத் தமிழகத்தில் கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திற்கு அருகிலுள்ள இலங்கையில் கண்ணகி எப்படி வழிபடப்படுகிறாள் என்பதைத்தான் நூலில் ஆறாவது அத்தியாயம் பேசுகிறது.
நூலாசிரியர் ஆய்வாளர்கள் சிலரது ஆய்வுகளை இந்தப் பகுதிக்கு முக்கியச் சான்றுகளாகப் பயன்படுத்துகின்றார். அதில்,பேராசிரியர் ஒபயசேகர எழுதிய The cult of the Goddess Pattini (1984), பேராசிரியர் ரிச்சர்ட் கொம்ரிட்ச் எழுதிய, Food for 7 Grandmothers: Stages in the universalisation of the Sinhalese ritual, (1971), லூத்மினா மீர்வொர்த்-லெவினா எழுதிய The Hindu goddess Pattini in the Buddhist popular belief in Ceylon (1916), L.S.Hiatt எழுதிய The Pattini cult of Ceyon Tamil Perspective (1973) ஆகியவை வெகுவாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி மேலும் பல நூல்களையும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். அவை அனைத்தும் கண்ணகி சிங்களப் பண்பாட்டில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நமக்கு வியப்பூட்டும் வகையில் உள்ள சிங்கள இலக்கியங்களாக அமைகின்றன.
கஜபாகு மன்னன் இலங்கையில் நிலவி வந்த பஞ்சத்தைப் போக்குவதற்கு தமிழகம் சென்று கண்ணகி சிலையைக் கொண்டுவந்து ஆடி மாதத்தில் விழா எடுத்தான், என இதன் பூர்வீகத்தை ஒரு மரபு பேசுகிறது. இந்த கஜபாகு பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.
பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டில் பௌத்தம் முழுமையாக இலங்கையில் பரவத் தொடங்குவதற்கு முன்பு இலங்கைத் தீவு முழுக்க நாட்டார் வழிபாட்டு மரபு தெய்வங்கள் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பதோடு கண்ணகி வழிபாடும், ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடும், 'கிரி அம்மா' என்ற பெண் தெய்வ வழிபாடும் அடங்குகிறது.
சிங்களவரின் பௌத்த மத அடையாளத்துக்குக் குறைவில்லாத வகையில் சிங்கள பண்பாட்டில் கண்ணகி தெய்வம் 'கண்ணகி தெய்யோ' அல்லது 'பத்தினி தெய்யோ' எனச் சிறப்பிக்கப்படுகிறார். அடிப்படையில் கடவுள் கோட்பாட்டை மறுக்கும் பவுத்தம் இலங்கையைப் பொறுத்த வகையில் கண்ணகி தெய்வத்தையும் மற்றும் தமிழ் நிலத்தில் நன்கு பரிச்சயமான விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு தெய்வங்களையும் உள்ளடக்கிய தெய்வீக மரபைக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இலங்கை பௌத்தம் தேரவாத பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூட தாய் தெய்வ வழிபாடு இங்கு கண்ணகி வழிபாடாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்ணகி தொன்மத்தை மூன்று வெவ்வேறு வகையில் குறிப்பிடுகின்றார்கள்.
1. நாக தெய்வமான நாக அரசனின் கண்ணீரில் இருந்து பிறந்தவள்
2. நீலத்தாமரையில் இருந்து தோன்றியவள்
3. பாண்டிய மன்னனின் தோட்டத்து மாமரத்திலிருந்து பிறந்தவள்
மேற்கூறிய மூன்று தொன்மங்களுமே கண்ணகியின் பிறப்பை அசாதாரண நிகழ்வாகக் காட்டுகின்றன.
சிங்கள மக்களின் வழிபாட்டு மரபில் கண்ணகி தெய்யோவைப் பன்முகத்தன்மை கொண்ட கடவுளாக வழிபடுகின்றனர்.
1. கண்ணகி வளமைக்கும் ஆரோக்கியத்திற்குமான தெய்வம்.
2. கண்ணகி பௌத்த மதத்தைக் காத்து வரும் தெய்வம்
3. கண்ணகி இலங்கைத்தீவைக் காக்கும் காவல் தெய்வம்
கண்ணகி வழிபாட்டிற்கு முன்னர் ஏழு பெண் தெய்வங்கள் வழிபாடு என்பதும் சிங்களவர் மரபில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தமிழ்நில மரபில் உள்ள சப்த கன்னியர் அல்லது ஏழு கன்னிமார் என்ற வழிபாட்டு மரபோடு ஒப்பீடு செய்யத் தக்கது.
நூலாசிரியர் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் போது நூலில் `இந்து தெய்வங்கள்` எனக் குறிப்பிடுகின்றார். `இந்து மதம்; என்ற ஒரு அடையாளப்படுத்துதல் ஆங்கிலேய காலணித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம் என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இதனைப் `பண்டைய தென்னிந்திய தொல் தெய்வ வழிபாடுகள்` எனச் சுட்டுவது பொறுந்தும் என்று கருதுகிறேன். லிங்க வழிபாடும் இவ்வகையில் தொல் தெய்வ வழிபாடு என்ற வகையிலே சுட்டப்பட வேண்டும்.
கண்ணகியைச் சிங்களவர்கள் ஒரு தொன்மையான பௌத்த தெய்வமாகவே கருதுகிறார்கள். ஏறமல பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மாவித்தில் இருந்து தோன்றியவள் என சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கட்டத்தில் மைத்திரி புத்தர் வடிவில் கண்ணகியை இனம் காணவும் சிங்களவர் முற்பட்டனர். அடுத்த கட்டத்தில் பத்தினி தெய்வமான கண்ணகி போதிசத்துவர் எனும் நிலையிலிருந்து பரிநிர்வாண நிலைக்கு உயர்த்தப்பட்டார். இத்தகைய மேலும் பல தொன்மங்கள் கண்ணகியைப் பௌத்த சமயத்துடன் பின்னிப் பிணைத்துக் காட்டுவதை தீவிரமாக முயற்சித்துள்ளன.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை கண்ணகி தமிழ் தெய்வம் அல்ல; மாறாக சிங்கள பௌத்தர்களுக்கே உரிய முக்கிய தெய்வம்.இன்று இலங்கை முழுவதும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன.
இன்று கண்ணகி தெய்யோ சிங்களவர் பண்பாட்டில் பிரிக்கப்பட முடியாத முக்கிய இடத்தை ஏற்றிருக்கும் ஒரு தெய்வம் என்பது வியப்பளிக்கும் உண்மை.
தொடரும்..
-சுபா
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 5
நூலின் ஐந்தாம் அத்தியாயம் சிங்கள மக்கள் வாழ்வியலில் திருமண முறைகள் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் ஆரிய மணமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உறவுமுறை திருமண அமைப்பை அடிப்படையாகக் கொண்டது சிங்கள திருமண முறை, அதாவது திராவிட முறை பழக்க வழக்கங்களோடு தொடர்பு கொண்டது என்று நிலை நிறுத்துகிறார். அதற்கு மேலைநாட்டு அறிஞர்கள் H.W.Codrington, நூர் சால்மன், மற்றும் இலங்கை ஆய்வாளர் மானிடவியலர் எம் டி ராகவன் அவர்களது ஆய்வுகளையும் சான்றாகப் பயன்படுத்துகின்றார்.
அடிப்படையில் காணும்போது சிங்கள சமூகத்தில் திருமண முறை அகமணத்தைக் கொண்டது என்பதைக் காணமுடிகிறது. `கொய்கம` சாதி அமைப்பில் விரிவான கிளை சாதிகள் உள்ளன. ஆகவே அகமண தன்மையை உறுதியாகப் பின்பற்றும் சமூகமாக இது அமைகிறது. திராவிட அகமணதன்மை என எடுத்துக் கொள்ளும்போது கிளைச் சாதிகளுக்குள்ளேயே காணப்படும் வகையரா /பரம்பரை/கூட்டம்/குலம்/கிளை/கொத்து/இல்லம் என அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு உள்ளே திருமண உறவுகள் எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
சிங்கள சமூகத்தவர்களது விதிகளின்படி பங்காளி உறவுடைய எவரும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் அண்ணன்-தம்பி அல்லது அக்காள்-தங்கை உறவாகக் கருதப்படுகின்றனர்.
முறைப்பையன் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உரிமை கூறப்படுவதும் சிங்களவர் வழக்கத்தில் இருக்கிறது. முறைப்பையனுக்குப் பதிலாக வேறு ஒருவரை அப்பெண் திருமணம் செய்ய நேரிட்டால் மணப்பெண் அந்த முறைப்பையனுக்கு 100 வெற்றிலை கொடுத்து அனுமதி கேட்கவேண்டும் என்ற சடங்கும் சமூகத்தில் நடைமுறையில் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது.
தென்னிந்தியாவில் சில பூர்வகுடிகளிடம் இன்றும் தாய்வழி சமூக முறை இருக்கின்றது. நூர் சால்மன் தனது நூலில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு தமிழர்களிடம் தாய்வழிச்சமூகமுறை மிச்சசொச்சம் இருக்கின்றது என்பதை இவரது ஆய்வு குறிப்பிடுகின்றது.
திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண், பெண்ணின் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு சென்று வாழ்வது என்பது கண்டி பகுதியில் அதிகம் வழக்கிலிருக்கும் முறை என்றும், இது 'பின்ன' என்று குறிப்பிடப்படுகின்றது என்றும், தந்தைவழி குடும்ப முறையில் மணப்பெண் கணவன் வீட்டில் சென்று வாழ்வது முறையாகக் கருதப்படுகின்றது என்றும், இதனை 'தீக' என்று சிங்களவர் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.
'தீக' திருமண முறையில் பெண் வீட்டார் வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த வழி திருமண முறையில் பெண்ணுக்கு அசையா சொத்துகள் மட்டுமே பங்கு உண்டு என்றும், அதனை விற்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றும், பயிரிடும் உரிமையை மட்டும் அவள் தன் உடன்பிறந்தோருக்குக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அதில் வரும் வருமானத்தைக் கண்டிப்பாக கேட்டுப் பெற மாட்டாள் என்றும், யார் பயிரிடுகிறார்களோ அவர்கள் நினைத்து எதை கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொள்வார் என்றும் அறிய முடிகின்றது. இதனைக் காணும்போது மிக உறுதியான ஆணாதிக்க மரபு வழிமுறையாக இதனைக் கருதலாம்.
திருமண நிகழ்வில் விருந்துபசாரம் செய்தல், நல்ல நேரம் பார்த்தல், மணமகள் வீட்டில் மணமகன் வருகையைக் கொண்டாடுதல், ஆடை மாற்றுதல் சடங்கு, கால் பெருவிரல்களைக் கயிற்றால் கட்டுதல் ஆகியவற்றோடு பெண்கள் பாலி மொழியில் அமைந்த பழம்பெரும் பாடலாகிய `ஜெயமங்களசூத்திரா` பாடலைப் பாடுவது, அதன் பின்னர் தேங்காய் உடைத்தல், மாமா உறவு வழி சடங்குகள், முறைப்பையன் இருந்தால் அவன் மணப்பெண்ணை விட்டுக் கொடுக்கும் சடங்கு என வரிசையாக சடங்குகள் அமைகின்றன. திருமணம் மணப்பெண் வீட்டில் நடக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தற்காலிக குடிசை அமைக்கப்படும் என்றும் அதனை வண்ணார்கள் அமைத்து அலங்கரித்து கொடுக்கின்றனர் என்றும் அறிய முடிகிறது. தாலிகட்டுவது போல ஒரு சின்னத்தை அணிவிக்கும் முறை சிங்கள திருமணங்களில் இல்லை என்றே தெரிகிறது.
பல கணவர்கள் அதாவது சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து வாழும் முறை தம்பகல்லே, மஹா கண்டென ஆகிய பகுதிகளில் இருந்ததை நூர் யால்மன் (1971) பதிகின்றார். அதேபோல பல மனைவியர் உள்ள ஆண்களின் குடும்பங்கள் சிலவற்றையும் தாம் கண்டதாக இவரது ஆய்வு வெளிப்படுத்துவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குப் பெரும்பாலும் நிலங்களும் சொத்தும் பிற குடும்பங்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.
இன்றைய காலச்சூழலில் சிங்கள சமூகத்தவர் பண்பாட்டில் திருமண முறைகள் மேற்கத்திய வழக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் பல மாற்றங்களுடன் திகழ்கின்றது. இன வேறுபாட்டைக் களைந்து சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என வேறுபாடின்றி கலப்பு திருமண நிகழ்வுகளும் இன்றைய இலங்கையில் கண்கூடு.
புகைப்படம்: இலங்கை மலையகத்தில் பதுளை நகரில் அமைந்துள்ள முதியாங்கனை ரஜ மகா விகாரையில்.
தொடரும்..
-சுபா
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 4
2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இரண்டு முறை நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் நமக்கு நன்கு பரிச்சயமான விநாயகர், லட்சுமி, சிவன் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் சிங்கள முகத்துடன் சிறிய சிறிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நண்பர்களுடன் பேசி கேட்டு அறிந்து கொண்ட போது பௌத்த ஆலயங்களில் இத்தகைய தமிழர் வழிபாட்டில் இடம்பெறுகின்ற தெய்வ வடிவங்களும் அவற்றுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். சமயம் சார்ந்த ஒற்றுமைகள் என்பது ஒருபுறமிருக்க, மொழியில், பண்பாட்டில் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றியும், முறையான ஆய்வுகள் இலங்கையின் இரண்டு பெரும் இனங்களான சிங்களவர்கள்-தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.
சிங்களவர் உறவுமுறை பெயர்களில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காண்கின்றோம். சில உதாரணங்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன்.
பொதுவாக இந்தியாவில் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வது போல, சிங்களவர் சமூகச் சூழலில் `கண்டி சிங்களவர்` அதாவது மலைநாட்டு சிங்களவர் என்றும் தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள் `கரையோரச் சிங்களவர்` என்றும் நில அடிப்படையில் அடையாளப்படுத்தப் படுகின்றார்கள். இவர்களுள் மலைநாட்டு சிங்களவர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
கண்டி சமூகத்தில் இரண்டு வகை திருமண முறை இருப்பதைக் காண்கிறோம்.
1. பின்னா - இவ்வகை திருமணத்தில் கணவன் தன் மனைவி வீட்டிற்கு சென்று வாழ்வது வழக்கம். இந்த வாழும் முறை அதாவது சிங்கள மொழியில் 'வாசகம' என்பது மருமக்கட்தாய முறைப்படி மனைவி வீடாக அமைகிறது.
2. இதற்கு மாறாக திருமணத்திற்குப்பின் மனைவி தன் கணவர் வீட்டிற்கு சென்று வாழும் முறை 'தீக' என அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டு வகை திருமண பிரிவுகளும் கண்டி சமூகத்தில் அதாவது மலைநாட்டு சிங்களவர் சமூகத்தில் உள்ளன. இந்த இரண்டு பிரிவினரும் திராவிட உறவு முறையைப் பின்பற்றுகின்றனர். ஆக, திராவிட சமூக அமைப்பில் இன்றும் தாய்வழிச் சமூக முறையும் தந்தை வழி சமூக முறையும் தொடர்வதை நாம் காண்பது போல, மலைநாட்டு சிங்களவர் சமூகத்திலும் இது இயல்பாக இருப்பதைக் காண முடிகிறது.
இலங்கையில் பேசப்படுகின்ற சிங்கள மொழியின் ஒரு உறவு மொழியாக 'மஹல்' மொழி அமைகிறது. இது இலட்சத் தீவுகளிலும், மாலத்தீவுகளிலும் பேசப்படும் மொழியாகும் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சிங்கள மொழி ஒரு இலக்கிய மொழியாக உருவானது பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டு காலவாக்கில் தான். சிங்கள எழுத்தின் வரிவடிவமானது தென்னிந்திய சாய்வுக் கோடு வகையில் விளங்குகிறது என்று கூறும் அறிஞர் கோலின் மாசிகாவின் (Colin Masica, 1991) கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.
இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளான நாகர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்ந்தவர்கள் என்பதும், இந்தப் பூர்வீக நாக மன்னர்களின் சின்னங்களாக சிங்கமும் பனை மரமும் இருந்தன என்பதும், பிற்காலத்தில் இலங்கையில் இந்தப் பூர்வகுடிகள் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னரும் கூட சின்னங்களைக் கைவிடாமல் இருப்பதும் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்தச் சிங்கமும் பனைமரமும் தமிழக சேர மன்னர்களுக்கு உரிய சின்னங்கள் என்பதையும் நாம் ஒப்புநோக்க வேண்டியுள்ளது.
பண்பாட்டு அடிப்படையில் திராவிட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் மொழி இந்தோ-ஆரிய மொழியாக இருக்கின்றது என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருப்பதைப் பார்த்தோம். இந்தக் கலப்பு எப்படி சாத்தியமானது என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
சிங்களவர்களின் மிக ஆரம்பகால இடப்பெயர்வு என்பது தென்னிந்திய பகுதிகளின் ஊடாக நடந்தேறியது என்றும், அவர்கள் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளோடு மிக நீண்டகாலமாக இனத் தொடர்பு கொண்டிருந்தாலும் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்து, மிக நீண்ட காலங்கள் வாழ்ந்து, தென்னிந்தியப் பெண்களைத் திருமணம் செய்து, தமிழ் பவுத்தத்தைத் தழுவி, தமிழ் தேசத்தோடு உறவாடி, தென்னிந்திய கிராம தெய்வங்களை வணங்கி வழிபட்டு தங்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கை சென்று அடைந்தார்கள் என்று கருத வாய்ப்புள்ளது.
பூர்வ வட இந்தியர்கள், அதாவது இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள் உறவுத் திருமணங்களைத் தங்கள் பண்பாட்டில் கொண்டிருப்பதில்லை. அவர்களது திருமண முறை உயர்குல முறை, அதாவது hypergamy என்ற அமைப்பில் அடங்கும். இது திராவிட திருமண முறையான உறவுத் திருமணங்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் ஒரு முறையாக அமைகிறது என்பதை இங்குக் காண வேண்டும்.
உறவுத் திருமணங்கள் தென்னிந்திய சமூகத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் வேளாண்மை. நிலமும் நீரும் சமூக வாழ்வியல் அமைப்பில் முக்கிய இடம் பிடிப்பதால் இவை திருமணத்தால் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட பண்பாட்டில் ஏற்படுத்திக்கொண்ட முறையே உறவுத் திருமணங்களாகும், என்கிறார் நூலாசிரியர்.
பண்பாட்டு ஒற்றுமை எனக் காணும்போது சிங்களவர்கள் கண்ணகி வழிபாடு செய்வதும், விநாயகர் வழிபாடு செய்வதும், விஷ்ணு, முருகன், வள்ளி ஆகிய தெய்வங்களின் வழிபாடுகளைச் செய்வதும், கேரளத்தின் கதகளி நடன வகையை ஏற்று உள்வாங்கிக் கொண்டதும், உணவுப் பழக்கவழக்கங்களில் கேரள பழக்கவழக்கங்கள் மிகுந்து இருப்பதும் முக்கியமான கூறுகளாகும்.
ஆக, வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் வட இந்திய பின்னணியோடு சிங்கள அரசை தோற்றுவித்து சிங்களவர்கள் உருவானார்கள் என்ற புராணக்கதையை முழுமையான வரலாறு என்று கொள்ளாமல், மகாவம்சம் சூளவம்சம் மற்றும் ஏனைய புராணங்களில் உள்ள ஏராளமான கதைகளை வாய்மொழி கதைகளின் ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையில் அவற்றை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
வாய்மொழிக் கதைகள் இன வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய மானுடவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.
ஆசிரியர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறும் ஒரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. "பன்மை இனத்துவம் கொண்ட நாடுகளில் இன வரலாறு வரலாற்றின் அனைத்து பரிமாணங்களிலும் ஊடுருவியிருக்கும். அதனை முற்சாய்வு ஏதுமின்றி ஆராயும்போது மட்டுமே புதிய உண்மைகள் வெளிப்படும். சிங்கள இனத்துவத்தையும் இந்த வகையில் ஆராய வேண்டும்."
தொடரும்..
-சுபா.
நூல் திறனாய்வு
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 3
மானுடவியல் ஆய்வுகளில் இனங்களின் உறவுமுறை கட்டமைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு கூறு. நூலின் நான்காவது அத்தியாயம் சிங்கள சமூகத்தில் உறவுமுறை பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.
மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ஏனைய பிற புராணக் கதைகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் இலங்கை சிங்களவர்களுக்கு வட இந்திய தொடர்பு இருப்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் மரபணு ரீதியான ஆய்வுகளை நோக்கும்போது அவை தென்னிந்திய மக்களுடன், அதிலும் குறிப்பாக திராவிட இன மக்களுடன் மரபணு நெருக்கம் இருப்பதைப் பலப்படுத்துகின்றன. இவர்கள் இனத்தால் சிங்களவர்; மொழியால் இந்தோ- -ஆரிய மொழி பேசுபவர்கள்; மதத்தால் பவுத்தர்கள்; பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று ஆய்வாளர் Cordrington (1926) கூறுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்கூற்றை உறுதி செய்வதாகவே அமைகிறது சிங்கள இன மக்களிடையே உள்ள உறவுமுறை வழக்கங்கள்.
"சமூகத்தில் மனிதர்கள் மன உறவாலும் இரத்த உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் உறவுமுறை சொற்கள் உறவின் தன்மைகளையும் பண்புகளையும் வரையறுத்துள்ளன; திருமண விதிகளைக் கூறுகின்றன; திருமண விருப்பங்களைத் தெரிவிக்கின்றன; மணமுறையில் கையாள வேண்டிய தவிர்ப்புகளையும் விலக்குகளையும் சுட்டிக்காட்டுகின்றன; உறவினர்களிடையே பேணவேண்டிய நடத்தை முறைகளை ஒழுங்கு செய்கின்றன" என ஒரு இனத்தின் உறவுமுறைகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார்.
இலங்கை சிங்கள மக்களின் உறவு முறை குறித்த விரிவான ஆய்வினை நிகழ்த்தியவர் துருக்கி நாட்டு மானிடவியல் அறிஞர் நூர் யால்மண். இவரது ஆய்வு சிங்கள மக்களின் உறவு முறையானது (1962) திராவிட முறை சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆய்வினை விரிவாக்கி அவர் எழுதிய நூல் Under the Bo tree: Studies in caste kinship and marriage in the interior Ceylon, 1971 என்ற பெயரில் வெளிவந்தது. இதேபோல எட்மன்ட் லீச் ஆராய்ந்து எழுதி வெளியிட்ட A village in Ceylon: A study of land tenure and kinship (1961), என்ற நூலும், இலங்கையின் மூத்த இனவியல் அறிஞர் எம் டி ராகவன் எழுதி வெளியிட்ட The Karava of Ceylon: Society and culture(1961) ஆகிய நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் சில நூல்களையும் நூலாசிரியர் சிங்கள தமிழ் உறவு முறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை இந்த அத்தியாயத்தில் சான்றாகக் காட்டுகின்றார்.
இன்று உலகளாவிய நிலையில் ஆறுவகை உறவுமுறை அமைப்புகள் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன அவை பின்வருமாறு:
1. எஸ்கிமோ முறை
2. ஓமஹா முறை
3. குறோ முறை
4.. இராகுவர் முறை (திராவிடர்கள்)
5. ஹவாய் முறை
6. சூடானிய முறை
இதில் இராகுவர் முறை என்பது ஆஸ்திரேலிய முது குடிகள், இலங்கை வேடர்கள், இலங்கை சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், தென்னிந்திய சமூகங்கள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள், தென்னிந்தியாவும் வட இந்தியாவும் சந்திக்கும் எல்லையோரத்தில் வாழும் மராட்டிய சமூகத்தார், நடு இந்திய சமூகத்தார் ஆகியோரிடம் பரவலாகக் காணப்படும் உறவு முறையாகும்.
திராவிட உறவு முறையின் தனிச்சிறப்பு என்பது என்னவெனில் தாய்வழி உறவினர்களும் தந்தை வழி உறவினர்களும் சமச்சீர் உரிமையோடு அணுகும் முறையாகும். உதாரணமாகப் பாட்டி என்றோ தாத்தா என்றோ அழைத்தால் அவை இரண்டும் தாய் தந்தை ஆகிய இரண்டு வழி பாட்டன்களையும், பாட்டிகளையும் குறிக்கின்றன. அதேபோல பேரன் பேத்தி ஆகிய சொற்களும், இன்னும் பல சொற்களும் அமைகின்றன.
திராவிட உறவு முறைக்கு உள்ள மற்றொரு சிறப்பு ஒவ்வொரு நபருக்குமான உறவு கூட்டத்தை பெரும் பிரிவாகப் பிரித்துக் காண்பது. உறவினர்களில் ஒரு சாதியினர் அண்ணன்-தம்பி முறையில் வருபவர்கள்; மற்றொரு பிரிவினர் மாமன்-மச்சான் முறையில் வருபவர்கள். இந்த உறவு முறை பிரிவு திராவிட உறவு முறையில் அடித்தளத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் உறவுமுறைச் சொற்கள் அனைத்தும் இந்த முறை கோட்பாட்டை முன்வைத்து உறவினர்களை இரண்டு பெரிய வகைகளாகப் பிரித்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
உறவினர் சுற்றத்தை திருமண உறவு அல்லது ரத்த உறவு என்ற இரண்டு பெரிய வகையில் பிரிக்கும் முறை திராவிட உறவு முறையில் மட்டுமே காணக் கூடியதாக அமைகிறது. இதற்கு நேர்மாறாக ஹிந்தி உறவுமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் அங்குத் தாய்வழி தந்தைவழி உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறவுச் சொல் இருப்பதைக் காண முடியும். இது திராவிட உறவு முறையிலிருந்து அடிப்படை வேறுபாடாகும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார்.
திராவிட உறவு முறையின் அடிப்படை அமைப்பாக்கத்தில் பழங்காலத்திலிருந்து திராவிட மக்கள் உறவுமுறை வழக்கில் கொண்டுள்ள உறவுத் திருமண முறை, அதாவது cross cousin marriages ஒரு முக்கியக் கூறாக அமைகின்றது. திராவிட உறவு முறையை ஆராய்ந்த தாமஸ் டிரவுட்மன் ( 1981) இது நேற்று இன்று தோன்றிய ஒரு வழக்கு அல்ல, மாறாக வரலாற்றின் ஊடாக கட்டமைந்த உருவாக்கம் ( historical construct) என்று விரிவாக ஆய்வு மூலம் நிரூபித்துக் காட்டியதையும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இன வேறுபாடு - தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு பௌத்தர் சைவர் என்றில்லாமல் திராவிட உறவுமுறை என்பது இலங்கைத் தீவு முழுவதும் ஒரே முறையிலேயே அமைகிறது. இன்றும் புழக்கத்தில் உள்ள சிங்கள உறவுமுறைச் சொற்கள் சிலவற்றை ஆசிரியர் உதாரணத்திற்குப் பட்டியலிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே புரிதலுக்காக வழங்குகின்றேன்.
சிங்களம்: அப்பா, அப்புச்சி - தமிழ்: அப்பா
சிங்களம்: அம்மா, மவு - தமிழ்: அம்மா
சிங்களம்: மாமா, மாமாண்டி - தமிழ்: தாய்மாமன், அத்தையின் கணவர், மாமனார்.
சிங்களம்: ஐயா - தமிழ்: அண்ணன்சிங்களம்: அக்கா - தமிழ்: அக்கா
சிங்களம்: லொகு அக்கா - தமிழ்: மூத்த அக்கா
சிங்களம்: சகோதரி - தமிழ்: உடன் பிறந்தவள்
சிங்களம்: சகோதரா - தமிழ்: உடன் பிறந்தவன்
சிங்களம்: மினிஹ, புருசய்யா - தமிழ்: கணவன்
சிங்களம்: பவுலா, கனு - தமிழ்: மனைவி
மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் தாத்தாவைக் குறிக்கச் சொல்லப்படும் சிய்யா/சிய்யான் என்ற சொல்லின் திரிபாக `சியா` என தாத்தாவை அழைக்கும் வழக்கமும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. சிங்கள உறவு முறையில் நேர் திராவிடச் சொற்கள் அதிகமாகவும், அதோடு இடைக்கால சிங்களச் சொற்களும் கலந்திருப்பது தெரிகிறது.
சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் என்ற வகையிலும், சிங்கள மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் என்ற அடிப்படையிலும் ஒப்பாய்வுகள் செய்யப்படுவதும், அது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்து அவை பெரும் வகையில் கலந்துரையாடப்படுவதும் அவசியம். ஏனெனில் தமிழர், சிங்களவர் என்ற இரண்டு வெவ்வேறு இனங்கள் என காண்பதை விட ஒரே இனத்தின் ஒரு பிரிவாக, அதாவது பண்டைய திராவிட தொல்குடி மரபின் ஒரு பிரிவே சிங்களவர்கள் என்ற முடிவுக்கே நம்மை மானுடவியல் ஆய்வுகள் இட்டுச் செல்கின்றன!
தொடரும்..
-சுபா
புகைப்படம்: யாழ்ப்பாணத்தின் சாலையில் பனை மரங்களுடன்.