Thursday, November 23, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 5

நூலின் ஐந்தாம் அத்தியாயம் சிங்கள மக்கள் வாழ்வியலில் திருமண முறைகள் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் ஆரிய மணமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உறவுமுறை திருமண அமைப்பை அடிப்படையாகக் கொண்டது சிங்கள திருமண முறை, அதாவது திராவிட முறை பழக்க வழக்கங்களோடு தொடர்பு கொண்டது என்று நிலை நிறுத்துகிறார். அதற்கு மேலைநாட்டு அறிஞர்கள் H.W.Codrington, நூர் சால்மன், மற்றும் இலங்கை ஆய்வாளர் மானிடவியலர் எம் டி ராகவன் அவர்களது ஆய்வுகளையும் சான்றாகப் பயன்படுத்துகின்றார்.

அடிப்படையில் காணும்போது சிங்கள சமூகத்தில் திருமண முறை அகமணத்தைக் கொண்டது என்பதைக் காணமுடிகிறது. `கொய்கம` சாதி அமைப்பில் விரிவான கிளை சாதிகள் உள்ளன. ஆகவே அகமண தன்மையை உறுதியாகப் பின்பற்றும் சமூகமாக இது அமைகிறது. திராவிட அகமணதன்மை என எடுத்துக் கொள்ளும்போது கிளைச் சாதிகளுக்குள்ளேயே காணப்படும் வகையரா /பரம்பரை/கூட்டம்/குலம்/கிளை/கொத்து/இல்லம் என அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு உள்ளே திருமண உறவுகள் எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

சிங்கள சமூகத்தவர்களது விதிகளின்படி பங்காளி உறவுடைய எவரும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் அண்ணன்-தம்பி அல்லது அக்காள்-தங்கை உறவாகக் கருதப்படுகின்றனர்.

முறைப்பையன் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உரிமை கூறப்படுவதும் சிங்களவர்  வழக்கத்தில் இருக்கிறது. முறைப்பையனுக்குப்  பதிலாக வேறு ஒருவரை அப்பெண் திருமணம் செய்ய நேரிட்டால் மணப்பெண் அந்த முறைப்பையனுக்கு 100 வெற்றிலை கொடுத்து அனுமதி கேட்கவேண்டும் என்ற சடங்கும் சமூகத்தில் நடைமுறையில் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது.

தென்னிந்தியாவில் சில பூர்வகுடிகளிடம் இன்றும் தாய்வழி சமூக முறை இருக்கின்றது. நூர் சால்மன் தனது நூலில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு தமிழர்களிடம் தாய்வழிச்சமூகமுறை மிச்சசொச்சம் இருக்கின்றது என்பதை இவரது ஆய்வு குறிப்பிடுகின்றது.

திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண்,  பெண்ணின் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு சென்று வாழ்வது என்பது கண்டி பகுதியில் அதிகம் வழக்கிலிருக்கும் முறை என்றும், இது 'பின்ன' என்று குறிப்பிடப்படுகின்றது என்றும், தந்தைவழி குடும்ப முறையில் மணப்பெண் கணவன் வீட்டில் சென்று வாழ்வது முறையாகக் கருதப்படுகின்றது என்றும், இதனை 'தீக' என்று சிங்களவர் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

'தீக' திருமண முறையில்  பெண் வீட்டார் வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த வழி திருமண முறையில் பெண்ணுக்கு அசையா சொத்துகள் மட்டுமே பங்கு உண்டு என்றும், அதனை விற்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றும், பயிரிடும் உரிமையை மட்டும் அவள் தன் உடன்பிறந்தோருக்குக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அதில் வரும் வருமானத்தைக் கண்டிப்பாக கேட்டுப் பெற மாட்டாள் என்றும், யார் பயிரிடுகிறார்களோ அவர்கள் நினைத்து எதை கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொள்வார்  என்றும் அறிய முடிகின்றது. இதனைக் காணும்போது மிக உறுதியான ஆணாதிக்க மரபு வழிமுறையாக இதனைக் கருதலாம்.

திருமண நிகழ்வில் விருந்துபசாரம் செய்தல், நல்ல நேரம் பார்த்தல், மணமகள் வீட்டில் மணமகன் வருகையைக் கொண்டாடுதல், ஆடை மாற்றுதல் சடங்கு, கால் பெருவிரல்களைக் கயிற்றால் கட்டுதல் ஆகியவற்றோடு பெண்கள் பாலி மொழியில் அமைந்த பழம்பெரும் பாடலாகிய `ஜெயமங்களசூத்திரா` பாடலைப் பாடுவது, அதன் பின்னர் தேங்காய் உடைத்தல், மாமா உறவு வழி சடங்குகள், முறைப்பையன் இருந்தால் அவன் மணப்பெண்ணை விட்டுக் கொடுக்கும் சடங்கு என வரிசையாக சடங்குகள் அமைகின்றன. திருமணம் மணப்பெண் வீட்டில் நடக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு  தற்காலிக குடிசை அமைக்கப்படும் என்றும் அதனை வண்ணார்கள் அமைத்து அலங்கரித்து கொடுக்கின்றனர் என்றும் அறிய முடிகிறது. தாலிகட்டுவது போல ஒரு சின்னத்தை அணிவிக்கும் முறை சிங்கள திருமணங்களில் இல்லை என்றே தெரிகிறது. 

பல கணவர்கள் அதாவது சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து வாழும் முறை தம்பகல்லே, மஹா கண்டென ஆகிய பகுதிகளில் இருந்ததை நூர் யால்மன் (1971) பதிகின்றார். அதேபோல பல மனைவியர் உள்ள ஆண்களின் குடும்பங்கள் சிலவற்றையும் தாம் கண்டதாக இவரது ஆய்வு வெளிப்படுத்துவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குப் பெரும்பாலும் நிலங்களும் சொத்தும் பிற குடும்பங்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.

இன்றைய காலச்சூழலில் சிங்கள சமூகத்தவர் பண்பாட்டில் திருமண முறைகள் மேற்கத்திய வழக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் பல மாற்றங்களுடன் திகழ்கின்றது. இன வேறுபாட்டைக் களைந்து சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என வேறுபாடின்றி கலப்பு திருமண நிகழ்வுகளும் இன்றைய இலங்கையில் கண்கூடு.

புகைப்படம்: இலங்கை மலையகத்தில் பதுளை நகரில் அமைந்துள்ள முதியாங்கனை ரஜ மகா விகாரையில்.

தொடரும்..

-சுபா




No comments:

Post a Comment