Thursday, May 2, 2024

திருவள்ளுவர் யார் ? - திறனாய்வு

 



முனைவர் தேமொழி

திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை, சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்றுப் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத ஓர் இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன. அவற்றை மீள்பார்வை செய்து “திருவள்ளுவர் யார்?” என்று ஆராய்ந்து கௌதம சன்னாவால் அவர் கோணத்தில் அளிக்கப்படும் விளக்கமே 150 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூல். திருவள்ளுவர் யார் என அறிந்து கொள்ள முற்படுகையில் திருக்குறளின் நீண்ட புனைகதை வரலாற்றையும் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

நூலின் முதல் பகுதி, பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை குறித்தும், சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் என்பவர்தாம்  தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை அச்சுப் பதிப்பிற்குக் கொடுத்து உதவிய பெருந்தகை. இதனால் திருக்குறள் அச்சுப் பதிப்பு முயற்சிகளின் வரலாற்றை அறிவதும் தவிர்க்க இயலாத தேவையாகிறது.

எனவே, நூலின் இரண்டாம் பகுதி குறளின் பதிப்பு வரலாறு குறித்து விரிவாக விவரிக்கிறது. திருக்குறளின் முதல் பதிப்பு எது, எந்த ஆண்டில் அது யாரால் பதிப்பிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி இது. ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்கிறது மற்றொரு குறிப்பு. இத்தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் இக்குறிப்புகள் கொடுக்கும் ஆண்டுகள் முரண் என்று ஆய்வு கூறுவதை அடியொட்டி முதலில் ஞானப்பிரகாசர் வெளியிட்ட நூலுக்கான சுவடி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆராய முற்பட்டு, 1812இல் வெளியான திருக்குறள் நூலானது கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட சுவடியின் பதிப்பே என்பது காட்டப்படுகிறது. கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட அந்த குறளின் சுவடியை எல்லீஸின் பதிப்பு நிறுவனத்தின் மேலாளர் முத்துசாமிப்பிள்ளையும், ஞானப்பிரகாசரும் அச்சு நூலக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஞானப்பிரகாசர் அச்சகத்தார் என்பதால் அக்காலப் பதிப்பு வழக்கப்படி அவர் பெயர் திருக்குறள் பதிப்பின் மேலட்டையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே ஞானப்பிரகாசர் அச்சகத்தார், பதிப்பித்தவர் அல்ல. வேப்பேரியில் இருந்த அவரது அச்சகத்தை எல்லீஸ் பயன்படுத்த வேண்டிய நிலைக்குக் காரணம், பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டில் எல்லீஸின் சொந்த அச்சகம் உருவாகாததால், எல்லீசிடம் இருந்த திருக்குறள் சுவடி ஞானப்பிரகாசர் அச்சகத்தால் அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்.

மூன்றாம் பகுதி, “திருக்குறளா அல்லது திரிகுறளா” எது சரி என்ற கேள்வியை எழுப்பி, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்ற விளக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அதற்கான பண்டிதர் அயோத்திதாசர் கொடுத்த விளக்கத்தை விரிவாக நூல் அலசுகிறது. அதாவது பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்.

வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்:

இதுவரை கூறப்பட்ட அறிமுகப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் நூலின் நான்காம் பகுதியானது நூல் உருவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. ‘புனைவுகளில் சிக்கிய வள்ளுவர்’ என்ற இப்பகுதியே ‘திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?’ என்று கேள்விகளுக்குப் பல நூல்கள் வழியாகவும் ஆவணங்கள் வழியாகவும் விடை காண முற்படுகிறது. வள்ளுவரின் வரலாறு என்று பலர் கூறிச்சென்ற, சான்றுகளற்ற புனைவுகளின் தொகுப்புகளை படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இப்பகுதிக்கு உதவிய ஆவணங்களை நூலாசிரியர் நூலில் பின்னிணைப்பாகவும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பார்ப்பன குல தந்தைக்கும், பறையர் குல தாய்க்கும் பிறந்தவர் வள்ளுவர் என்ற புனையப்பட்ட கதைகளின் பின்னணிக்குக் காரணம், வள்ளுவர் குலத்தில் பிறந்த ஒருவருக்கு மிக்க அறிவுத் திறத்தை வெளிப்படுத்தக்கூடிய நூலொன்றை இயற்றும் திறன் இருந்திருக்க வழியில்லை என்ற கருத்தில் மக்களைச் சாதி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் கோணத்தில் உருவான சிந்தனையன்றி வேறில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கிவிட மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டுப் புனைவுகளை உருவாக்கினர் என்பது ஒரு கசப்பான உண்மை.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார் என்கிறார் நூலாசிரியர் சன்னா.

முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.

இருப்பினும், இக்கதைகளுக்கும் மூலக்கதைகளை வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன, அவை பின்னர் மெக்கன்சி ஆவணங்களின் தொகுப்பில் இடம் பிடித்தவை என்கிறார் நூலாசிரியர். அக்கதைகள் இராம அவதாரம் வரை கற்பனைகளை நீட்டிச் செல்பவை என அறிய நேர்கையில், உண்மையிலேயே மக்களின் மிதமிஞ்சிய கற்பனைத் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணப் பகுதி காட்டும் கதை (1772), விசாகப்பெருமாள் ஐயர் (1831), சரவணப் பெருமாள் ஐயர் (1837), வேதகிரி முதலியார் (1850) காட்டிய பதிப்புக் கதைகளை மேலதிகத் தகவலாகப் பின்னிணைப்பாக நூலில் கொடுத்துள்ளார் கௌதம சன்னா. உருவாக்கப்பட்ட ஒரு கதை ஒவ்வொரு முறையும் வளர்ந்து பல துணை கதைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடையும் இந்தக் கதைகள் வளரும் முறையானது, புராணக் கதைகள் உருவாகிப் பல்கிப் பெருகி வளர்ந்த விதம் குறித்து ஆய்வோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு கருவூலம். மேலும் இத்துறையில் ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு உதவும் பகுதி இது. புனைவுகளின் நோக்கம் வழியே அக்கால மக்களின் சிந்தனை ஓட்டத்தையும், அவர்கள் சிந்தனை மீது சமூகம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் எடைபோடலாம்.

இவற்றில் சிலவற்றில் ஆதி பார்ப்பனக் குடும்பத்துப் பெண் என்ற கோணங்களும் உண்டு. இக்காலத் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று, பிரிந்து போன குடும்பத்தினர் தங்களின் குடும்பப் பாடலைப் பாடி தொலைந்து போனவரைத் தேடிப் பிடிக்கும் முறையில் கூட ஒரு கதை இருந்திருக்கிறது (பக்கம்-58, 118) என்பதும் படிக்கும் பொழுதே புன்முறுவலை வரவழைக்கும் ஒரு வேடிக்கை. கடவுளர் ஒருவர் மீது ஒருவர் சாபம் விட்டுக் கொண்டு பூமியில் பிறப்பது முதற்கொண்டு இக்கதைகளில் புராணப் புனைவு இலக்கணங்கள் எவையும் விட்டுவைக்கப் படவில்லை.   இவற்றுடன் ‘கபிலர் அகவல்’ பாடலையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம்.

பின்னிணைப்புகள் காட்டும் அனைத்து திருவள்ளுவர் வரலாற்றுப் புனைவுகளுக்கும் மூலக்கதை ‘கபிலர் அகவல்’ என்றே இருந்திருக்க வாய்ப்புண்டு (பார்க்க – கபிலக்கல், குடவாயில் பாலசுப்பிரமணியன்). சோழர், பாண்டியர் ஆட்சிகள் தமிழகத்தில் சரிந்த 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சாதிச் சண்டைகள் கட்டுக்கடங்காமல் உச்சக்கட்டத்திற்குப் போன ஒரு காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் சாதிகளைக் குறிப்பிட்டவாறே எழுதப்பட்டது வழக்கமானது. எடுத்துக்காட்டாக காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம். இப்போக்கைக் கட்டுப்படுத்த எண்ணி பேதங்களைச் சாடும் உள்ளம் கொண்டோரும் அக்காலத்திலிருந்துள்ளனர். எல்லா சாதியிலுள்ளோரையும் மனிதர்கள் தான் எனக் காட்ட இக்காலகட்டத்தில் எழுந்த நூல்கள் பெரிய புராணம், கபிலர் அகவல் போன்றவை.

கபிலர் அகவலில் சங்கப்புலவர்கள், சங்ககால மாந்தர்களை உள்ளடக்கி அறிவுக்குச் சாதி பேதமில்லை எனக்காட்ட வள்ளுவர், கபிலர், ஔவையார், அதியமான், உப்பை, உருவை, வள்ளி என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அவர்கள் பெற்றோரே பறையரும்-பார்ப்பனரும் கலப்பு மணம் செய்தோர்தான் எனக் காட்ட ஒரு புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனைவில் பெற்றோர் பெயர் தேர்வுக்கு ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற குறளின் வரியே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. இப்பிள்ளைகள் எழுவரும் வள்ளுவர், பார்ப்பனர் (கபிலர்), பாணர் (ஔவை), வேளிர் (அதியமான்) எனக் கொடுக்கப்படும் குலப்பிரிவுகள் யாவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடும் உண்மைச் செய்திகள்தான். மனிதர்கள் எவ்விடத்தில் வளர்க்கப்பட்டாலும் மேன்மையானவர்களே என்று காட்டும் ஒரு முயற்சியே கபிலர் அகவல் பாடல் உருவான நோக்கம். “தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்” என குடவாயிலாரும் தம் கட்டுரையில் குறிப்பிடுவார். அவ்வாறுதான் பெரியபுராணமும் அனைத்துக் குலத்தில் பிறந்தோரையும் கடவுளின் அன்பர்களாக உயர்த்திக் காட்ட முயலும். ஆனால் நம் மக்கள் படிப்பதில் கொள்ள வேண்டிய கருத்தைக் கொள்வார் இல்லை என்பதுதான் நடைமுறை வழக்கு.

கபிலர் அகவல் கொடுத்த செய்திகளையே சான்றாக வைத்து மேலும் மேலும் சாதி கதைகளை எழுதி வள்ளுவர் மேல் திணித்தார்கள். ஆக, இக்கதைகள் “கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்” என்று குடவாயிலார் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இக்கதைகளையே நூல் வெளியிட்ட விசாகப்பெருமாள் ஐயர், அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர், வேதகிரி முதலியார் போன்றோர் தாம் ஆற்றும் இலக்கியப் பணியாக நினைத்து தாங்கள் வெளியிட்ட திருக்குறள் நூல்களில், தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி இணைத்து விட்டிருக்கின்றனர். இவையாவும் மக்கள் அறிந்து அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் புழங்கிக் கொண்டிருந்த வள்ளுவரின் பிறப்பு வரலாற்றுப் புனைவுகள்தாம். வைதீக சமயம் இதுபோன்ற கற்பனைக் கதைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்போராகவே பக்தி என்ற பெயரில் தமிழரின் அறிவை மழுங்கடித்து வைத்திருந்தது, இன்றும் வைத்திருக்கிறது.

வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.

திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி’ என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். 'சிலசாசனத் தியான பஞ்சரத்தினப்பா' என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.

வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.

சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோ அல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).

இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

- பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:

திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசரின்  ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே கூட ஆய்வாளர்களால்  மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).

வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.

மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.

அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.

அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.

கட்டுரை வெளியான நாள்: பிப்ரவரி 1, 2020

---

நூல் குறிப்பு:

நூல்: திருவள்ளுவர் யார் ?

கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

ஆசிரியர்: கௌதம சன்னா

முதற்பதிப்பு – டிசம்பர் 2019

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

விலை: ரூ.200/-

---

நூலைப் பெற: 

https://www.commonfolks.in/books/d/thiruvalluvar-yaar

Tuesday, March 5, 2024

தமிழர் புலப்பெயர்வு - திறனாய்வு (காலச்சுவடு இதழ்)

 


தேமொழி 

காலச்சுவடு இதழில் முனைவர் தேமொழி  எழுதிய தமிழர் புலப்பெயர்வு என்ற எனது நூலுக்கான திறனாய்வு.

தமிழர் புலப்பெயர்வு:

உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு

க. சுபாஷிணி

பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை

பக்.370  ; ரூ.450

தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்ந்து பல தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.

புலம் பெயர்தல் பொருளியல், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய  நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இருப்பினும், “எத்தனையோ சிரமங்களும் துன்பங்களும் இருந்தாலும் மனிதர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறார்” க. சுபாஷிணி.

தமிழ் மக்களின் தொடக்கக் கால வெளிநாடுகளுக்கான பயணங்கள் பெரும்பாலும் தன் விருப்பத்துடன் பொருள் திரட்டும் நோக்கில் அமைந்தவை.  வணிகப் பயணங்கள்தான் என்றாலும் சமயம் பரப்புதல், தூது, போர் போன்ற காரணங்களுக்காகவும் தமிழர்களின் பயணங்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாகத் தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரங்கள் சிலவற்றிலும் அவற்றைச் சுற்றியும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகச் சூழலை விவரிக்கும் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளதை நூல் சுட்டிக்காட்டுகிறது. 

பண்டைய தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் குழுக்களாக ஐயப்பொழில் ஐநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார் இருந்துள்ளதை அறிகிறோம். தமிழர்களின் பல தடயங்கள் அயல்நாடுகளிலும் கிடைத்துள்ளமை தமிழர்களின் வணிகப் பரவலை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. இவை வரலாறு நெடுகிலும் பல காலகட்டங்களைச் சார்ந்தவை. இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த “ணந்தை கீரன்”  என்று ‘தமிழி’ எழுத்தில் கிடைத்த  மட்பாண்ட ஓடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று.  பொ.ஆ.3 அல்லது 4ஆக இருக்கக்கூடிய, ‘பெரும் பத்தன் கல்’ (பெரிய பொற்கொல்லனின் கல் எனப் பொருள் தரும்) கல்வெட்டு ஒன்று  தென் தாய்லாந்தில் கிடைத்துள்ளது.  அதன் தகுவாபா பகுதியில் கிடைத்த பொ.ஆ. 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்மனின் அரசு அதிகாரி மணிக்கிராமத்தார் வணிகக் குழுவினரின் பயன்பாட்டிற்காக ஒரு குளத்தை அப்பகுதியில் வெட்டியதாகக் கூறுகிறது.  இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் லாபூ தோவா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட  பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு  திசை ஆயிரத்து ஐநூற்றுவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது.  நியூசிலாந்து நாட்டின் மேற்குக் கரையோரம் கிடைத்த வெண்கல மணி ஒன்றின் உடைந்த பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும்  ‘முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி’ என்ற சொற்கள் இன்னொரு சான்று.  இது பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பழவேற்காட்டிலிருந்து இந்தோனேசியா வழியாக நியூகினியா சென்று பின்னர் நியூசிலாந்து அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கும் சென்ற முகைதீன் பக்ஸ் என்பவரின் கப்பலின் மணி என்று இந்த நூலின் வழி அறிகிறோம்.

முற்காலத்தில், வணிகம் தவிர்த்துச் சமயம் தொடர்பான பணிகளுக்காகவும் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றனர். ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்று புத்த மதம் பரப்பியவர் பல்லவ இளவரசன் போதி தர்மர் என்ற புத்த வர்மன். அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பௌத்த சமய விரிவாக்கம் தமிழ் நிலப்பகுதியிலிருந்து வணிகர்களின் உதவியால் கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவு கண்டது. இது தமிழ் பௌத்தப் பிக்குகளின் நாடுகடந்த பயணங்களுக்கும் காரணமாகியது. இப்பயணங்கள் பெரும்பாலும் கடல்வழிப் பயணங்களாகவும் நிலவழிப் பயணங்களாகவும் அமைந்தன.  போதி தர்மர்போல தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்த மற்றொரு தென்னிந்தியப் பௌத்த பிக்கு வஜ்ரபோதி. இவர் ஒரு பெர்ஷிய வணிகக் கப்பலில் பயணம்செய்து ஸ்ரீவிஜயப் பேரரசின் துறைமுக நகரம் ஒன்றிற்கு பொ.ஆ. 719இல் வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அக்கப்பல் சீனாவின் குவான்சோவ் நகருக்கு வந்தபோது அதே கப்பலில் பிக்கு வஜ்ரபோதியும் பயணம்செய்து சீனா வந்துசேர்ந்தார் என்ற அறியப்படாத தகவலையும் பெற முடிகிறது.

கிறிஸ்துவப் பணிகளில் ஐரோப்பியரோடு உள்ளூர்த் தமிழ் மக்களும் உதவியாளர்களாக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் இக்காலகட்டங்களில் அடங்கும்.

வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் பயணம் செல்வதும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு தங்குவதும் நிகழ்ந்தாலும்கூட பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அதிகரித்தது.  அத்துடன் அவை தமிழர்கள் வணிகம் மூலம் செல்வம் திரட்டச் செல்லாமல் வாழ்வாதாரம் தேடி விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யும் பயணங்களாகவும் அமைந்தன. துருக்கியின் ஒட்டமான்  பேரரசின் உச்சக்கட்ட விரிவாக்கம் காரணமாக 14ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்துடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டது.  தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என்று விரிந்து பரவிவிட்ட ஒட்டாமன்  பேரரசு வணிக வரிகளை உயர்த்தியதால்  மாற்று வணிக வழி தேடி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழி தேடியதும், வாஸ்கோ-ட-காமா 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் புதிய வழிமூலம் வந்து கரை இறங்கியதும் உலக வணிக வரலாற்றில் புதிய திருப்புமுனையாகும். போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கடற்கரையோர நகரங்களில் தங்களின் வணிக மையங்களை உருவாக்கிக்கொண்டன.

ஐரோப்பியரின் விரிவாக்கத்தை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோள் “God, Gold, and Glory” என்று இருந்ததாக விளக்குவார்கள். வெடிமருந்து கொண்ட புதிய தொழில்நுட்பப் போர்க்கருவிகளும், பலமற்றுப் பிரிந்துகிடந்த உள்நாடுகளின் அரசுகளும் மற்ற நாடுகளில்  ஐரோப்பியர் வணிகத் தொழிலையும் சமய வளர்ச்சியையும் விரிவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கின. உலக நாடுகளில் தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் உழைப்பாளர் தேவைகளுக்கு இந்தியாவின் உள்ளூர் மக்களை முதலில் அடிமைகளாகவும்,  அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த உழைப்பாளர்களாகவும் அழைத்துச் சென்றனர் ஐரோப்பியர்.  அவ்வாறு புலம் பெயர்ந்த இடங்கள் எந்த ஐரோப்பிய நாட்டின் வணிகக் கட்டுப்பாட்டில் இருந்ததோ (இங்கிலாந்தின் பிரித்தானிய காமன்வெல்த் நாடுகள்போல) அந்தந்த நாடுகளாக அமைந்தன. அவை உழைப்பாளர் தாங்களே தேர்வுசெய்து சென்ற நாடுகள் அல்ல.  இவ்வாறாக, தமிழர்கள் புலம் பெயர நேரிட்ட காரணம் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய வறட்சியும் பஞ்சங்களுமாகும். தமிழ் மக்கள் பெருமளவில் அயல் நாடுகளில் பரவுவதற்கு அவர்களின் வறுமையான சூழ்நிலை காரணமாகியது.

பஞ்சம் காரணமாக அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டவர்கள் 17ஆம் நூற்றாண்டில்  நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவுக்கு அனுப்பப்பட்டுப் போர்த்துக்கீசியர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறே  மணிலாவில் ஸ்பானியர் வசம் சென்ற அடிமைகளைப் பற்றி அவர்களின் ஆவணங்களும் காட்டுகின்றன. இந்தோனேசியா, மலாக்கா, மெக்சிகோ, இலங்கை, ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன், டென்மார்க் என மேலும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகச் சென்றனர். ஸ்பெயின், போர்த்துகல், டேனிஷ், டச்சு,  பிரஞ்சு, பிரிட்டிஷ் என அனைத்து ஐரோப்பிய வணிக நிறுவனங்களும் தமிழ் அடிமைகளை விற்பதில் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் வழி அறியும்போது தலைக்குனிவும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன. குறிப்பாக 1834ஆம் ஆண்டு முற்றிலும் தடைசெய்யப்படும்வரை அடிமை வணிகம் தமிழ் மக்களின் வலுக்கட்டாயமான புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகியது.  ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கு முன்னர் பெருமளவில் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அடிமை வணிகத்தின் வழிதான் நடந்தேறியது.

‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ’ என்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப்  பெண் தொழிலாளர்கள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட அல்லல் நிறைந்த வாழ்வின் அவலத்தை  “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற  கவிதையாக வடித்து மனம் குமுறினார் பாரதி.

அந்தத் ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே தன் சிறுகதைக்கும் தலைப்பாகத் தேர்வு செய்து,  பஞ்சம் பிழைக்க இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியேற்று, கோழிக் கூடுகள் போன்று இருந்த காரைக் குடிசைகளில் வாழ்ந்து, உழைத்து ஓடாகிப்போன தமிழர்களின் துன்பநிலைமையைச் சிறுகதையாக வடித்தார் புதுமைப்பித்தன்.  அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற புதினம் மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் சித்திரித்தது. பஞ்சம் பிழைக்க  அடிமைகளாக நெரிசலான அறையில் கப்பலில் அடைக்கப்பட்டவர்களும், பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று, சரியான உணவும் ஊதியமும் இல்லாமல் துன்பத்தில் உழன்றவர்களும் உண்டு.  ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களும், ஆப்ரிக்காவிற்குச் சுரங்கத் தொழிலாளர்களாகச் சென்றவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு  உள்ளானவர்களே.

க. சுபாஷிணி ஒரு மலேசியத் தமிழர். மலேசியாவில் பிறந்து, அங்கும் ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்று ஜெர்மனியில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குச் செல்லவும்,  அங்கு வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டையும் புலம்பெயர் வரலாற்றையும் அறியவும் வாய்ப்புக் கொண்டிருந்தவர். கடந்த 15 ஆண்டு காலப் புலம்பெயர் தமிழர்கள் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேகரித்த குறிப்புகளையும் நூல் வடிவில் வெளிக்கொணர்வதின்  இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இந்த நூலை விரிவாக எழுதியுள்ளார்.  பல்கலைக்கழகங்களும் அரசும் செய்ய வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்திச் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

தேமொழி: புலம்பெயர் தமிழர், சான்ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா

தே மொ ழி 

//  https://www.kalachuvadu.com/magazines/காலச்சுவடு/issues/291/articles/17-கடல்-பயணம்-அவலங்களின்-வரலாறு

Saturday, February 10, 2024

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பௌத்தச் சுவடுகள்

 


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வெளிப்புற சுற்றுச் சுவரில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்வையிட்ட போது..






Sunday, January 28, 2024

பேரரசர் பிம்பிசாரர் திருக்கோயில், அசோக விகார் - செய்யாறு



செய்யாறு நகரில் இன்று ஒரு புத்தர் ஆலயம் திறக்கப்பட்டது. 

பேரரசர் பிம்பிசாரர் புத்தர் திருக்கோயில் மற்றும் அசோக விகார்.










Thursday, December 28, 2023

பினாங்கு கேக் லோக்சி சீனர் கோயில்

 


இங்க புத்தர் ஆலயத்தில் உள்ள தராதேவி சிலை ( க்வான்யிங்) மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.

மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் அடிக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா புத்தர் சிலைகள் ஒவ்வொரு இடங்களிலும் அலங்கரிக்கின்றன.












Sunday, December 10, 2023

ராஜராஜனின் கொடை - திறனாய்வு

 


அர்ஷா

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்  இன்று,  காரணம்  ஈழத்துப்போர்  அவர்கள் சென்ற வழித்தடங்கள் மிகவும் ரத்தகரை படிந்தது. இரண்டாம்  தலைமுறை தம் கால்களில் நிற்க ஆரம்பித்த பிறகுச் சற்று ஆசுவாசக் கொள்கிறோம்.

இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனா ஜப்பான், கொரியா,மீயான் மார்க், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலாய் தீவுகள், என மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி நம் முன்னோர்கள் தமிழ் மொழி பண்பாடு  தாம் பின்பற்றிய மதங்களையும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த  மகிழ்ச்சி. 

பள்ளிக்காலத்திலேயே வரலாறு பாடப்புத்தகத்தை  பள்ளிக்கல்வித்துறை சேர்த்து இருந்தது.   நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதும் ஆட்சி முறைகள்,  மன்னர்களைக் குறித்தது. அந்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதுமாக  ஒருவரை வெறிகொண்டு  தாக்கி கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறுகளாக இருந்தன. மேலும் அவை கற்பனை மிகுந்த புனைவுகளையும் கொண்டிருந்தது அதனால் எதை நம்புவது எதை விடுவது என்று சந்தேகத்தில் வரலாற்றுப் பதிவுகளைப் படிக்கும்போது எப்போதுமே முழுமைய நம்பிக்கை வருவதில்லை.  

சோழ மன்னர்களின் ஆட்சி இலங்கை வரை நீடித்திருந்ததையும், சோழப் பேரரசு இலங்கையிலிருந்து மிகப்பெரிய செல்வங்களை அங்கிருந்து சூறையாடி வந்தார்கள்  என்ற கதைகள்   உண்மைதானா என்று அறியும் ஆவல்  எப்போதும் எனக்கு இருக்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வம் கொழித்த நாடா இன்று,  பசியிலும் பஞ்சத்தாலும் வாடுகிறது, அன்றைய காலத்தில் தமிழன்  அங்கு இருந்திருந்தால்  இன்று 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற தமிழினம் அவர்களை  சந்திக்கவே இல்லையா என்று எத்தனையோ கேள்விகள் எழும்போது வரலாற்றை மீண்டும் தேடுகிறோம்.

இலங்கையின் வரலாற்று புத்தகங்களை படிக்கும் போது, அவை பல குழப்பங்களை கொண்டு வரும்  சில பெயர்கள் மீண்டும் மீண்டும் வரும் ஆனால் மிக நீண்ட காலம் வித்தியாசம் இருக்கும் அப்படியானால் அவன் இருந்திருப்பான் இவன் புதியவனாக இருக்க வேண்டும் புதியவனுக்கு ஏன் அவன் பெயரை வைத்தார்கள், ஒருவனுக்கே பல பெயர்கள் இருக்கும். குழப்பங்களை தாண்டி தீர்வுகளை தேடுவது தானே வாழ்க்கை அந்த வகையில் சமீபத்தில் படித்த மிக முக்கியமான ஒரு நூலாக ராஜராஜனின் கொடையை நான் பார்க்கிறேன். முனைவர் சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கடுமையான மழையில்  மூழ்கி இருந்தபோது என்னை முழுவதுமாக மூழ்கடிக்க செய்த நூல்.

பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட தகவல்கள் அத்தனையும் ஆதாரங்களோடு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பேனாவையும் டைரியும்  பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.  எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரிக்கு வரி தகவல்கள் நிறைந்ததாகவே இருந்தது இந்த புத்தகமே ஒரு குறிப்பு தான். இந்த குறிப்பேட்டை வைத்துக்கொண்டு தேடிப் படிக்க அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன என்பதை  வாசிப்பின் ஓட்டத்தில் உணர்ந்து கொண்டேன்.

 ராஜராஜ சோழன் என்றால் அனைவருக்கும் ஒரு தனித்த உணர்வைத் தரும். சிலருக்கு அவன் மீது கோபம் பலருக்கு அவன் மீது காதல்.

தலைவனுக்கு உரிய சகல பண்புகள் நிறைந்த ஒருவனாக ஆட்சியும் எல்லைக்கோட்டை தமிழகம் இந்தியா என்ற வட்டத்துக்குள் வரையாமல்  தன் விடாமுயற்சி  நேர்த்தியான திட்டமிடலால்  உலகெங்கும் பரவச் செய்த ஒருவன். 

 "ராஜராஜனின் கொடை"  என்ற இந்த நூலில், மொத்தம் ஒன்பது கட்டுரைகள்  அவை விஜயநகர பேரரசு நாகப்பட்டினம் சூளாமணி பன்ம விகாரை  சோழர் செப்பேடுகள் சோழர்களின்  கடாரப் படையெடுப்பு ஆனைமங்கல செப்பேடுகளுக்கும் கடாரப்படையெடுப்புக்கும் இடையிலான விவரிப்பு,  இவை தாண்டி  இங்க இருக்க வேண்டிய பரபரப்பாக பேசப்பட்ட  பெரிய லைய்டன் செப்பேடுகள் சிறிய  லெய்டன்  செப்பேடுகள்   நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி  செப்பேடுகள் கூறும் தகவல்கள் வரிக்கு வரி என்னென்ன  என்பது குறித்தெல்லாம் மிக விவரமாக கூறப்பட்டுள்ள  நூலாக அமைந்திருக்கிறது.

 நூலின் ஆசிரியர் ஆனைமங்கல செப்பேடுகள் பற்றி அறிந்ததும்  அவை எங்கு இருக்கின்றன என்ற ஆராய்ச்சியில் மூன்று ஆண்டுகளாக தேடி  இறுதியில் அவை நெதர்லாந்து நாட்டில் உள்ள லெய்டன்  பல்கலைக்கழக நூலகப் பிரிவினரால்  பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தவுடன், அவர்கள் அனுமதியோடு நேரில் சென்று ஆனிமங்கல செப்பேடுகளை  பார்வையிட்டு அதனை பல மணி நேரங்கள் செலவு செய்து  குறிப்புகளாக இப்ப புத்தகத்தில்  தந்துள்ளார்  படிக்கும் போது ஆச்சரியமாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் பெருமை நிறைந்த தருணம் ஆகவும் இருந்தது அந்தப் பக்கங்கள். அவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆசிரியர் தொடர்ச்சியாக  தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆணைமங்கல செப்பேடுகளை தம் தாய் நாட்டுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில்  உடனடியாக தமிழக அரசோடு தொடர்பு கொண்டு  அதனை சட்டரீதியாக எடுத்து வரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பன குறித்த தகவல்களையும் கட்டுரைகள் படிக்கும் போது  புல்லரிக்கச் செய்தது உண்மை. 

அன்றைய தமிழர்கள்  இரண்டு காரணங்களுக்காக கடல் கடந்து பிற நாடுகளில் சென்றடையும் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.   முதலாவது காரணம் தம் மதங்களை பரப்புவது,  அது அன்றைய சூழ்நிலையில் பௌத்த மதமாக இருக்கலாம். இரண்டாவது முக்கிய காரணம் மிகவும் ஆளுமை நிறைந்த வணிகர்களைக் கொண்டிருந்த  தமிழ்ச் சூழல்,  ஐரோப்பா மத்திய கிழக்காசிய நாடுகளை மட்டும் இன்றி இந்தோனேசிய நாடுகளுக்கும் மலாய் தீவுகளுக்கும் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக  வணிக நிமிர்த்தமாக  சரளமாக போய்வந்திருக்கிறார்கள்.

செப்பேடுகளை ஆராயும் போது, இந்த வணிகப் பயணத்திற்கு  மிகவும் அதிகமாக விஜயநகர பேரரசு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பெரும்பாலமாக மையப் பகுதியாக துறைமுகங்களைக் கொண்ட நகரமாக விளங்கி இருப்பதுஅதற்கு ஒரு காரணம்.

 திருகோணமலையில் இயற்கை துறைமுகத்தை கொண்ட இலங்கை இன்று எங்கனம்  வணிக போக்குவரத்துக்கு முக்கிய இடமாக பங்களிப்பு செய்கிறதோ அதுபோல இது என்று புரிந்து கொள்ளலாம்.

 அதேபோன்றுதான் நாகப்பட்டினம் துறைமுக நகரம் என்றே சொல்லும் அளவிற்கு மிக நீண்ட காலமாக வணிக மையமாகவும் பௌத்த சமய மையமாகும் நாகப்பட்டினம் திகழ்ந்து இருக்கிறது. நாகப்பட்டினம் கட்டுரை வழியாக அறிய முடிகின்றது அதேபோல் நூலாசிரியர் அங்கு அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பல்வேறு அகழாய்வு பொருட்கள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன அல்லது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றார்.

 இந்த நூலின் முக்கிய பொருள் ஆணைமங்கல சொற்பொழிவுகள்  செப்பேடுகள் என்ன கூறுகின்றன என்பதிலிருந்து தான் முக்கியம் பெரும் மற்ற விஷயங்களை ஆராகின்றார்கள்.. அந்த வகையில் சூளாமணி பன்ம விகாரை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது, பெரிய லெய்டன் செப்பேடுகளில் சூளாமணி பன்வகாரை குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது, இது மிக முக்கியமான ஆதாரங்களாக பார்க்கப்பட வேண்டியது மாமன் ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசுக்கும் சோழ பேரரசுக்கும் நட்புறவு இருந்ததையும் அதனை அவர்கள் செப்பு சாசனம் மூலம் உறுதி செய்து கொண்டதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

 தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும் அந்த பொருளை புதிதாக வாங்கிய போது கிடைத்ததை விட, ஏற்கனவே இருந்த பொருள்  மீண்டும் கிடைத்தது புதிதாக எந்த வரவும் இல்லை ஆனாலும் மகிழ்ச்சி வார்த்தைக்குள் உள்ளடக்க முடியாத ஒன்றுதான்  அப்படித்தான் ஆனைமங்கல செப்பேடுகள்  நெதர்லாந்தில் கிடைக்கப்பெற்ற போது ஆய்வாளர்களுக்கு இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அந்த சிப்பெடுகள் நெதர்லாந்துக்குச் சென்ற பின்னணி மிகவும் சுவாரசியமான கதை. ஹெச் ஏ ஹமாகர் பற்றிய கதை.

 நூலாசிரியர் செப்பேடுகளை பார்த்ததோடு தன் கடமையை முடித்துக் கொள்ளாமல்  அதனை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளார் அதனையும் நூலில் காண முடிகிறது

 சோழர்களின் கடாரப் படை எடுப்பின் போது சுங்க வரி செலுத்திய விபரங்கள் சோழப் பேரரசின் வணிகக் குழுவை வரவேற்று 81 ஆயிரத்து 800 பணமும் 5,200 டன் வெள்ளியும் பரிசாக அளித்தது என்ற செய்தி வாசிக்கும் போதே ஆச்சரியத்தை தந்தது.

 தெற்காசிய நாடுகளில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் சிலவற்றை குறித்த விபரங்கள் புகைப்படங்களோடு எழுதப்பட்டுள்ளன அவை பெரும்பாலும் வணிக செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை  ஆதாரங்களே கொண்டிருக்கின்றன என்பது  நம் வணிக மேலாண்மை குறித்த பல்வேறு செய்திகளை அறிய பயன்படுகிறது

 நூலில் இலங்கை ஆதி குடிமகன் யாராக இருந்திருக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது பல கேள்விகளுக்கான விடை கிடைக்கின்றது.

 நூல்  பல்வேறு தேடல்களுக்கான நுழைவுச்சீட்டு ஆக எழுதப்பட்டிருக்கின்றது  இதனை எடுத்துக் கொண்டு நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்  அரை மனநிலை சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது  அனைவரும் படிக்க வேண்டிய  தேடல்களுக்கான ரூட் மேப் என்று சொல்லலாம்.

 அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய  முக்கியமான  நூல்.  ஆசிரியருக்கு பேரன்புகள் பெரும் கடமைப்பட்டவர்கள் நாங்கள் உங்களுக்கு 🙏❤️

அர்ஷா ❤️

நூலாசிரியர்: க.சுபாஷிணி

பதிப்பகம்: தமிழ் மரபு ரக்கட்டளை

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

Monday, December 4, 2023

ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நேரடி களப்பணியின் போது செய்யப்பட்ட ஆவணப் பதிவு.

ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று பாழடைந்த நிலையில் தற்சமயம் உள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் கடந்த 2022 - டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த ஆனைமங்கலம் பகுதிக்கு நேரில் சென்றிருந்த போது கோயிலின் இன்றைய நிலையை ஆவணப்படுத்த பதியப்பட்ட  காணொளிப் பதிவு இது.



Thursday, November 30, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

முனைவர் அரங்க மல்லிகா



தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் தேமொழி எழுதிய பௌத்தம் சார்ந்த ஓர் ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிறது. முனைவர் தேமொழி ஓர் ஆய்வாளராகக் காய்தல் உவத்தலின்றி இந்நூலில்  புத்தர் காலத்தினுடைய குறிப்புகளை, வரலாற்றை இலக்கியம் தொடங்கி தமிழகத்தில் புத்தருடைய சிலைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு மீளாய்வு செய்திருக்கிறார். இது ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது.


முதல் இயல்— புத்தரின் திருவுருவத் தோற்றம்

இரண்டாவது இயல்— தமிழ்நாட்டுப் பௌத்தச் சிற்பங்கள்

மூன்றாவது இயல்— முக்கோற்பகவர்

 நான்காவது இயல்— புத்த தத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ஐந்தாவது இயல்— எண்குணத்தான்

ஆகிய தலைப்புகளில் பௌத்தத்தின் மீளாய்வாகத் தமிழகத்தில் புத்த தத்துவம் இருந்ததினுடைய வரலாற்றையும் வேர் அழித்ததினுடைய வரலாற்றையும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.


புத்தரின் திருவுருவத் தோற்றம்:

புத்தருடைய திருவுருவத் தோற்றம் என்ற இயலானது தமிழகத்தில் எங்கெல்லாம் புத்தருடைய சிலைகள் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றை மையமாகக் கொண்டு அவர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். குறிப்பாக,  தமிழ்நாட்டில் பௌத்தம் இருந்ததா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்து அவருடைய ஆய்வு தொடங்குகிறது.  இந்தியாவில் பிறந்தாலும் கூட இலங்கை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தம் பரவி இருக்கிறது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் செப்பேடு சான்றுகளுடன் புத்தருடைய சிலைகள் மூலமாக விரிவான ஆய்வை அவர் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை பௌத்தம் தமிழகத்தில் இருந்தது  என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

உருவத் தோற்றம் என்ற ஒன்றின் மூலமாக புத்தரின் கொடை பௌத்தம் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

தொடக்கக் காலத்தில் புத்தர்கள் பற்றிய செய்திகளை அறிய சாஞ்சி ஸ்தூபியைச்  சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கட்டுரையில் நான்கு முக்கியமான விடயங்களை புத்தர் சார்ந்து எழுதுகிறார்.

1.  புத்தரின் பிறப்பு; புத்தரின் பிறப்பைக் குறிக்கும் இடம்  லும்பினி என்ற அந்த இடத்திற்கான வரைபடத்தைக் காட்டியிருக்கிறார் .

2.  புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெறக்கூடிய காட்சி;  போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெறுவது என்பது ஞானம் பெறுவதற்கான அடையாளத்தைக் காட்டக்கூடிய  படச்சிற்பம் காட்டப்பட்டிருக்கிறது.

3.  அவர்  நிகழ்த்திய முதல் உரை. ஐந்து சீடர்கள் அவர் முன் அமர்ந்து கேட்பதைப் போல ஒரு  வரைபடம் காட்டப்பட்டிருக்கிறது. சாரநாத் வரைபடம்.

4.  பரிநிர்வாணம் சொல்லப்பட்டு இருக்கிறது. படுத்த நிலையில் மூடிய கண்கள் சற்றே திறந்தபடி இருக்க வலது கையைத்  தலைக்கு அடியில் கொடுத்தவாறு இடது கையை இயல்பாக உடலில் வைத்த வாரும் காட்டப்பட்டிருக்கிறார்.

சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என இருவகையாக இருப்பதைக் கொண்டு அவர் இதை எல்லாம் சொல்லி இருக்கிறார். குறியீடுகளாக புத்தருடைய பிறப்பைச் சொல்லும் போது அவருடைய பிச்சை ஏற்பதைக் குறிக்கக்கூடிய திருவோடும் ஒரு குறியீடாகக் காட்டப்பட்டு இருக்கிறது.

பாதச்சுவடுகள் என்பது புத்தரின்  வனவாசத்தைக் குறிக்கிறது. போதி மரக் குறியீடாக ஞானம் பெறுதலைக் குறிக்கிறது. பரிநிர்வாணம் என்பது ஸ்தூபி குறியீடாக நாம் புரிந்து கொள்ளுகிறோம். இப்படி குறியீட்டின் மூலமாக எவ்வாறு புத்தர் அறியப்படுகிறார் என்பதை விளக்கும் இந்த முதல் கட்டுரை மிக அற்புதமான ஓர்  ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருக்கிறது.  

இதில் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். ஒன்று கந்தகார்; பாகிஸ்தானுடைய வடமேற்குப் பகுதியாக இருக்கிறது. மேற்கே இந்துகுஷ் மலை இருக்கிறது.  கிழக்கே சிந்து ஆறு ஓடுகிறது.   வடக்கே உலகில் கூரை பாமீர் பீடபூமி, இமயத்தின் எல்லையாகக் கொண்டுள்ளதை அவர் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.  இங்கு மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக் காலம் இருந்திருக்கிறது. அலெக்ஸாண்டர்  ஆட்சி செய்த இந்த இடங்களை சந்திரகுப்த மௌரியர் (பொ.ஆ.மு.305-303) கைப்பற்றுகிறார்.

சந்திரகுப்த மௌரியரின் பேரன் அசோகர் புத்தசமயத்தை கல்வெட்டின் மூலம் (பொ.ஆ.மு259) நிறுவுகிறார். இது பௌத்தத்தின் திருப்புமுனை. பௌத்தம் இருந்திருக்கிறது  என்பதற்கான ஆதாரம்.  அதனால் புத்தர் உருவங்கள் காந்தாரப் புத்த சிற்ப வகைகளை ஒத்திருக்கும் என்று ஆனந்த குமாரசாமி கூறுவதை நினைவுபடுத்துகிறார்.  காந்தாரச் சிற்பங்களில் பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து தான் புத்தரின் உருவங்கள் கிடைக்கப்பெறுகின்றன. காந்தாரத்தின் கிரேக்க பௌத்தக் கலை (Greco- Buddhist Art) அல்லது ஹெல்னிஸ்டிக் கலை(Helenistic Art)   கிரேக்கக் கலை பாணிகளில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற புத்த வடிவங்களைக் காந்தாரப்பகுதியில் காண முடிகிறது என்று விளக்குகிறார். இதுதொடர்பான புத்தர் தொல்லியல் தடயங்களைப் பதிவுசெய்கிறார்.  கனிஷ்கருடைய முயற்சியினால் புத்த சமயம் தேரவாத பௌத்தம் மகாயானப் பௌத்தம் என்ற இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகிறது.   மகாயானப் பௌத்தம் கனிஷ்கரால்  வளர்த்தெடுக்கப் படுகிறது.

புத்தரின் உருவங்கள் முழு உருவச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப்  பார்க்கப்படுகின்றன.  புத்தரின் தலைக்குப் பின்புறம் ஒளி  வட்டமும்,  ஞானம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் ஞான முடிச்சும்,   இரு புருவங்களின் இடையில் சிறிய வட்டத் திலகமும் கொண்டையைச் சுற்றிலும் வலப்புறம் சுருண்டு இருக்கும் சிறுசிறு சுருள்களாக முடியும் , அரச வாழ்வு காலத்தில் காதுகளில் தொங்கிய கனமான குழைகளால் துளைகொண்டு  நீண்டு தொங்கும் காதுகளையும்,  அமைதி தவழும் முகத்துடன் மென்மையான சற்றே திறந்த விழிகளால் புன்சிரிப்புடன் அருளுடன் நோக்குமாக  புத்தர் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். எப்போதும் துறவாடை அணிந்த நிலையிலேயே காட்டப்படும் புத்தர் அமர்ந்த நிலையிலோ நின்ற நிலையிலோ படுத்த நிலையிலோ காட்சிப்படுத்தப்படுவர்.  

இன்றைக்கு இருக்கக்கூடிய இந்துக் கடவுள்கள் குறிப்பாக அவதாரத்துடன் காட்சிப்படுத்தப்படும் கடவுள் சிற்பங்களை நாம் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது புத்தருடைய தோற்றம்தான் சைவ வைணவத்தினால் மாற்றம் பெற்று இருக்கிறது என்பதை உணரமுடியும்.


தமிழ் மரபு அறக்கட்டளைச் சொற்பொழிவு:

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

— முனைவர் அரங்க மல்லிகா

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –

திசைக்கூடல் – 345 [நவம்பர் 26, 2023]

https://youtu.be/QnP-IR4RS5A


நூல்: தமிழகத்தில் பௌத்தம்

ஆசிரியர்: தேமொழி

விலை:₹120

வெளியீடு: 2023

பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை

கிடைக்குமிடம்:

https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham

Sunday, November 26, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 8

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 8 - இறுதிப் பகுதி

இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்திய தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய புராணக்கதைகளை மூல பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் மற்றும் மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் சிங்களவர்கள் வட இந்தியப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்ற வகையிலான கருத்தாக்கமும் ஒரு காரணம். இது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் பரணவிதான எழுதிய இலங்கை வரலாறு, அதாவது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் இன்றுள்ள தலைமுறையினர் வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர். 

மேற்குறிப்பிட்ட இந்த கருத்தாக்கங்கள் இலங்கையிலேயே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர் இலங்கைக்கு  அன்னியர் என்ற பார்வையை முன்வைத்து துட்டகாமினி தொடுத்த போர் சிங்கள மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.

இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவன் தமிழ் மன்னன் எல்லாளன். இவனைப் பற்றி பௌத்த பிக்கு மகாநாமதேரர்  தனது நூலான மஹாவங்ச என்ற நூலில் விளக்கியிருந்தாலும் அதற்கு விளக்கம் கூறும் சிங்கள தேசியவாத வரலாற்றாசிரியர்கள் இதற்குத் தவறான விளக்கங்களைக் கூற முற்பட்டனர் என்பதும் இது ஒரு பக்கச் சார்பாக அமைந்துவிட்டது என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சிங்கள மொழி வளர்ச்சி பெற்ற விதத்தை நான்கு கட்டங்களாக அறிஞர்கள் பிரிக்கின்றனர்.

1. ஸ்ரீலங்கா பிராகிருதம் இது பொ.ஆ.மு. 400க்கும் முந்தியது

2. தொடக்ககால சிங்களம் பொ.ஆ 400 இல் இருந்து 700 வரை

3. இடைக்கால சிங்களம் பொ.ஆ 700 இல் இருந்து 1200 வரை

4. தற்கால சிங்களம் பொ.ஆ 1200 முதல்

இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல -  மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.

நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்காணும் வகையில் காணலாம்.

1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பகால மொழியாக இருந்தது.

2. புத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டில் பவுத்தர்கள் வருகையால் மகதி மொழி இலங்கைக்கு வந்தது. இது பாலி மொழியாக வளர்ச்சி பெற்றது.

3. இலங்கையில் கலையும் அறிவியலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிமுகமானது.

4. சமஸ்கிருதம் கலந்த மொழியில் இருந்த மகாயான அல்லது வைத்தூலிய பௌத்த மதப் பிரிவு இலக்கியங்கள் வழியாகவும் சமஸ்கிருதம் பரவியது. இதன் காலம் பொ.ஆ 3ம் நூற்றாண்டு.

5. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவின் இன்றைய கேரள  (அன்றைய தமிழகம்) பகுதியிலிருந்து அரசியல் மாற்றங்களின் காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய பௌத்தர்களும் சமணர்களும் இலங்கைத் தீவிற்கு வந்த நிகழ்வும் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் சிங்களத்தில் சமஸ்கிருத பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.

6. சிங்கள இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற காலம் பொ.ஆ. 1250.

7. சிங்கள மொழி இலக்கணமும் தொடரிலும் திராவிடம் சார்ந்திருக்கின்றன.

8. கால ஓட்டத்தில் மேலும் பல ஐரோப்பிய மொழிகளையும் உள்வாங்கிய வகையில் இக்கால சிங்கள மொழி உள்ளது

சிங்கள இலக்கியங்கள் எனக் காணும் போது அதில் பழமையானது 'சித்தத் சங்கரவா'  எனும் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்த நூல் இரண்டு வகையான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. 

1. எளு வரி வடிவம் ( பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்காதவை) 

2. மிஸ்ர என்னும் பாலி மற்றும் சமஸ்கிருத ஒலிகள் கலந்த கலப்பு வடிவம். இந்த நூல் வீரசோழியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் சங்கராஜா அனோமதச்சி.

இன்றைய சிங்கள மொழியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் இலங்கையில் பௌத்த மத அறிமுகம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது கண்கூடு.

சாதாரணமாகப் பார்த்தாலே சிங்கள மொழியின் எழுத்து வரிவடிவம் தமிழ் வட்டெழுத்து வகையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைய மலையாள எழுத்துக்கு மிக நெருக்கமான வகையில் இந்த எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிங்கள மொழி உருவான சமயத்தில் பொறிக்கப்பட்ட சிகிரியா கல்வெட்டுக்களை காணும்போது அதில் பல இடங்களில் தமிழ் மலையாள சிங்கள எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.  

சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. புராணங்களைச் சார்ந்த கருத்தாக்கங்களை விலக்கிவிட்டு, மொழியியல், மரபணு மற்றும் மானுடவியல் பார்வையில் ஆய்வுகளைச் தனிச்சார்பற்ற நிலையில் மேற்கொள்ளும்போது தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த முடியும். 

சிங்கள வாழ்வியல் மொழி பண்பாடு என விரிவான பல்வேறு தகவல்களை வழங்கும் சிறந்த ஒரு ஆய்வு நூலாக இந்நூல் அமைகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். 

-சுபா

புகைப்படம்: கந்தரோடை, பௌத்த சின்னங்கள், யாழ்ப்பாணம்.

Saturday, November 25, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

 "தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு: முனைவர் அரங்க மல்லிகா




இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 7

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 7

கண்ணகி வழிபாடு சிங்கள பண்பாட்டில் பின்னிப்பிணைந்து இருப்பது போல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு வழிபாடாக அமைகிறது முருகன் வழிபாடு. தமிழர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதிர்காமக் கந்தன் சிங்களவர்களது 'கதரகமத் தெய்யோ' என்று வழிபடும் ஒரு கடவுளாகவும் அமைகிறார். சிங்கள பண்பாட்டில் முருகன் வழிபாடு - தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், என்ற பொருளில் இந்த நூலின் ஏழாவது அத்தியாயம் அமைகிறது.

இலங்கையின் மூன்று பூர்வகுடிகள் முருகனைத் தங்களது கடவுளாகச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

1. சிங்கள பௌத்தர்கள் 

2. இலங்கை தமிழர்கள்

3. இலங்கை வேடர்கள்

நூலின் இந்த இயலில் சில முக்கிய நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு B.Paffenberger , எழுதிய The Kataragama pilgrimage Hindu Buddha's interaction and its significance in Sri Lanka polyethnic social system, 1979, என் டி ராகவன் ஆய்வில் வெளிவந்த India in Ceylonese history: Society and culture 1969 மற்றும் பேராசிரியர் என் சண்முகலிங்கன் எழுதிய கதிர்காம முருகன் சமூக மானிடவியல் தரிசனம் 2014, பேராசிரியர் டெஸ்மணட் மல்லிகாரச்சி எழுதிய சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி 2003, ஆகிய நூல்களை நூலாசிரியர் பல இடங்களில் சான்று குறிப்பிடுகின்றார்.

இவர்கள் மட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்களும் கதிர்காம கடவுளை வணங்குகின்றனர் என்பதும் ஒரு கூடுதல் தகவலாக அமைகிறது.

இலங்கைத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் ஊவா மாகாணத்தின் புத்தளம் பகுதியில் இருக்கின்ற 'தியனகம' என்ற பெயர் கொண்ட காட்டின் நடுவில் அமைந்திருக்கின்றது கதிர்காமம்.

சிங்கள பௌத்தர்களைப் பொருத்தவரை,

1. சிங்கள பௌத்தர்களது தொன்மையான குடியேற்றங்களில் ஒன்று கதிர்காமம்.

2. அங்கிருக்கும் அரசமரம் தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலிருந்த  அரசமரத்திலிருந்து கொண்டுவந்து நட்ட கிளை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

3. மரபுவழி சிங்கள இலக்கியமான `கந்த உபாத` எனும் இலக்கியம் தமிழ் அரசனான எல்லாளனை வெற்றி கொண்டதால் நேர்த்திக்கடனாக துட்டகைமுனு என்ற அரசன் கட்டியது இந்த ஆலயம் என்கிறது.

4. மகாசேனன் என்ற சிங்கள மன்னனின் மறுபிறப்பு கதிர்காமக் கந்தன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதன் அடிப்படையை வைத்து இன்று வரை பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழ் கதிர்காமம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களவர் வருகைக்கு முன்னரே கதிர்காம முருகன் தமிழர்களின் கடவுளாகக் கொள்ளப்படுகின்றார். துட்டகைமுனு அதனை ஒரு சிங்களவர் ஆலயமாக மாற்றி அமைத்திருக்கக் கூடும் என்றே தமிழர்கள  கருதுகின்றனர்.  குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளான திருமுருகனின் கோயில் இது என்றும், சமஸ்கிருத தொடர்பின்றி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்தக் கோயில் அமைந்தஇருக்கின்றது என்பதும் தொல்காப்பியம் குறிக்கும் `கந்தழி` வழிபாடு இது என்றும் குறிப்பிடலாம் என மு.கணபதிப்பிள்ளை (1967) குறிப்பிடுவது இங்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது.

வேடர்களைப் பொருத்தவரை,  வள்ளி தமது தமக்கையாகவும் கந்தன் தனது மைத்துனனாகவும் பலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது நமது கடமை என வேடர்கள் ஒவ்வொருவரும் நம்புகின்றார்கள். வேடர் குலத் தலைவன் மகள் வள்ளியை களவு மணம் புரிந்த இடமாகக் கதிர்காமத்தை இலங்கை வேடர் சமூகம் நம்புகின்றது. சூரனைத் தாக்கிக் கொன்ற பின்னர் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என நம்புகின்றார்கள்.  கதிர்காமத்திறகு மேற்கே 3 மைல் தொலைவில் மாணிக்ககங்கை நதிக்கரையில் செல்லக்கதிர்காமம் அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கின்றது.  முருகனின் வேண்டுகோளின்படி யானையாக பிள்ளையார் தோன்றி வள்ளி திருமணத்திற்கு உதவினார் என்ற புராண கதையும் வேடர்கள் வழக்கில் இருக்கின்றது.

இலங்கை தமிழர்களின் வாழ்வியலில் தமிழர் கடவுளாகவே கதிர்காம கடவுள் கருதப்படுகின்றார். கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாகவே முருகனுக்கு நைவேத்தியமாக மான் இறைச்சி படைக்கப்பட்டு வந்தது. 1960 களுக்குப் பிறகு கதிர்காமத்தைப் புனித நகரமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்திய பிறகு மான் இறைச்சி படைப்பது நிறுத்தப்பட்டது என நூலாசிரியர் கூறுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. ஆக மான் இறைச்சி முருகக் கடவுளுக்குப் படைத்த பண்பாட்டு கூறுகளைக் காணும்போது பழங்குடி சமூகத்தின் வழிபாட்டு மரபை உணர்த்துவதாக அமைகிறது.

கதிர்காமத்தைப் போலவே கண்டியிலும் இருக்கும் கதரகமா கோயில் இலங்கை சிங்களவர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ஒரு கோயிலாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிங்கள வணிகர்கள் இந்த முருகன் கோயிலை தங்களது வழிபாட்டின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். சிங்கள வணிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை தங்கள் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களின் முருக வழிபாட்டு முறையில் உடலில் சிறிய இரும்பு முட்கள் மற்றும் ஆணிகளைத் துளைத்து வேண்டுதல் வழிபாடு செய்வது வழக்கில் இருப்பதை ஓபயசேகர (1988) அவர்களது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கதிர்காமத்தில் தூக்குக் காவடி எடுக்கும் இஸ்லாமியர்களும் இத்தகைய வழிபாட்டில் இணைந்து கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை கதிர்காமம் மற்றும் கண்டி கதிரகமத் தெய்யோ என்ற வடிவில் முருகவழிபாடு தென்னிந்திய பண்பாட்டு நீட்சியாகத் தொடர்கிறது.

தொடரும்..

-சுபா

குறிப்பு: கதிர்காமம் தொடர்பாக கூறப்பட்டுள்ள செய்திகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இணைக்கப்பட்டிருந்தால் நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்து உதவலாம்.

புகைப்படம் - கதிர்காமம், ஊவா மாநில காட்டுப் பகுதி, இலங்கை வேடர்கள்.





Friday, November 24, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 6

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 6

வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் முதலே தாய் தெய்வ வழிபாடு என்பது உலக மக்களின் அனைத்து சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுவதை இன்றைய தொல்லியல் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது தொன்மையான வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கண்ணகிக்குத் தமிழகத்தில் கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திற்கு அருகிலுள்ள இலங்கையில் கண்ணகி எப்படி வழிபடப்படுகிறாள் என்பதைத்தான் நூலில் ஆறாவது அத்தியாயம் பேசுகிறது.

நூலாசிரியர் ஆய்வாளர்கள் சிலரது ஆய்வுகளை இந்தப் பகுதிக்கு முக்கியச் சான்றுகளாகப் பயன்படுத்துகின்றார். அதில்,பேராசிரியர் ஒபயசேகர எழுதிய The cult of the Goddess Pattini (1984),  பேராசிரியர் ரிச்சர்ட் கொம்ரிட்ச் எழுதிய, Food for 7 Grandmothers: Stages in the universalisation of the Sinhalese ritual, (1971), லூத்மினா மீர்வொர்த்-லெவினா எழுதிய The Hindu goddess Pattini in the Buddhist popular belief in Ceylon (1916), L.S.Hiatt எழுதிய The Pattini cult of Ceyon Tamil Perspective (1973) ஆகியவை வெகுவாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி மேலும் பல நூல்களையும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். அவை அனைத்தும் கண்ணகி சிங்களப் பண்பாட்டில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நமக்கு வியப்பூட்டும் வகையில் உள்ள சிங்கள இலக்கியங்களாக அமைகின்றன.

கஜபாகு மன்னன் இலங்கையில் நிலவி வந்த பஞ்சத்தைப் போக்குவதற்கு தமிழகம் சென்று கண்ணகி சிலையைக் கொண்டுவந்து ஆடி மாதத்தில் விழா எடுத்தான், என இதன் பூர்வீகத்தை ஒரு மரபு பேசுகிறது. இந்த கஜபாகு பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டில் பௌத்தம் முழுமையாக இலங்கையில் பரவத் தொடங்குவதற்கு முன்பு இலங்கைத் தீவு முழுக்க நாட்டார் வழிபாட்டு மரபு தெய்வங்கள் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பதோடு கண்ணகி வழிபாடும், ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடும்,  'கிரி அம்மா' என்ற பெண் தெய்வ வழிபாடும் அடங்குகிறது.

சிங்களவரின் பௌத்த மத அடையாளத்துக்குக் குறைவில்லாத வகையில் சிங்கள பண்பாட்டில் கண்ணகி தெய்வம் 'கண்ணகி தெய்யோ' அல்லது 'பத்தினி தெய்யோ' எனச் சிறப்பிக்கப்படுகிறார். அடிப்படையில் கடவுள் கோட்பாட்டை மறுக்கும் பவுத்தம் இலங்கையைப் பொறுத்த வகையில் கண்ணகி தெய்வத்தையும் மற்றும் தமிழ் நிலத்தில் நன்கு பரிச்சயமான விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு தெய்வங்களையும் உள்ளடக்கிய தெய்வீக மரபைக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இலங்கை பௌத்தம் தேரவாத பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூட தாய் தெய்வ வழிபாடு இங்கு கண்ணகி வழிபாடாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்ணகி தொன்மத்தை மூன்று வெவ்வேறு வகையில் குறிப்பிடுகின்றார்கள்.

1. நாக தெய்வமான நாக அரசனின் கண்ணீரில் இருந்து பிறந்தவள்

2. நீலத்தாமரையில் இருந்து தோன்றியவள்

3. பாண்டிய மன்னனின் தோட்டத்து மாமரத்திலிருந்து பிறந்தவள்

மேற்கூறிய மூன்று தொன்மங்களுமே கண்ணகியின் பிறப்பை அசாதாரண நிகழ்வாகக் காட்டுகின்றன. 

சிங்கள மக்களின் வழிபாட்டு மரபில் கண்ணகி தெய்யோவைப் பன்முகத்தன்மை கொண்ட கடவுளாக வழிபடுகின்றனர்.

1. கண்ணகி வளமைக்கும் ஆரோக்கியத்திற்குமான தெய்வம்.

2. கண்ணகி பௌத்த மதத்தைக் காத்து வரும் தெய்வம்

3. கண்ணகி இலங்கைத்தீவைக் காக்கும் காவல் தெய்வம்

கண்ணகி வழிபாட்டிற்கு முன்னர் ஏழு பெண் தெய்வங்கள் வழிபாடு என்பதும் சிங்களவர் மரபில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தமிழ்நில மரபில் உள்ள சப்த கன்னியர் அல்லது ஏழு கன்னிமார் என்ற வழிபாட்டு மரபோடு ஒப்பீடு செய்யத் தக்கது.

நூலாசிரியர் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் போது நூலில் `இந்து தெய்வங்கள்` எனக் குறிப்பிடுகின்றார்.  `இந்து மதம்; என்ற ஒரு அடையாளப்படுத்துதல்  ஆங்கிலேய காலணித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம் என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இதனைப் `பண்டைய தென்னிந்திய தொல் தெய்வ வழிபாடுகள்` எனச் சுட்டுவது பொறுந்தும் என்று கருதுகிறேன்.   லிங்க வழிபாடும்  இவ்வகையில் தொல்  தெய்வ வழிபாடு என்ற வகையிலே சுட்டப்பட வேண்டும்.  

கண்ணகியைச் சிங்களவர்கள் ஒரு தொன்மையான பௌத்த தெய்வமாகவே கருதுகிறார்கள். ஏறமல பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மாவித்தில் இருந்து தோன்றியவள் என சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கட்டத்தில் மைத்திரி புத்தர் வடிவில் கண்ணகியை இனம் காணவும் சிங்களவர் முற்பட்டனர். அடுத்த கட்டத்தில் பத்தினி தெய்வமான கண்ணகி போதிசத்துவர் எனும் நிலையிலிருந்து பரிநிர்வாண நிலைக்கு உயர்த்தப்பட்டார். இத்தகைய மேலும் பல தொன்மங்கள் கண்ணகியைப் பௌத்த சமயத்துடன் பின்னிப் பிணைத்துக் காட்டுவதை தீவிரமாக முயற்சித்துள்ளன.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை கண்ணகி தமிழ் தெய்வம் அல்ல; மாறாக சிங்கள பௌத்தர்களுக்கே உரிய  முக்கிய தெய்வம்.இன்று இலங்கை முழுவதும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன.

இன்று கண்ணகி தெய்யோ சிங்களவர் பண்பாட்டில் பிரிக்கப்பட முடியாத முக்கிய இடத்தை ஏற்றிருக்கும் ஒரு தெய்வம் என்பது வியப்பளிக்கும் உண்மை.

தொடரும்..

-சுபா





Thursday, November 23, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 5

நூலின் ஐந்தாம் அத்தியாயம் சிங்கள மக்கள் வாழ்வியலில் திருமண முறைகள் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் ஆரிய மணமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உறவுமுறை திருமண அமைப்பை அடிப்படையாகக் கொண்டது சிங்கள திருமண முறை, அதாவது திராவிட முறை பழக்க வழக்கங்களோடு தொடர்பு கொண்டது என்று நிலை நிறுத்துகிறார். அதற்கு மேலைநாட்டு அறிஞர்கள் H.W.Codrington, நூர் சால்மன், மற்றும் இலங்கை ஆய்வாளர் மானிடவியலர் எம் டி ராகவன் அவர்களது ஆய்வுகளையும் சான்றாகப் பயன்படுத்துகின்றார்.

அடிப்படையில் காணும்போது சிங்கள சமூகத்தில் திருமண முறை அகமணத்தைக் கொண்டது என்பதைக் காணமுடிகிறது. `கொய்கம` சாதி அமைப்பில் விரிவான கிளை சாதிகள் உள்ளன. ஆகவே அகமண தன்மையை உறுதியாகப் பின்பற்றும் சமூகமாக இது அமைகிறது. திராவிட அகமணதன்மை என எடுத்துக் கொள்ளும்போது கிளைச் சாதிகளுக்குள்ளேயே காணப்படும் வகையரா /பரம்பரை/கூட்டம்/குலம்/கிளை/கொத்து/இல்லம் என அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு உள்ளே திருமண உறவுகள் எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

சிங்கள சமூகத்தவர்களது விதிகளின்படி பங்காளி உறவுடைய எவரும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் அண்ணன்-தம்பி அல்லது அக்காள்-தங்கை உறவாகக் கருதப்படுகின்றனர்.

முறைப்பையன் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உரிமை கூறப்படுவதும் சிங்களவர்  வழக்கத்தில் இருக்கிறது. முறைப்பையனுக்குப்  பதிலாக வேறு ஒருவரை அப்பெண் திருமணம் செய்ய நேரிட்டால் மணப்பெண் அந்த முறைப்பையனுக்கு 100 வெற்றிலை கொடுத்து அனுமதி கேட்கவேண்டும் என்ற சடங்கும் சமூகத்தில் நடைமுறையில் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது.

தென்னிந்தியாவில் சில பூர்வகுடிகளிடம் இன்றும் தாய்வழி சமூக முறை இருக்கின்றது. நூர் சால்மன் தனது நூலில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு தமிழர்களிடம் தாய்வழிச்சமூகமுறை மிச்சசொச்சம் இருக்கின்றது என்பதை இவரது ஆய்வு குறிப்பிடுகின்றது.

திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண்,  பெண்ணின் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு சென்று வாழ்வது என்பது கண்டி பகுதியில் அதிகம் வழக்கிலிருக்கும் முறை என்றும், இது 'பின்ன' என்று குறிப்பிடப்படுகின்றது என்றும், தந்தைவழி குடும்ப முறையில் மணப்பெண் கணவன் வீட்டில் சென்று வாழ்வது முறையாகக் கருதப்படுகின்றது என்றும், இதனை 'தீக' என்று சிங்களவர் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

'தீக' திருமண முறையில்  பெண் வீட்டார் வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த வழி திருமண முறையில் பெண்ணுக்கு அசையா சொத்துகள் மட்டுமே பங்கு உண்டு என்றும், அதனை விற்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றும், பயிரிடும் உரிமையை மட்டும் அவள் தன் உடன்பிறந்தோருக்குக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அதில் வரும் வருமானத்தைக் கண்டிப்பாக கேட்டுப் பெற மாட்டாள் என்றும், யார் பயிரிடுகிறார்களோ அவர்கள் நினைத்து எதை கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொள்வார்  என்றும் அறிய முடிகின்றது. இதனைக் காணும்போது மிக உறுதியான ஆணாதிக்க மரபு வழிமுறையாக இதனைக் கருதலாம்.

திருமண நிகழ்வில் விருந்துபசாரம் செய்தல், நல்ல நேரம் பார்த்தல், மணமகள் வீட்டில் மணமகன் வருகையைக் கொண்டாடுதல், ஆடை மாற்றுதல் சடங்கு, கால் பெருவிரல்களைக் கயிற்றால் கட்டுதல் ஆகியவற்றோடு பெண்கள் பாலி மொழியில் அமைந்த பழம்பெரும் பாடலாகிய `ஜெயமங்களசூத்திரா` பாடலைப் பாடுவது, அதன் பின்னர் தேங்காய் உடைத்தல், மாமா உறவு வழி சடங்குகள், முறைப்பையன் இருந்தால் அவன் மணப்பெண்ணை விட்டுக் கொடுக்கும் சடங்கு என வரிசையாக சடங்குகள் அமைகின்றன. திருமணம் மணப்பெண் வீட்டில் நடக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு  தற்காலிக குடிசை அமைக்கப்படும் என்றும் அதனை வண்ணார்கள் அமைத்து அலங்கரித்து கொடுக்கின்றனர் என்றும் அறிய முடிகிறது. தாலிகட்டுவது போல ஒரு சின்னத்தை அணிவிக்கும் முறை சிங்கள திருமணங்களில் இல்லை என்றே தெரிகிறது. 

பல கணவர்கள் அதாவது சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து வாழும் முறை தம்பகல்லே, மஹா கண்டென ஆகிய பகுதிகளில் இருந்ததை நூர் யால்மன் (1971) பதிகின்றார். அதேபோல பல மனைவியர் உள்ள ஆண்களின் குடும்பங்கள் சிலவற்றையும் தாம் கண்டதாக இவரது ஆய்வு வெளிப்படுத்துவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குப் பெரும்பாலும் நிலங்களும் சொத்தும் பிற குடும்பங்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.

இன்றைய காலச்சூழலில் சிங்கள சமூகத்தவர் பண்பாட்டில் திருமண முறைகள் மேற்கத்திய வழக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் பல மாற்றங்களுடன் திகழ்கின்றது. இன வேறுபாட்டைக் களைந்து சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என வேறுபாடின்றி கலப்பு திருமண நிகழ்வுகளும் இன்றைய இலங்கையில் கண்கூடு.

புகைப்படம்: இலங்கை மலையகத்தில் பதுளை நகரில் அமைந்துள்ள முதியாங்கனை ரஜ மகா விகாரையில்.

தொடரும்..

-சுபா