Wednesday, December 18, 2024

The World of the Tamil Merchant

 


க.சுபாஷிணி

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரிந்து என் வீட்டில் உள்ள நூல்களை நான் யாருக்கும் வாசிப்பதற்கு கடன் கொடுப்பதில்லை. 🙂 ஆனாலும் சென்னையில் வீட்டிற்கு வருகின்ற சில நண்பர்கள் வீட்டு நூலகத்தில் உள்ள எனது சேகரிப்பில் இருந்து எப்படியோ சில நூல்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அப்படி நான் வாங்கி வைத்திருந்து தொலைத்த நூல்கள் ஒன்று கனகலதா முகுந்த் எழுதிய the world of the Tamil merchant. நம் வீட்டு நூலகத்தில் 

நாம் விழுந்து விழுந்து தேடினாலும் யாரோ எடுத்துச் சென்றுவிட்ட நூலை கண்டுபிடிக்க முடியாது. ஆக என்ன செய்வது? மீண்டும் ஆர்டர் செய்து வாங்க வேண்டியது தான். 🙁

சென்ற வாரம் அமேசானில் தேர்ந்தெடுத்து இவ்வார தொடக்கம் இரண்டு நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்று இது.

ஏற்கனவே வாசித்திருந்தாலும் பண்டைய தமிழகத்தின் வணிகம் தொடர்பான ஒரு நூல் என்ற வகையில் மீண்டும் இதனை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றும் இன்றும் இரு நாட்கள் இந்த நூலை வாசித்து முடித்தேன். கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளில் இந்த நூல் தமிழகத்தின் வணிகர்களின் உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சி செய்கிறது.

1. Merchants and Trade in the Pre-Modern Era: Issues and Insights

2.Trade and Merchants in Ancient Tamilakam

3. State, Polity and Overseas Relations under the Tamil Kingdoms

4. The Temple, Nagaram and Merchants: A Study in Synergy

5.The Tamil Merchant Down the Ages: A Retrospect

AHIMSA நூலில் திரு தேவ்தத் குறிப்பிட்டிருப்பது போல சிந்துவெளி பண்பாட்டின் மக்களது வாழ்க்கை வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பண்பாட்டை நமக்கு இன்றைக்கு கிடைக்கின்ற சங்க இலக்கியச் சான்றுகளும் தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளும் காட்டுகின்றன. இந்த நூலும் நமக்கு நன்கு பரிச்சயமான  மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை குறிப்புகளையும் விளக்குகிறது. கூடுதலாக சில அகழாய்வுச் செய்திகளையும் தருகின்றது. 

இந்த நூலில் என் கவனத்தை கவர்கின்ற ஒரு பகுதியாக அமைவது நகரம், வணிகர்கள், நகரத்தார்கள் என்ற தலைப்பிலான விவரங்கள். 

நூலில் தமிழ்நாட்டு வணிகக் குழுக்கள் பற்றி ஒரு தனி அத்தியாயம் அமைந்திருக்கின்றது. அதில் தனிநபர் வணிகர்கள், நகரத்தார் வணிகர்கள் மற்றுமன்றி அமைப்பாக வணிகக் குழுக்களாக இயங்கிய அமைப்புகளை நூலில் ஆசிரியர் விளக்குகின்றார். நெடுந்தூரம் பயணம் செய்து கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களில் மணிகிராமத்தார், திசையாயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், நானாதேசி, வளஞ்சியார் அஞ்சுவண்ணம், சித்திரமேளி பெரியநாடு போன்ற குழுக்கள் பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. 

களப்பிரர் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என இலக்கியங்கள் கூறுகின்றன என ஆங்காங்கே நூலில் குறிப்பிடப்படுகிறது. பௌத்தமும் சமணமும் முக்கியத்துவம் பெற்ற ஆனால் அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆட்சி செய்த காலம் என இதனை நூலாசிரியர் நிறுவ முயற்சிக்கிறார். இந்த நூலுக்கு பின் வந்த முனைவர் பத்மாவதியின் "களப்பிரர் காலம்" நூல் இந்த செய்திகளுக்கு மாற்றுக் கருத்தை வழங்குகின்றன. 

மேலும், நூலாசிரியர் சைவம், வைணவம் என்பதற்கு பதிலாக "இந்து மதம்" என்று பொதுமைப்படுத்தி குறிப்பிடுகின்றார். மட்டுமன்றி மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களை ஆட்சி செய்த ஸ்ரீ விஜயப்பேரரசு புத்த மதம் சார்ந்த ஓர் அரசு என்பதை விடுத்து இந்து மதம் சார்ந்த அரசு என்றும் குறிப்பிடுகின்றார். இவை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள். இவை தவிர்த்து நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற தகவல்கள் பல நூல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைகின்றன.

தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு செய்கின்ற தமிழ் உலகம் பொதுவாகவே கலைகள், தெய்வங்கள் என்ற பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வணிகத்தின் மேன்மையை குறைத்து பார்ப்பதாகவே நான் நினைப்பதுண்டு.   பண்டைய தமிழ் நிலத்தின் வணிகப் பரப்பு என்பது மிகப் பெரிது என்றே இன்று நமக்கு கிடைக்கின்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் தமிழ் நிலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களது பார்வை தமிழ்நாட்டின் வணிகத்தை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. வணிகம் அது தருகின்ற பொருளாதார மேன்மை போன்ற சிந்தனைகள் தான் இன்று நமக்கு அவசியம். 

மிக நீண்ட காலமாக கடல் வணிகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சீனா இன்று உலக வணிக வல்லரசாக உயர்ந்துள்ளது. வணிக சிந்தனைக்கு மட்டுமல்லாது முறையான ஆவணப்படுத்துதலையும் மிக நீண்ட காலமாகச் செயல்படுத்தி வரும் வழக்கம் சீனப்பேரரசில் அடிப்படையான ஒன்றாக இருந்தது. சீனர்களின் கட்டொழுங்கும் கடமைப்பாடும் பொருளாதார ஆர்வமும் நமது சிந்தனைக்குள் மீண்டும் நிலை பெற வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டு வணிகம் பற்றி பேசுகின்ற இத்தகைய நூல்கள் பற்றிய செய்திகள் நம்மிடையே அதிகம் வலம்வர வேண்டும்.

 நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள். இந்த நூல் பென்குவின் வெளியீடாக வந்துள்ளது. விலை இந்திய ரூபாய் 299. 

-சுபா

18.12.2024

Saturday, December 14, 2024

3. கோயில்களில் புத்தத் தடயங்கள் - உரை

கோயில்களில் புத்தத் தடயங்கள் - முனைவர் ராஜேஸ்வரி செல்லய்யா

15.12.2024

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 3



Saturday, December 7, 2024

2. நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் - உரை

நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் - முனைவர் க. சுபாஷிணி

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 2

08.12.2024




Saturday, November 30, 2024

1. களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் - உரை

களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் - முனைவர் ஆ.பத்மாவதி

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 1

01.12.2024



Sunday, November 24, 2024

அவலோகிதேஸ்வர் - பீடோர், மலேசியா



பொதுவாகவே மலேசியாவில் அகழாய்வுகள் என ஆராயும் போது நமக்குத் தெரிவது பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுகள் பற்றிய செய்திதான். ஆனால் தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் ஸ்ரீ விஜயப் பேரரசு காலத்து வரலாற்றுச் சான்றுகள் பல, அகழாய்வுப் பணியின் போதும் கட்டுமான பணிகளின் போதும் கிடைத்துள்ளன.

இங்கு புகைப்படத்தில் இருப்பது பேராக் மாநிலத்தில் உள்ள பீடோர் என்ற பகுதியில் ஈயச் சுரங்கத்தில் குழியைத் தோண்டிய போது அங்கு கிடைத்த பௌத்த அவலோகிதேஸ்வர் வெண்கல சிற்பம். 1936ஆம் அது இது கண்டுபிடிக்கப்பட்டது.
-சுபா

Saturday, November 2, 2024

"The Silk Road Journey with Xuanzang"- திறனாய்வு





 "The Silk Road Journey with Xuanzang"- Sally Hovey Wriggins திறனாய்வு முனைவர் சுபாஷினி

யுவான் சுவாங்கின் பட்டுப் பாதை வரலாற்றுப் பயணம்  - நூல் திறனாய்வு


https://www.youtube.com/live/7WFn8Ybe2tc

Thursday, October 24, 2024

நூல் அறிமுகம்: ‘தமிழர் புலப்பெயர்வு’ (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு)

 


அ. குமரேசன்

நூல் அறிமுகம்: ‘தமிழர் புலப்பெயர்வு’ (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு)

‘தமிழர் புலப்பெயர்வு’ Tamizhar Pulapeyarvu (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு)

ஒரு புத்தக அறிமுகத்திலிருந்து….

திக்கெட்டும் சென்ற தமிழர்களின் வரலாறும் வாழ்க்கையும்

அ. குமரேசன்

ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் புலம் பெயர்தலைத் தொடங்கினார்கள். உணவைத் தேடி, உறைவிடம் தேடி, இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடங்களைத் தேடி அந்தப் புலப்பெயர்வுகள் நடந்தன. அதனால் சென்று பரவிய பூமிப் பகுதிகளின் தட்ப வெப்பம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப மனிதர்களின் உடல் தோற்றத்தில், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தொடக்கக் காலத்தின் அந்தப் புலப்பெயர்வு நிகழ்ந்ததால்தான் மனித இனம் பிழைத்தது. இல்லையேல் டைனசோர் போல அழிந்தே போயிருக்கும் அல்லது ஏதுமறியாக் குறுங்கூட்டமாகச் சுருங்கிப் போயிருக்கும். புலப்பெயர்வால் சமூக நாகரிகங்கள் தோன்றின.

புலம் பெயர்ந்ததால் பிழைத்தது அன்று நிகழ்ந்தது. பிழைப்புக்காகப் புலம் பெயர்வது இன்று நிகழ்கிறது. புலம் பெயர்ந்து வேறொரு புலத்தில் வாழ நேரிடுவதன் வேதனைகள், சந்திக்கும் கொடுமைகள், தாங்கிக்கொள்ளும் அவமானங்கள் பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம். சொந்த அனுபவக் குறிப்புகளாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும், நாவல் சிறுகதை கவிதைப் புனைவுகளாகவும் எழுதப்படுகின்றன. திரைப்படங்கள் வருகின்றன. போய்ச் சேர்ந்த நாட்டிலும் சேர்த்துக்கொள்ளப்படாதவர்களாக, தாய்நாட்டிற்கும் திரும்ப முடியாதவர்களாக லட்சக் கணக்கானவர்கள் குழந்தைகளோடு தவித்துக்கொண்டிருக்கிற செய்திகளைப் பார்க்கிறோம்.

தமிழ் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற பலர் தொழில், வணிகம் என காலூன்றி, சென்றடைந்த நாடுகளின் குடிமக்களாகவே மாறிவிட்ட வரலாறுகளும் இருக்கின்றன. அங்கே அவர்களும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள், சுமார் 160 நாடுகளில் இன்று தமிழ் மக்கள் வேரூன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பில் அந்த நாடுகளும் வளர்ச்சியடைந்தன..

எடுத்துக்காட்டாக, இந்தியாவை பிரிட்டன் அரசு அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது இங்கேயிருந்து அங்கே சென்று குடியேறியவர்களின் உழைப்பாலும்தான் அந்த நாடு வளர்ந்தது. இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் அங்கே தலைமுறை தலைமுறையாக பிரிட்டிஷ் மக்களாகவே குடியுரிமையோடு வாழ்கிறார்கள். இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷப் சுனக் அந்நாட்டின் பிரதமராகவே ஆக முடிந்தது.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் அடையாளங்களில் தமிழர்கள், சீனர்களின் உழைக்கும் கரங்கள் பதிந்திருக்கின்றன. இலங்கையில் தொன்மைக் காலத்திலிருந்தே வாழ்கிற தமிழர்களும் இருக்கிறார்கள். பிற்காலத்தில், பிரிட்டிஷ் முதலாளிகளின் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து கங்காணிகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களும் இருக்கிறார்கள். சிங்கள இனவாத அரசால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதும், உரிமைகளை மீட்க இயக்கங்கள் புறப்பட்டதும், அரசுப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்ததும், அது ரத்தச் சகதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுமான வரலாற்றுப் பக்கங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து குடியேறி, குடியுரிமை பெற்று வாழ்கிற பல நாட்டவர்களும் இனத்தவர்களும் தலைமுறைகளைத் தாண்டியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே இனக் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து, தமிழகத்திலிருந்து சென்ற ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தற்போது அங்கே அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கறுப்பின மக்கள் இன்று அமெரிக்காவின் சம உரிமை பெற்ற குடிமக்கள். அந்தச் சம உரிமையை நிலைநாட்ட நடைபெற்ற போராட்டங்கள் எழுச்சி மிக்கவை. அத்துமீறல்களை எதிர்கொண்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைபெற்ற “பிளாக் மேட்டர்ஸ்” போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தவை.

இன்றைக்கும் பட்ட மேற்படிப்பு படித்த தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் வேலை செய்கிறவர்களாகப் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களான அவர்களுக்கு அங்கே நிலையாகக் குடியிருக்கும் உரிமையை வழங்கும் பச்சை அட்டை வழங்கப்படுகிறது. அமெரிக்கக் குடிமக்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறவும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

பாரசீக வளைகுடா நாடுகளில் நிறுவனங்களின் பொறியியலாளர்களாகவும் அலுவலர்களாகவும் வேலை செய்யச் சென்றவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாகக் கேரளத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் நிறையப் பேர் சென்றிருக்கிறார்கள். நல்ல ஊதியம் கிடைப்பதால் நிறைய சேமித்து வைத்து நாடு திரும்பும் எண்ணத்துடன் ஏராளமானோர் கட்டுமானத் தொழிலாளர்களாகப் போயிருக்கிறார்கள். அந்தக் காலக் கங்காணிகள் போல ஏமாற்றுகிற இந்தக் கால ஏஜென்டுகளால் கொண்டு செல்லப்பட்டு, ஆடு, ஒட்டகம் மேய்ப்பவர்களாகப் பலர் நைந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஆடு ஜீவிதம்’ நாவலும் திரைப்படமும் இதைக் காட்டியிருக்கின்றன.

புலம் பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க, புலம் பெயர்க்கப்பட்டவர்களின் கதைகள் மறுபுறத்தில் கசப்பான உண்மைகளையும் கடுமையான நிலைமைகளையும் உணர்த்துகின்றன. பல நாடுகளில் தோட்டத் தொழிலாளர்கள் தேவைப்பட்டபோது, அங்கெல்லாம் சொர்க்க பூமி திறந்து வைக்கப்பட்டிருப்பதாக மாய பிம்பம் காட்டித் தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு, வியர்வையுடன், ரத்தத்துடன் மனித மரியாதையும் உறிஞ்சப்பட்டவர்கள் அப்படிப் புலம் பெயர்க்கப்பட்டவர்கள்தான். “பிறப்பொக்கும்” என ஏற்க மறுக்கிறவர்களால் ஏற்பட்ட தலைமுறை அவமானங்களிலிருந்தும் சாதியப் பாகுபாட்டு வன்மங்களிலிருந்தும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறும் கனவோடு அந்த நாடுகளுக்குச் சென்றார்கள். ஆனால் அங்கெல்லாம் அவர்களுக்குக் கூலி கிடைத்தாலும், சக மனிதர்கள் என்ற மதிப்பு கிடைத்ததாகக் கூறுவதற்கில்லை.

போர்களில் தோற்கடிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களை அடிமைகள் என்று அறிவித்து அரண்மனைகளில் இழிவான வேலைகளில் ஈடுபடுத்திய அரசர்கள் பற்றிப் படித்திருக்கிறோம். கடத்தி வரப்பட்ட அடிமைகளை வணிகக் கோமான்கள் பொது இடத்தில் நிறுத்தி ஏலம் விட்ட கதைளைக் கேட்டிருக்கிறோம். கைப்பற்றப்பட்ட பொருள்களோடு கூடுதல் பொருளாகவே அடிமை மனிதர்களைக் கருதி விற்பனை செய்திருக்கிறார்கள். மற்ற கோமான்களுக்குப் பரிசாகக் கொடுக்கும் பொருள்களாகவும் அடிமைகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆம் மாளிகைகளின் இதர தட்டுமுட்டுச் சாமான்களோடு அந்த மனிதர்களும் வெறும் பொருள்கள்தான். புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

‘தமிழர் புலப்பெயர்வு’ Tamizhar Pulapeyarvu (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு) என்ற புத்தக அறிமுகத்தின்போது விரிந்தவையே மேற்கண்ட சிந்தனைகள். ஆய்வாளர் முனைவர் க. சுபாஷிணி இந்த நூலை வழங்கியிருக்கிறார். மலேசியாவில் பிறந்து ஜெர்மனியியில் குடியேறியிருப்பவர் அவர். இணையவழிக் கூடுகைகள் மூலமாக  நூல் திறனாய்வுகளைச் செய்துவரும் ‘வாருங்கள் படிப்போம்’ குழுவின் நிகழ்வில் இதனை அறிமுகப்படுத்தினார் புத்தகக் காதலர் அர்ஷா. இலங்கையில் பிறந்து இந்தியாவில், தமிழ்நாட்டில் குடியேறியிருப்பவர் அவர். ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் புத்தகத்தைப் பற்றி இன்னொரு புலம் பெயர்ந்த தமிழர் பேசிய அந்த நிகழ்வு உணர்ச்சிகரமாகவும் அமைந்தது.

“நம் குடும்பங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பல பழக்கங்களை இன்று நாம் மறந்துவிட்டோம் அல்லது அவற்றிலிருந்து வெளியே வந்துவிட்டோம். ஆனால், பல நாடுகளிலும் குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள் அந்த நடைமுறைகளை மறக்காமல் பின்பற்றுகிறார்கள்,” என்று திறனாய்வாளர் சொன்னபோது ஒரு கேள்வி முளைத்தது. “இங்கே ஒவ்வொரு சடங்கிலும் சாதி அடையாளம் இருக்கிற நிலையில், அவர்கள் அந்தக் குடும்ப நடைமுறைகளைக் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுசென்றபோது, அவற்றோடு பின்னியிருக்கிற சாதியமும் புலம் பெயர்ந்ததா?”

“முன்னோடிகளாகக் குடியேறிய தமிழர்கள் காலப் போக்கில், அந்த நாடுகளின் பண்பாடுகளோடு கலந்தார்கள். அந்த நிகழ்வுப்போக்கில் சாதி அடையாளங்களைத் துறந்தார்கள். அவர்களின் தலைமுறைகள் தாங்கள் என்ன சாதி என்று தெரியாமலே வளர்ந்தார்கள். இடைக்காலத்தில் பெயர்களின் பின்னால் பிள்ளை, நாடார், முதலியார், செட்டியார் போன்ற ஒட்டுகளை இணைத்துக் கொள்கிற பழக்கம் ஏற்பட்டது. அவற்றைக் குடும்பப் பெயர்கள் என்று நினைத்துக்கொண்டுதான் இணைத்துக்கொண்டார்களே தவிர, சாதி அடையாளமாக நினைக்கவில்லை,” என்றார் நூலாசிரியர். தொடர்ந்து அவரே, “ஆனால், அண்மைக்காலமாகப் புலம் பெயர்ந்து செல்கிறவர்கள் இங்கேயுள்ள அதே சாதி உணர்வையும், பாகுபாட்டையும் கொண்டு போகிறார்கள். நன்கு படித்தவர்களே இதைச் செய்கிறார்கள்,” என்றார்.

இதைப் பற்றி யோசிக்கிறபோது, தொடக்கத்தில் தொழிலுக்காகவும வணிகத்திற்காகவும் சென்றவர்கள் சாதி அடையாளங்களைத் துறந்தது மேல்தட்டுகளில் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களை ஒதுக்கி ஒடுக்குவதில் அவர்கள் கவனமாகவே இருந்திருப்பார்கள். ஒருவேளை, அந்தத் தொடக்கக் காலத்தில் உடனடியாக அடித்தட்டினர் புலம் பெயர்ந்திருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களோடும் கலந்து சாதி அடையாளங்களைத் துறப்பது நிகழ்ந்திருக்காது. ஒதுக்கப்பட்டவர்கள் கொண்டுசெல்லப்பட்டது பிற்காலத்தில்தான் நடந்ததென்பதால் அங்கேயும் ஒதுக்கப்பட்டவர்களாகவே அவர்கள் நடத்தப்படுவது தொடர்ந்திருக்கும்.

தமிழர்களின் புலப்பெயர்வுகளுக்குப் பல நூற்றாண்டுத் தொடர்ச்சி இருக்கிறது. பதினைந்து ஆண்டுகாலத் தேடல்களும் பயணங்களும் பதிவுகளும் இந்த நூலை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பதைத் தெரிவித்தார் ஆய்வாளர். அந்த உழைப்பின் கனியாக வரலாற்றுத் தடங்களோடும் வாழ்க்கை நடப்புகளோடும் இந்த நூல் தனித்துவமான வாசிப்புச் சுவையையும் தருகிறது என்ற கருத்துகள் நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அறிமுகத் துளிகளை ஏந்தியதிலேயே இவ்வளவு தகவல்கள் கிடைக்கும், இப்படிப்பட்ட சிந்தனைகள் துளிர்க்கும் என்றால், புத்தகத்திற்குள் நேரடியாக நுழைந்தால் எவ்வளவு வெளிச்சம் கிடைக்கும்! புலம் பெயர்ந்த, பெயர்க்கப்பட்ட மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வராலாற்றுடன் இணைந்த உண்மைகளின் ஆதாரங்கள் தேவை. ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் முனனுரையுடன் வந்திருக்கிற இந்த நூல் அத்தகைய ஆதாரங்களை வழங்கும் என்று தெரிகிறது. முழுமையாகப் படித்தேயாக வேண்டும்.

நூல்: தமிழர் புலப்பெயர்வு (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு) – Tamizhar Pulapeyarvu

ஆசிரியர்: க. சுபாஷிணி

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை

மின்னஞ்சல்: mythforg@gmail.com

பக்கங்கள்: 370

விலை: ரூ.450

எமரால்டு பதிப்பகம், பனுவல் உள்ளிட்ட நிலையங்களிலும் காமன்ஃபோக்ஸ் வலைத்தளத்திலும்  புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கிறது.

‘தமிழர் புலப்பெயர்வு’ (Tamizhar Pulapeyarvu) நூல் அறிமுகம் எழுதியவர்:

அ. குமரேசன்

https://bookday.in/dr-k-subashinis-tamizhar-pulapeyarvu.../

Friday, September 13, 2024

Wednesday, September 11, 2024

பள்ளூர் புத்தர் சிற்பங்கள்


அண்மையில் அரக்கோணத்திற்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 புத்தர் சிற்பங்களைக் காணச் சென்றிருந்தோம். இச்சிற்பங்கள் பற்றி ஆவணம் இதழில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. - சுபா

https://archive.org/.../Avanam%202009.../page/212/mode/1up   ஆவணம் இதழ் 20 - பக்கம் 212 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வேலூருக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்றும், மேல்காவனூர் என்றும் அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர், இரும்பு காலம் மற்றும் வரலாற்று ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் பகுதியாகும். இவ்வூரில் சில புத்த சமயச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தில் புத்தசமயம் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுரம் மாநகருக்கு மேற்கே அமைந்துள்ள வேலூர் மாவட்டத்திலும் புத்தசமயம் பரவியிருந்தமையை அம்மாவட்டத்தின் சில இடங்களிலிருந்து கிடைத்த புத்தசமயச் சான்றுகளின் மூலம் அறியலாம். அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பள்ளூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், புத்தமேடு என்றழைக்கப்படும் பழங்கால வசிப்பிடப் பகுதியும் இவ்வூரில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வாலாஜாப்பேட்டை நகரத்திற்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைச் சேரியில் புத்தசமயத்தைச் சேர்ந்த தேரர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.






Tuesday, September 10, 2024

நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கிடைத்த வெண்கல பௌத்த சிற்பங்கள்

முனைவர் க.சுபாஷிணி

லியோன்பெர்க், ஜெர்மனி


பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பட்ட புத்த சமய சிற்பங்கள் மற்றும் சின்னங்கள் பற்றிய தகவல்கள் அப்போதைய அரசு ஆவணங்களில் பதியப்பட்டன. முன்னர் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் இயக்குநராகப் பொருப்பேற்றிருந்த திரு.டி.என்.ராமச்சந்திரன் தொகுத்து எழுதிய அகழாய்வு அறிக்கைகளில் முக்கியமான ஒன்று அவரது நாகப்பட்டின அகழாய்வுச் செய்திகளைத் தாங்கி எழுதப்பட்ட ஒரு நூல். The Nagapattinam and other Buddhist Bronzes என்ற தலைப்பைக் கொண்ட இந்த நூல் முதன் முதலில் 1954ஆம் ஆண்டு மெட்ராஸ் அருங்காட்சியத்தின் வெளியீடாக வந்தது. பின்னர் இந்நூல்1965,1992, 2005ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது.   இந்த நூலின் தனிச்சிறப்பு - நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வெண்கல புத்தர் திருமேனிகளும் ஏனைய புத்த சின்னங்களும் பற்றிய விரிவான் பட்டியலை இது கொண்டிருக்கின்றது என்பதே.

இந்திய துணைக்கண்ட நிலப்பகுதியில் வெண்கல சிற்பங்களில் பழமையானது எனும் போது சிந்துவெளி அகழாய்வுக்களமான மொஹஞ்சதாரோவில் இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் வெண்கல சிலையைக் குறிப்பிடலாம்.  இச்சிலை ”நடனப் பெண்” என அழைக்கப்படுகிறது.  ”நடனப் பெண்” என அழைக்கப்பட்டாலும் மனதில் உறுதியோடு கம்பீரமாக நிற்கின்ற ஒரு பெண்ணின் சிற்பமாகவே இது வடிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

பாடலிபுத்திராவில் மாமன்னர் அசோகனின் முன்னிலையில் நிகழ்ந்த மூன்றாவது மிகப்பெரிய புத்த மாநாட்டில்  மோகிலிபுத்த திசா (Moggaliputta Tissa) தலைமையில் புத்த பிக்குகள் கலந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் அங்கிருந்து புத்தபிக்குகள் இந்திரபிரஸ்தம் (டெல்லி) முதல்  தமிழ்நாடு வரையிலும் மட்டுமின்றி இலங்கைக்கும்  பௌத்த நெறிகளைப் பரவலாக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது பௌத்த சமயம் இந்தியா முழுமைக்கும் மற்றும் கிழக்காசிய நாடுகளில் விரிவாக்கம் காண அடிப்படையை உருவாக்கியது. அது தொடக்கம், பௌத்த சின்னங்களும் வழிபாட்டுத் தலங்களும், சிற்பக் கூடங்களும் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ச்சி காணத் தொடங்கின. இது தமிழ்நிலப்பகுதியிலும் நிகழ்ந்தது. 

இந்திய சிற்பங்களை ஆழ்ந்து ஆராயும் போது அவற்றுள் பெரும்பாலானவை இறை வடிவங்களாக இருப்பதைக் காண்கிறோம். சமயச் சார்புடன் கூடிய வகையிலான கடவுள் வடிவங்கள் வெண்கலத்தை கொண்டு உருவாக்கப்பட்டன. மொகஞ்சதாரோ அகழாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடனப் பெண் சிற்பம் போல பொதுவான மனிதர்களைப் பற்றிய சிலைகள் என்பவை மிக மிகக் குறைவாகவோ, அரிதாகவோ தான் இதுவரை கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியத் துணை கண்டத்தை எடுத்துக் கொண்டால் சிற்பக்கலைக்கு பௌத்த மதம் ஆற்றிய கொடை மிகப் பெரிது. ஆரம்பகால பௌத்த சமய சிற்ப வடிவங்களின் தாக்கத்தைப் பிற்காலத்தில் இந்தியாவில் உருவாக்கம் கண்ட அல்லது வழக்கில் இருந்த எல்லா சமயங்களிலும்   காண முடிகின்றது. 

எடுத்துக்காட்டாக கிபி 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த மத்திய  இந்தியாவின் அமராவதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களைக் கூறலாம். மாறுபட்ட பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்ப வடிவங்கள் இக்காலகட்டத்தில் இங்கு உருவாக்கப்பட்டன. முதலாம், இரண்டாம் நூற்றாண்டு காலவாக்கில் தட்சசீலம் பகுதியில்  வடிக்கப்பட்ட சிற்பப் படைப்புகளில் சிறிய அளவிலான வெண்கல வடிவங்களைக் காண்கின்றோம். 

வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற வகையிலான சிற்பக்கலை பள்ளிகள் இயங்கிய ஒரு பகுதியாக மதுராவை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். கி.பி 1ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலவாக்கில் கலைத்திறன் மிக்க சிற்பிகள் அழகிய வெண்கல வடிவங்களிலான பெண் உருவம் மற்றும் இயற்கை வடிவங்களை வடித்திருக்கின்றார்கள். இப்படி இந்தியாவின் வடபகுதியில் உள்ள சில இடங்களைக் குறிப்பிடலாம். 

இன்று நமக்குக் கிடைத்திருக்கின்ற வெண்கல சிற்பங்களில் பௌத்த மதம் சார்ந்த வெண்கல சிற்பங்கள் தென்னிந்தியாவில் கிடைக்கின்றன என்றாலும் கூட அப்படி கிடைக்கின்ற சிலைகள் பெரும்பாலானவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  இவை கிபி 11லிருந்து 15ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்பதும் அவற்றில் பெரும்பாலானவை நாகப்பட்டினத்தைச் சார்ந்தவை என்பதையும் தமிழக அரசின் தொல்லியல் அறிக்கை வழி காண்கின்றோம்.

இன்று  சென்னை அருங்காட்சியகம் என அழைக்கப்படும் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் முன்னாள் இயக்குனர் திரு.டி என் ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவில் 1856 முதல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் ஏறக்குறைய 850 புத்தரின் வெண்கல சிலைகள் கிடைத்ததாகவும் அவை மகாயான வகையைச் சேர்ந்தவை என்றும், சில எழுத்துப் பொறிப்புகளுடன் அவற்றுள் சில உள்ளன என்றும், சில பௌத்த பள்ளிகள் இருந்த பகுதிகளில் இவை இருந்தவை என்றும் குறிப்பிடுகிறார். 

ஸ்ரீவிஜயப் பேரரசு ஆட்சி செய்த இன்றைய இந்தோனேசியாவில் கிபி 5 முதல் பௌத்தம் மிகச் செழித்து ஓங்கி வளர்ந்திருந்ததைக் காண்கிறோம்.  சைலேந்திர பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு மன்னர்கள் ஆட்சி செய்த அக்காலகட்டத்தில் அவர்களது சோழமண்டலக் கடற்கரை வணிகமும் அதனால் ஏற்பட்டிருந்த நல்லுறவும் நீடித்திருந்தது.  குறிப்பாகச் சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் காலம் இரு பேரரசுகளுக்கும் இடையிலான செழிப்பான வணிகத்தை காலத்தில் இவ்வுறவு நன்கு தொடர்ந்தாலும் 1017, 1025 ஆகிய காலகட்டங்களில் சோழ மன்னர்களின் படையெடுப்பு இரு நாடுகளுக்குமான உறவை பாதிப்புறச் செய்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆயினும் கூட  இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை, அதாவது கிபி 871 முதல் கிபி 1150 காலகட்டத்தில் மிக அதிகமான பௌத்த பள்ளிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நாகப்பட்டினம் பகுதியில் இயங்கியத்தை வரலாறு நமக்குச் சுட்டுகிறது.

நாளந்தா, மதுரா போன்ற புகழ்மிக்க பௌத்த தளங்களில் சிற்பக்கலைக் கூடங்களும், அதில் பணியாற்றிய சிற்பிகளும் வடித்த புத்தரின் வடிவங்கள் மற்றும் புத்தர் கதைகளின் அடிப்படையில் உருவாக்கம் கண்ட சிற்பங்கள்  தனித்துவமிக்கவை. அதேபோல, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் அகழாய்வுகளில் கிடைத்த ஏராளமான கற்சிலைகளையும், செப்புச் சிலைகளையும் காணும் போது நாகப்பட்டின சிற்பக்கலையும் தனித்துவமிக்க ஒரு கலையாக இருந்திருக்க வேண்டும் என்பது ஐயத்திற்கு இடமின்றி அமைகிறது. அதில் குறிப்பாக நாகப்பட்டின புத்தர் சிலைகளை ஆராயும்போது சோழர்கால சிற்பக் கலை கருணையுடன் கூடிய அமைதி தவழும் வடிவத்துடன் இச்சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆழ்ந்த, அமைதியான தியான நிலையில் தியான முத்திரைகளோடு இச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 

சென்னை அருங்காட்சியகத்தின் மேனாள் இயக்குநர் திரு. டி.என். ராமச்சந்திரன் தனது நூலில் பதிவு செய்திருக்கும் பட்டியலின் அடிப்படையில், 1954ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியத்தில், பிரித்தானிய ஆட்சி காலத்தில் குறிப்பாக 1926 மற்றும் 1934 கால வாக்கிலும் மற்றும் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரும் நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம், நாணயக்கார தெரு ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட  86 சிற்பங்கள் அங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டன என்ற செய்தி நமக்குக் கிடைக்கின்றது.  அப்பட்டியலில் உள்ள 20 சிற்பங்கள் பற்றி சில தகவல்களைக் காண்போம். 

1. பட்டியல் எண் 1: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலை. இதன் உயரம் 29.3 சென்டிமீட்டர். வலது கை அபய முத்திரை காட்டி நிற்கும் வகையில் இச்சிற்பம் உள்ளது.



2. பட்டியல் எண் 2: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம். அடிப்பகுதியும் முழு உயரமும் மொத்தம் 49 சென்டிமீட்டர்; அடிப்பகுதி இல்லாமல் 34.5 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது.  நின்ற நிலை வடிவில் அபயமுத்திரையுடன் இச்சிற்பம் காணப்படுகிறது.

3. பட்டியல் எண் 3: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 51.2 சென்டிமீட்டர். அடிப்பகுதி நீங்கலாக 38 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. அபய முத்திரையுடன் கூடியுள்ள ஒரு சிற்பம் இது. 

4. பட்டியல் எண் 4: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 52 சென்டிமீட்டர். அடிப்பகுதி இல்லாமல் 35.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். "உமையர் திருவாலியாழ்வார் நாயகர்" என்ற எழுத்துப் பொறுப்புகளுடன் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

5. பட்டியல் எண் 5: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 27.2 சென்டிமீட்டர் அடிப்பகுதி நீங்கலாக 23.5 சென்டிமீட்டர் உயரம். 

6. பட்டியல் எண் 6: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 16.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 14 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. நின்ற நிலையில் அபய முத்திரையுடன் இச்சிற்பம் உள்ளது.   "தாரயர் மடமுடையான்" என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன்  இது அமைந்துள்ளது. ஏறக்குறைய கிபி 1500  என இதனை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

7. பட்டியல் எண் 7: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதி நுணுக்கமான வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய வகையிலான உயரம் 10.2 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீக்கமாக 6.3 சென்டிமீட்டர் உயரம். 


8. பட்டியல் எண் 8: நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் இதன் உயரம் 47.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 35 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.   கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு கால சிற்பம்   இது. சிற்பத்தின் அடிப்பகுதியில் "நாயகர்" என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. 

9. பட்டியல் எண் 12:  அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி இல்லாமல் 67 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது.   இது தஞ்சாவூரில் வழிபாட்டில் இருந்த ஒரு புத்தர் சிற்பம். ஏதோ ஒரு வகையில் அங்கிருந்து சென்னை அருங்காட்சியத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 

10. பட்டியல் எண் 19:  நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் 1934 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 58.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட சிற்பம் இது. 

11. பட்டியல் எண் 20:  நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடியவகையில் 23.8 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 18 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் கிபி 12 அல்லது 13. இதில் கீழ்க்காணும் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன.

கா ழு …. ஈ

த்து வி ….து

னண்…. ய ன

பொ த்த … நாய கர்

 

12. பட்டியல் எண் 22:  நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மெட்ராஸ் அருங்காட்சியத்திற்கு 1910 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 20.8 சென்டிமீட்டர் உயரமும், அடிப்பகுதி நீங்கலாக 17.7 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இதன் அடிப்பகுதியில் "அரைசர்"  என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது. 


13. பட்டியல் எண் 24:  நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இச்சிற்பம் அமர்ந்த நிலையில் வலது கர விரல்கள் தரைப்பகுதியைத் தொடுகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு சிற்பம் என அறியப்படுகின்ற இச்சிற்பத்தின் அடிப்பகுதியில் "நத்தன் கூடிய வந்தாள் நாயகர்" என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது.

14. பட்டியல் எண் 28:  நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிற்பத்தில் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 20 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 11 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. "உடையார்" என்ற சொல் இதில் கீழ்ப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

15. பட்டியல் எண் 30: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது.  இதன் முகப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. முக்கோண பத்மாசன வடிவில் அமர்ந்த நிலையில் இருப்பது போல் அமைக்கப்பட்ட சிற்பம் இது.  இதன் அடிப்பகுதியும் மேற்பகுதியு கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. 

16. பட்டியல் எண் 32: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 12 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.  அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது.  இச்சிற்பம் இந்தோனேசியாவின் பெரும் பௌத்தப்பள்ளியான போரபுதூர் கோயில் புத்தர் சிற்பங்களின் வடிவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு.

17. பட்டியல் எண் 37: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 29.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. இரண்டு யாழிகள் ஒவ்வொரு பக்கத்திலும் இருப்பது போன்றும் தலைக்கு மேல் அரசருக்கான பீடம் அமைக்கப்பட்டது போன்றும், அரசர்கள் அமரும் சிம்மாசனம் போன்ற பீடமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.  சிறந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட சிற்பம் இது. 



18. பட்டியல் எண் 45: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட  அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட  நின்ற நிலையில் உள்ள மைத்திரேயரின் சிற்பம் இது. பீடத்தோடு கூடிய வகையில் 29 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.  பீடம் நீங்கலாக 21.5 சென்டிமீட்டர் உயரத்துடன் உள்ளது. "திருவுடையார் அம்மை அ களங்கம் பெருமாள்" என்ற சொற்கள்  இதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன.  நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அமைக்கப்பட்ட அழகிய சிற்பம் இது. 



19. பட்டியல் எண் 63: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. ஜம்பாலா மற்றும் அவரது பெண்துணை வசுதரா இருவரும் அமர்ந்த நிலையில் இருப்பது போன்று அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் உயரம் அடிப்பகுதியோடு கூடிய வகையில் 10 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. 


20. பட்டியல் எண் 80: புத்தரின் தலை மட்டுமே இருக்கின்ற வகையில், ஓரளவு சிதையுண்ட வகையில் உள்ள சிற்பம் இது.  9 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு சிற்பம் என அடையாளப்படுத்தப்படுகிறது.  சிற்பத்தின் நெற்றிப் பகுதியும் கண்களும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. ஆயினும் தங்கத் தகடுகள் நீக்கப்பட்ட  நிலையிலேயே இச்சிற்பம் கிடைத்துள்ளது.  



நாகப்பட்டினத்தில் 1856 முதல் அகழாய்வுப் பணிகளின் போதும் வேறு வகையிலும் சேகரிக்கப்பட்ட 86 வெண்கல புத்தர் சிற்பங்களில் 20 சிற்பங்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே மேற்காணும் பட்டியலில் வழங்கப்பட்டுள்ளன. இந்த 86 சிற்பங்களும் அக்காலகட்டத்தில் இன்றைய சென்னை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டன, அங்கு பாதுகாக்கப்பட்டன என்று அச்செய்திகளை ஆய்ந்து தொகுத்து The Nagapattinam and other Buddhist Bronzes  நூலில் வழங்கியிருக்கின்றார் திரு.டி.என் ராமச்சந்திரன். அவர் 1954ஆம் ஆண்டு  வெளியிட்ட இந்த அரிய நூல் தருகின்ற செய்திகளின் அடிப்படையில்  இன்றைய சென்னை அருங்காட்சியகத்தின் அரும்பொருட்களின் பட்டியலை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.  இந்த ஆய்வின் வழி இச்சிற்பங்கள் அனைத்தையும் ஒன்றாக இதே அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்புப் பகுதியில், ”நாகப்பட்டின வெண்கல புத்தர் சிற்பங்களுக்கான கண்காட்சி” ஒன்றை உருவாக்க தமிழக அரசின் அருங்காட்சியகப் பிரிவை அனுபுகது அவசியம்.  இப்பணியைத் தொடங்குவதன் வழி மறைந்துபோன நாகப்பட்டினத்தின் பௌத்த சிறப்புகள் மீண்டெழவும், அதே வேளை பௌத்த மதத்தை அரசமதமாகக் கொண்டிருக்கின்ற பெரும்பாலான கிழக்காசிய தூரக்கிழக்காசிய நாடுகளுடனான தமிழ்நாட்டின் சுற்றுலா துறையையும் வளர்க்க இது உதவும். அதன் வழி நட்புறவு வலுப்பெறவும் இது வாய்ப்பளிக்கும். 


குறிப்பு: The Nagapattinam and other Buddhist Bronzes  நூலில் மேலும், இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள, நாகப்பட்டினத்தில் கிடைத்த 186 பௌத்த சின்னங்களைப் பற்றிய தகவல்களையும் தனது நூலில் வழங்கியுள்ளார்.   இது மீளாய்விற்கு தேடுதலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.


Saturday, September 7, 2024

 


பள்ளூர் புத்தர் திருக்கோயில். இந்தப் பகுதியில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் இங்கு பொது மக்களால் சிறிய கோயிலாக எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. இந்த புத்தர் திருக்கோயிலை மேலும் வழிபாட்டினை முன்னெடுக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இங்குள்ள மூன்று சிற்பங்களும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமையானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து சிற்பங்களின் தன்மை அவ









ற்றின் காலம் ஆகியவற்றை கண்டறியும் வகையில் இன்று கல்வெட்டியல் அறிஞர் முனைவர் பத்மாவதி மற்றும் ஆய்வாளர் முனைவர் சசிகலா நான் மூவரும் சென்றிருந்தோம். 

ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டு திருவருவங்கள் இவை. சிறிதளவு சிதைக்கப்பட்ட நிலையில் சிற்பங்கள் இருந்தாலும் பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்ட சிறப்புடன் இவை திகழ்கின்றன. பண்டைய வணிகப் பெருவழி பகுதியில் அமைந்திருக்கும் இப்பகுதி பௌத்த மதம் செழித்துப் பரவிய நகரங்களில் ஒன்றாக இணைந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. 

-சுபா