சோழ நாட்டில் புத்தர் சிலைகள் — முனைவர் பா.ஜம்புலிங்கம்
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
Tuesday, November 29, 2022
Wednesday, November 2, 2022
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3
முனைவர் க.சுபாஷிணி
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
இந்த நூலில் மூன்றாம் அத்தியாயம் சங்க காலத்து தமிழ் நிலத்து மன்னர்களைப் பற்றியும், அவர்களின் அரசு, ஆட்சி மற்றும் சமூகம் பற்றிய சங்கப்பாடல்கள் தரும் சான்றுகள் சிலவற்றோடு தொடங்குகிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஆட்சி செய்த கொங்கர், கோசர், வேளிர் போன்ற சிற்றரசர்கள், சிற்றூர் தலைவர்கள் பற்றிய சங்கப் பாடல் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊர் தலைவர்களாக இருந்தவர்களும் புலவர்களாக கவி பாடியிருக்கின்றனர் என்ற செய்தியும், கல்வியாளர்களாக ஆட்சியாளர்கள் இருந்த செய்தியையும் இப்பகுதி விளக்குகிறது.
வணிகர்கள் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் பேணியவர்களாக இருந்த செய்திகள்; கடல் கடந்து சென்று வணிகம் செய்து வந்த செய்திகள்; தூர நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த அயல் நாட்டினர் உள்ளூர் வணிகர்களுடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் வணிகப் பொருட்கள் பற்றி சங்கப்பாடல்கள் கூறுகின்ற செய்திகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
கல்வி வளர்ச்சியும், வளமான சமூகச் சூழலும், சிறந்த வணிகச் சூழலும் இருந்த காலகட்டத்தில் ஆரியர்களின் தென்னாட்டிற்கான வருகை மிகப் பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகள் நடத்துகின்ற மரபினர் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து மன்னர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இதன் காரணத்தால் மன்னர்களும் வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகளில் ஈடுபாடு கொண்டு அந்தணர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் வழங்கத் தொடங்கிய சமூக மாற்றமும் தொடங்கியது. அந்தணர்கள் அரசு நிர்வாகத்துறையில் புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சடங்குகள் நிறைந்த மதக் கோட்பாட்டை ஆதரித்துத் தங்கள் ஆட்சியில் மாற்றத்தைப் புகுத்தினர் என்று விளக்குகிறார் நூலாசிரியர்.
இத்தகைய சூழலில், சங்க கால மன்னர்களுக்குத் தாங்கள் வழங்கி வந்த ஆதரவை வணிகர்கள் விலக்கிக் கொள்ள நேர்ந்தமையே களப்பிரர் கால ஆட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்கக் காரணமாக அமைந்தது என்பதாக இந்த அத்தியாயம் நமக்குச் சங்கம் மருவிய காலத்திற்கான காரணத்தை விளக்குகிறது.
இதன் தொடர்ச்சியாக அமைகின்ற நூலின் நான்காவது பகுதி களப்பிரர் கால அரசமைப்பு பற்றிய செய்திகளை விளக்குவதாக அமைகின்றது.
வரலாற்று ஆய்வறிஞர்களுக்குக் களப்பிரர் கால சமூக சூழலை அறிந்து கொள்வதற்கு தேவையான சான்றுகள் கிடைக்கவில்லையே என்ற ஒரு குறை மிக நீண்ட காலமாக இருந்தது. இதற்கு நூலாசிரியர் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தரியும் செயல் முறையை பயன்படுத்தும் வகையைச் சுட்டிக்காட்டுகிறார்.
சிறு மன்னர்களும், வேளிர்களும், வணிகத் தலைவர்களும் சங்க கால அரசர்கள் வேத கேள்வியை அடிப்படையாகக் கொண்ட அந்தணர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை ஆதரிக்க தொடங்கிய பின்னர் இயல்பாகவே தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டு களப்பிரர்க்கு ஆதரவளித்து அவர்களின் அரசு தமிழகத்தில் அமைய காரணமாகியது என்ற காரணத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
பூலாங்குறிச்சி கல்வெட்டும் கரூர் கல்வெட்டும் களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கின்ற முக்கியச் சான்றுகளாக அமைகின்றன. இதில் குறிப்பாக கரூர் கல்வெட்டு ஐம்பெருங்குழு, சங்கம் போன்ற முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிற ஒரு கல்வெட்டாக அமைகிறது. சங்கம் என்பது பௌத்த அறிஞர்களும், சமண அறிஞர்களும் தங்கள் சமயப் பணியை ஆற்ற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பு என்பதோடு ஐம்பெரும் குழுக்கள் என்ற வணிகக் குழுக்கள் நிர்வாகத்தை நடத்துகின்ற பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்த செய்திகளையும் அறிய முடிகின்றது.
பூலாங்குறிச்சி கல்வெட்டு, முக்கியமாக மூன்று பௌத்த ஆலயங்கள் இருந்த செய்தியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பௌத்த கோயில்கள் ஏரியின் கண்மாயை ஒட்டியவாறு அமைந்தது என்றும், தேவகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும், இது பற்றிய கல்வெட்டை உருவாக்கிய போது மன்னர் இந்த ஆணையை வெளியிட, அறிஞர் குழு இதனை ஓலையில் எழுதி சரி பார்த்து பின்னர் இது கல்வெட்டில் செதுக்கப்பட்டது என்ற செய்தியையும் நாம் அறிய முடிகிறது. இந்த தேவகுலம் என குறிப்பிடப்படும் கோயில் அமைப்பானது சிறந்த நிர்வாக மையமாகவும் இருந்தது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இங்கு முக்கியமாக குறிப்பிடப்படும் கரூர் கல்வெட்டு இப்போது தொலைந்து போய்விட்டது என்ற செய்தி. அது ஒரு சிறு பாறையாக இருந்ததாலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்ததாகவும், அதனைப் பற்றிய செய்தியை அறிந்து அது பதியப்பட்ட பின்னரும் கூட பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் சாலை விரிவாக்கத்தின் போது அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ அது சிதைந்து உடைந்து காணாமல் போய்விட்டது. ஐம்பெரும் குழுவான வணிகக் குழுவைப் பற்றி கூறுகின்ற இந்த மிக முக்கியம் வாய்ந்த கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இன்று நாம் தொலைத்த ஒரு வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.
இந்த ஒரு கல்வெட்டு மட்டுமல்ல; நமது அக்கறையின்மை காரணத்தினாலும் வரலாற்றுச் சான்றுகளை மதிக்க தெரியாத மூடத்தனத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் இழந்தவை ஏராளம்.
இழந்து கொண்டிருப்பதும் ஏராளம்!
தொடர்கிறது..!
-சுபா
--------------
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
Sunday, October 30, 2022
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2
க.சுபாஷிணி
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
நேற்று நூல் பற்றிய பொதுவான தகவல்களை வழங்கியிருந்தேன். இனி தொடர்ந்து அதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறு அறிமுகமாகக் காண்போம்.
இந்த நூலின் முதல் அத்தியாயம் களப்பிரர் என்பவர் யார்? அவர்கள் ஆட்சி செய்த காலம், களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் போன்ற தரவுகள் எத்தகைய மூலச்சான்றுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவல்களை வழங்குகின்றது. அந்த வகையில், இன்றைக்கு இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் களப்பிரர் பற்றிய மூலச் சான்றுகளுள் மிகப் பழமையானதாக, புத்ததத்தர் என்ற பௌத்த தேரர் எழுதிய வினய விநிச்சயம் என்ற நூலையும், பூலாங்குறிச்சி கல்வெட்டையும் நூலாசிரியர் முனைவர். ஆ.பத்மாவதி குறிப்பிடுகின்றார்.
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் என்பன இன்றைய தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் 1979ஆம் ஆண்டில் கல்வெட்டு ஆய்வாளர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் அவர்களால் கண்டறியப்பட்டன. களப்பிர மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களது ஆட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் போன்றவை பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் வழங்குகின்றன.
பாண்டியர் காலத்து வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புறச் செப்பேடு கூறும் களப்பிரர் பற்றிய செய்திகள், பல்லவர் காலத்து முப்பது செப்பேடுகள், சாளுக்கியர் காலத்து செப்பேடுகள் போன்றவற்றையும், இலக்கியச் சான்றுகளாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறும் மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார் புராணங்களோடு வருகின்ற சில செய்திகளையும், கல்லாடம், யாப்பெருங்கலும் போன்ற இலக்கியங்களையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய மூலச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் களப்பிரர்கள் இன்றைய கர்நாடக பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், பாண்டிய மன்னர்களால் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை மீட்டவர்கள் என்ற செய்தியையும், சேர சோழ பாண்டிய மன்னர்களை வென்று அவர்களுடைய சின்னங்களை தமது சின்னங்களாகக் கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் பௌத்த, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் களப்பிரர் கால நிலையின் அடிப்படையை நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.
இந்த நூலின் இரண்டாவது அத்தியாயம் களப்பிரர் காலம் பற்றியும், களப்பிரர்கள் பற்றியும், அவர்களது பூர்வீகம் பற்றியும் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் எழுதிய கருத்துக்களை ஆய்வு செய்வதாக அமைகிறது.
தமிழக வரலாற்று ஆய்வறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார், மு. ராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமி. க.ப. அறவாணன், பி. ஜி. எல். சுவாமி, சி.மீனாட்சி, இரா. பன்னீர்செல்வம், மா. இராசமாணிக்கனார், பா. மாசிலாமணி, ந. சுப்பிரமணியன், கிருஷ்ணசாமி ஐயங்கார், கே. கே. பிள்ளை, நடன காசிநாதன், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் இன்னும் சில ஆய்வாளர்களின் நூல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை அலசும் வகையில் இந்த அத்தியாயத்தை நூலாசிரியர் ஆ.பத்மாவதி அமைத்திருக்கின்றார்.
வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தவர்கள் என்பதையும், இவர்கள் இன்றைய கர்நாடகத்தைச் சேர்ந்த கோலாரில் உள்ள நந்தி மலை பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பதையும், ஆய்வாளர் க.ப.அறவாணன் களப்பிரர்கள் தமிழர்களே என்றும், அவர்கள் பிராமணர்களையும் பிராமணர்களின் யாகங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் என்று கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆய்வாளர் மா. ராஜமாணிக்கனார், ’தமிழக வரலாறு’ என்னும் தனது நூலில் களப்பிறர் ஆட்சி செய்த காலம் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த காலமாகியதால் அதாவது கிபி 300 இருந்து கிபி 575 வரை, ’தமிழகத்து வரலாற்றின் இருண்டு காலம்’ எனக் கூறுவதையும் குறிப்பிடுகின்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பொற்கோ அவர்கள், ’களப்பிரர் தமிழர் அல்லர் என்றும் அவர்கள் காலம் இருண்ட காலம் என்று கூறுவதும் சரியல்ல. களப்பிரர் காலம் தமிழர் ஆட்சி செய்த காலம்தான்; ஒளியுள்ள காலம் தான்; அது பதினென்கீழ்கணக்கு போன்ற நூல்கள் தோன்றிய காலம் தான்’, என்று கூறுவதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.
களப்பிரர்கள் தமிழர்கள் தானா அல்லது வேங்கடத்திற்கும் இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த வடுகர்களா அல்லது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது முத்தரையர்கள் என குறிப்பிடப்படுபவர்களா என்ற பல்வேறு கருத்துக்களும் இந்த அத்தியாயத்தில் அலசப்படுகிறன.
நூலாசிரியர் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள ஏராளமான நூல்கள், வரலாற்று ஆய்வாலர்களுக்குத் தமிழக வரலாற்றின் பல்வேறு பார்வைகளை வழங்கக்கூடியவை.
தொடரும்..!
-சுபா
--------------
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
Saturday, October 29, 2022
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் திறனாய்வு - 1
-முனைவர் க.சுபாஷிணி
களப்பிரர் காலம் இருண்ட காலம் எனத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் நீண்ட காலமாகக் கூறி வருவதை நாம் வாசித்தும் கேட்டும் அறிந்துள்ளோம். நான் மலேசிய சூழலில் தமிழ் மொழி பற்றிய வரலாறு, தமிழக வரலாறு என வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கூட கிபி 2ஆம் நூற்றாண்டு அதாவது, சங்கம் மருவிய காலம் முதல் பல்லவர் காலம் வரை இருண்ட காலம் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதை அப்போது தமிழ் கற்றபோது படித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.
களப்பிரர் காலம் என்பது இருண்டு காலம் என்றால் அது யாருக்கு இருண்ட காலம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது; ஆயினும் பெரும்பாலும் இதனை நாம் யோசிப்பதில்லை. இந்த கேள்வியை எழுப்ப வேண்டியதும் ஆராய வேண்டியதும் அவசியம் அல்லவா?
சேர, சோழ, பாண்டியர், பல்லவர், நாயக்கர் கால வரலாற்றை அறிந்து கொள்ள இன்று நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் அல்லது ஏதாவது தொல்லியல் தடயங்கள், களப்பிரர் வரலாறு கூறும் வகையில் கிடைக்குமா என்பது பல வரலாற்று ஆசிரியர்களுக்கு இருந்த ஒரு ஏக்கமாகவும் இருந்தது எனலாம். களப்பிரர் காலம் பற்றி விவரிக்கும் ஆய்வு நூல்கள் சில வெளிவந்துள்ளன. அவை களப்பிரர் பற்றிய சில தகவல்களை வழங்கினாலும் ஓரிரு நூல்கள் பொருந்தாத பல தகவல்களை வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கின என்பதை மறுக்க முடியாது.
இத்தகைய சூழலில், முழுமையான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பணி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளை நிகழ்த்தி வரும் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் எழுதி, மிக நீண்ட காலமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் ’புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற இந்த நூல்.
2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது நானும் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவும் அமர்வுகளுக்குத் தலைமையேற்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்தச் சூழலில் முனைவர். பத்மாவதி அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்தக் களப்பிரர் கால ஆய்வுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் அவருக்கே உரித்தான எக்ஸைட்மண்ட் குறையாமலும் 🙂 என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதற்கு மறு ஆண்டு சென்னையில் மீண்டும் சந்தித்த போது அவரை விளக்கச் சொல்லி களப்பிரர் கால வரலாறு பற்றிய சில ஒலிப்பதிவுகளைச் செய்திருந்தேன். அப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ‘மன்ணின் குரல்’ வெளியீடாக அப்போது வெளியீடு செய்திருந்தேன். http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html
2021ஆம் ஆண்டு இறுதியில் அவரது ஆய்வு நூல் வடிவில் வெளிவந்தது. களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையை வழங்கும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது.
இந்த நூலின் அத்தியாயங்கள் பேசும் சில செய்திகளைச் சிறு பதிவுகளாக அடுத்த சில நாட்களுக்கு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யலாம் எனக் கருதுகிறேன்.
இதுவரை இந்த நூலை வாங்கவில்லை என்றால் இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்!
தொடரும்..!
--------------
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
-சுபா
Sunday, October 2, 2022
புழல் நகர் புதிய பௌத்த விகாரை அடிக்கல் நாட்டு விழா
சென்னை புழல் நகரில் இன்று ஒரு புதிய பௌத்த விகாரையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த திரு கௌதம் சன்னாவுடன் சென்றிருந்தபோது இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திரு கௌதம சன்னா இந்த தாய்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பௌத்த சிலையைத் திறந்து வைத்தார்.
Monday, April 11, 2022
மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 8
இந்தப் பதிவில் இறுதியாக நான் வழங்குவது வாட் சுக்தோர்ப்ரன்சாராம் (Wat Sukthornprakcharam) பௌத்த விகாரை மற்றும் பள்ளி அமைந்திருக்கும் வளாகம். இது ஒரு கலைப் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் நேர்த்தியாகக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மலாய் மொழியில் Selamat Datang, அதாவது நல்வரவு என்று எழுதப்பட்டு அதன் கீழ் பௌத்த விகாரையின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்து வளாகத்தின் உள்ளே செல்லும்போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழு கிழமைகளுக்கும் எழுவகை புத்தரின் சிற்பங்கள். திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் ஒரு உருவத்தை அமைத்திருக்கின்றார்கள்.
ஒரு குன்றின் மேல் அமைந்தது போல இந்தக் கோவில் வளாகம் இருக்கின்றது. படிகளில் ஏறிச் சென்றால் வலது புறமும் இடது புறமும் எனச் சிறிய சிறிய சன்னிதிகள் உள்ளன.
ஒரு பகுதியில் 4 தலையுடன் பிரம்மாவின் உருவம் அமைக்கப்பட்ட சிற்பம் உள்ளது. மற்றும் ஒரு சன்னிதியில் போதிசத்துவருக்கான உருவச்சிலை அமைந்திருக்கின்றது. ஏனைய சன்னிதிகளில் புத்தரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கடந்து குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே சாய்ந்த நிலையில் சயன புத்தரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு உருவச்சிலை, ஆனால் மிகப் பிரம்மாண்டமான வகையில் பினாங்கு மாநிலத்தில் இருக்கின்றது.
இந்தப் பகுதியிலிருந்து இறங்கி இடது புறமாக மேலும் நடந்தால் அங்குப் பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
முதலில் வருவது மிக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இதில் புத்தர் தனது சீடர்களுக்கு ஞானம் வழங்குவது போலும், கீழே தரையில் சீடர்கள் அமர்ந்திருப்பது போலும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் அனைவரையும் இங்கே அமர்ந்திருந்து தியானம் செய்யும் வகையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கடந்து வரும்போது ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் தென்படுகின்றன. அதற்கடுத்து கீழே வரும்போது அழகான ஒரு குளத்தின் நடுவே தாராதேவி நின்ற நிலையில் அருள்பாலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
அதற்குக் கீழே வரும்போது புத்தரின் அன்னை மற்றும் அவரது தோழியர் சூழ நிற்கும் சிற்ப வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வடிவங்கள் சேலை அணிந்த வகையில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக நாம் காண்பது ஒரு சிற்பம். இது குதிரை ஒன்று பின்புறத்தில் நிற்க புத்தர் தனது தலைமுடியை இழுத்து கத்தியால் வெட்டுவது போல ஒரு காட்சி.
இவற்றையெல்லாம் கடந்து வந்தால் பவுத்த பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வரலாம். இப்பகுதி வழிபாடுகளும், தியான நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பௌத்த விகாரைக்கு வாசல் புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெயரை குறிப்பிட்டு நான் இணையத்தில் தகவல் தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த பௌத்த விகாரை மட்டுமல்ல.. மேலும் சில பௌத்த விகாரைகளின் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் வகையில் இல்லை. நேரடியாகச் சென்று அவற்றைக் காணும் போதுதான் இத்தனை பௌத்த விகாரைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
பௌத்தம் கிபி 1, 2 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்தும் கடல்வழி பயணித்த வணிகர்கள் மற்றும் பௌத்த பிக்குகளின் முயற்சிகளினால் கிழக்காசியா மற்றும் தூர கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. புதிதாகப் பரவிய நிலத்தில் அவை மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு வழிபாடுகளில் மேலும் சில புதுமைகளைப் புகுத்திக் கொண்ட வகையில் மாற்றம் கண்டன. மாற்றங்கள் உட்புகுந்தன என்றாலும்கூட பழமையான பௌத்தப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வழிவழியாக வழிபாடு செய்யப்பட்ட பகுதிகளில் வழிபாடுகள் தொடர்வதை கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் காணமுடிகிறது.
மலாயா மலேசியாவாக மாறிய பின்னரும் கூட அரச சமயமாக இஸ்லாமிய சமயம் முக்கியத்துவம் பெற்ற பின்னரும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிறைந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது. பௌத்த விகாரைகள் சீனர்களுக்கும் தாய்லாந்து மக்களுக்கும் உரிய வழிபாட்டுத்தலங்கள் தானே என ஒதுக்கி விடாமல் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி என்ற ரீதியில் இவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து அவற்றின் வரலாற்று பின்னணிகளைத் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய தேடுதல்கள் நமக்கு மேலும் சில புதிய தரவுகளை வழங்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
-சுபா
11.4.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia
Sunday, April 10, 2022
மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 7
மலேசியாவின் கெடா மாநிலத்தில் இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய 37 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று என்பதோடு பண்டைய ஸ்ரீவிஜயப் பேரரசு அதன் தலைநகராகக் கடாரத்தைக் கொண்டிருந்த ஒரு நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மிக முக்கியம் வாய்ந்த துறைமுகப் பகுதியாகவும் பண்டைய காலத்தில் இருந்தது.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடல் வழி பயணம் செய்து கிழக்காசிய நாடுகளுக்கு வந்த பௌத்த பிக்குகளும், பௌத்தத்தைத் தழுவிய வணிகர்களும் இப்பகுதிகளில் பௌத்தம் மிக ஆழமாக வேரூன்றி வளர அடிப்படையை உருவாக்கியிருந்தனர்.
காலப்போக்கில் அரசியல், சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களை விட சீனர்களும், தாய்லாந்து சயாமிய மக்களும் இப்பகுதியில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக அமைகின்றனர்.
நான் கடந்த சில தினங்களுக்கு முன் கெடா மாநிலத்தில் சிக் மற்றும் ஜெனியாங் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற போது அப்பகுதியில் மட்டுமே இருந்த சில பௌத்த விகாரைகளுக்குச் சென்றிருந்த செய்தியை எழுதி இருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது வாட் விசுத்திப்ரதராம் (Wat Visuthipradittharam) பௌத்த விகாரை.
இந்த பௌத்த விகாரையின் வரலாற்றைப் பற்றி இணையத்திலும் கோவில் வளாகத்திலும் தேடிப்பார்த்தேன். ஆனால் தகவல்கள் கிட்டவில்லை. ஒரு ஆய்வுக் கட்டுரை மட்டும் கெடா மாநில பௌத்த விகாரைகளின் பட்டியலில் இந்த விகாரையின் பெயரையும் இணைத்து வழங்கியிருக்கிறது. மேலும் ஒரு கட்டுரை இந்த பௌத்த விகாரை கெடாவில் இருக்கும் அனைத்து பௌத்த விகாரைகளிலும் மிகப்பெரியது என்று குறிப்பிடுகிறது. விகாரையின் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்த விகாரை அமைந்திருக்கும் நிலப்பகுதியின் சுற்றளவை ஏனைய நான் நேரில் சென்று பார்த்த விகாரைகளுடன் ஒப்பிடும்போது பள்ளி அமைந்திருக்கும் நிலப்பகுதி அவ்வளவு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தோன்றியது.
கோயிலின் அமைப்பு தாய்லாந்து பவுத்த விகாரை கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. பௌத்த பள்ளியின் சந்நிதிகள், மைய விகாரையைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பௌத்த விகாரையில் தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதற்குச் சான்றாக ஆங்காங்கே பவுத்த பிக்குகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நான் சென்றிருந்த நேரம் நன்பகல் 12:00 மணி என்பதால் பௌத்த பிக்குகள் மதிய உணவிற்காக அவர்கள் இருப்பிடம் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பௌத்த பிக்கு நான் கோயில் பகுதிக்குச் செல்லும் பொழுது எனக்கு கோயிலின் கதவை திறந்து விட்டு மலாய் மொழியில் உள்ளே சென்று என்னை வழிபடச் சொல்லிவிட்டு அவர் தங்குமிடம் சென்றுவிட்டார்.
இந்தப் பௌத்த விகாரையில் மிகப் பெரிய வடிவிலான நாக வடிவம் வாயில் பகுதியில் இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. எழு தலைகொண்ட நாகத்தின் வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளது. இதே வகை உருவ அமைப்பில் புத்தரின் தலைப் பகுதியைச் சுற்றி பாதுகாக்கும் வகையில் ஏழு தலை நாகம் இருக்கும் சிற்பங்களை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் நான் பல பௌத்த விகாரைகளில் பார்த்திருக்கின்றேன்.
புத்தர் தனது அரசைத் துறந்து ஞானம் பெற பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற போது அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் நாகர்கள் என்ற கருத்து உண்டு. நாகர்கள் இனம் பண்டைய இந்தியாவின் பூர்வ குடி இனம் என்பது மட்டுமன்றி இலங்கையின் பூர்வ குடி இனம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதில் குறிப்பாக ஏழு தலை நாகம் எனும் உருவ அமைப்பு நாகர்களில் ஏழு வகை குழுக்கள் புத்தருக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கிறது. நாகர்கள் இனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏழு தலை நாகம் என்ற உருவகம் நாளடைவில் புத்தர் சிலைகளில் இணைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த உருவ அமைப்பை மானுடவியல் பார்வையில் வரலாற்று கோணத்தில் ஆய்வு செய்வது தேவையாகின்றது.
இந்தப் பௌத்த விகாரையின் நுழைவாயில், சன்னதிகள், மையக் கோயில் என அனைத்துமே பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கெடா மாநிலத்தின் இன்றும் வழிபாட்டில் இருக்கக்கூடிய முக்கிய பௌத்த விகாரையின் பட்டியலில் இந்தக் கோயிலும் இடம் பெறுகின்றது.
இந்த பௌத்த விகாரையின் முகவரி
Wat Visuthipradittharam
Kg.Titi Akar Mk.Padang, Kerbau Jln Sg. Tiang Pendang, Kedah
-சுபா
10.4.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia
























































