மகதை நாட்டில் பௌத்தம் - ஆறகளூர் பொன். வெங்கடேசன்
01.04.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 6
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
மகதை நாட்டில் பௌத்தம் - ஆறகளூர் பொன். வெங்கடேசன்
01.04.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 6
களப்பிரர்களின் பௌத்த பேரரசு ஆட்சியும் வீழ்ச்சியும் - முனைவர் ஆ.பத்மாவதி
28.12.2024
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 5
கடலூர் மாவட்டத்தில் பௌத்த தடயங்கள் - முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்
22.12.2024
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 4
க.சுபாஷிணி
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரிந்து என் வீட்டில் உள்ள நூல்களை நான் யாருக்கும் வாசிப்பதற்கு கடன் கொடுப்பதில்லை. 🙂 ஆனாலும் சென்னையில் வீட்டிற்கு வருகின்ற சில நண்பர்கள் வீட்டு நூலகத்தில் உள்ள எனது சேகரிப்பில் இருந்து எப்படியோ சில நூல்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அப்படி நான் வாங்கி வைத்திருந்து தொலைத்த நூல்கள் ஒன்று கனகலதா முகுந்த் எழுதிய the world of the Tamil merchant. நம் வீட்டு நூலகத்தில்
நாம் விழுந்து விழுந்து தேடினாலும் யாரோ எடுத்துச் சென்றுவிட்ட நூலை கண்டுபிடிக்க முடியாது. ஆக என்ன செய்வது? மீண்டும் ஆர்டர் செய்து வாங்க வேண்டியது தான். 🙁
சென்ற வாரம் அமேசானில் தேர்ந்தெடுத்து இவ்வார தொடக்கம் இரண்டு நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்று இது.
ஏற்கனவே வாசித்திருந்தாலும் பண்டைய தமிழகத்தின் வணிகம் தொடர்பான ஒரு நூல் என்ற வகையில் மீண்டும் இதனை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றும் இன்றும் இரு நாட்கள் இந்த நூலை வாசித்து முடித்தேன். கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளில் இந்த நூல் தமிழகத்தின் வணிகர்களின் உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சி செய்கிறது.
1. Merchants and Trade in the Pre-Modern Era: Issues and Insights
2.Trade and Merchants in Ancient Tamilakam
3. State, Polity and Overseas Relations under the Tamil Kingdoms
4. The Temple, Nagaram and Merchants: A Study in Synergy
5.The Tamil Merchant Down the Ages: A Retrospect
AHIMSA நூலில் திரு தேவ்தத் குறிப்பிட்டிருப்பது போல சிந்துவெளி பண்பாட்டின் மக்களது வாழ்க்கை வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பண்பாட்டை நமக்கு இன்றைக்கு கிடைக்கின்ற சங்க இலக்கியச் சான்றுகளும் தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளும் காட்டுகின்றன. இந்த நூலும் நமக்கு நன்கு பரிச்சயமான மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை குறிப்புகளையும் விளக்குகிறது. கூடுதலாக சில அகழாய்வுச் செய்திகளையும் தருகின்றது.
இந்த நூலில் என் கவனத்தை கவர்கின்ற ஒரு பகுதியாக அமைவது நகரம், வணிகர்கள், நகரத்தார்கள் என்ற தலைப்பிலான விவரங்கள்.
நூலில் தமிழ்நாட்டு வணிகக் குழுக்கள் பற்றி ஒரு தனி அத்தியாயம் அமைந்திருக்கின்றது. அதில் தனிநபர் வணிகர்கள், நகரத்தார் வணிகர்கள் மற்றுமன்றி அமைப்பாக வணிகக் குழுக்களாக இயங்கிய அமைப்புகளை நூலில் ஆசிரியர் விளக்குகின்றார். நெடுந்தூரம் பயணம் செய்து கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களில் மணிகிராமத்தார், திசையாயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், நானாதேசி, வளஞ்சியார் அஞ்சுவண்ணம், சித்திரமேளி பெரியநாடு போன்ற குழுக்கள் பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.
களப்பிரர் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என இலக்கியங்கள் கூறுகின்றன என ஆங்காங்கே நூலில் குறிப்பிடப்படுகிறது. பௌத்தமும் சமணமும் முக்கியத்துவம் பெற்ற ஆனால் அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆட்சி செய்த காலம் என இதனை நூலாசிரியர் நிறுவ முயற்சிக்கிறார். இந்த நூலுக்கு பின் வந்த முனைவர் பத்மாவதியின் "களப்பிரர் காலம்" நூல் இந்த செய்திகளுக்கு மாற்றுக் கருத்தை வழங்குகின்றன.
மேலும், நூலாசிரியர் சைவம், வைணவம் என்பதற்கு பதிலாக "இந்து மதம்" என்று பொதுமைப்படுத்தி குறிப்பிடுகின்றார். மட்டுமன்றி மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களை ஆட்சி செய்த ஸ்ரீ விஜயப்பேரரசு புத்த மதம் சார்ந்த ஓர் அரசு என்பதை விடுத்து இந்து மதம் சார்ந்த அரசு என்றும் குறிப்பிடுகின்றார். இவை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள். இவை தவிர்த்து நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற தகவல்கள் பல நூல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைகின்றன.
தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு செய்கின்ற தமிழ் உலகம் பொதுவாகவே கலைகள், தெய்வங்கள் என்ற பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வணிகத்தின் மேன்மையை குறைத்து பார்ப்பதாகவே நான் நினைப்பதுண்டு. பண்டைய தமிழ் நிலத்தின் வணிகப் பரப்பு என்பது மிகப் பெரிது என்றே இன்று நமக்கு கிடைக்கின்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் தமிழ் நிலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களது பார்வை தமிழ்நாட்டின் வணிகத்தை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. வணிகம் அது தருகின்ற பொருளாதார மேன்மை போன்ற சிந்தனைகள் தான் இன்று நமக்கு அவசியம்.
மிக நீண்ட காலமாக கடல் வணிகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சீனா இன்று உலக வணிக வல்லரசாக உயர்ந்துள்ளது. வணிக சிந்தனைக்கு மட்டுமல்லாது முறையான ஆவணப்படுத்துதலையும் மிக நீண்ட காலமாகச் செயல்படுத்தி வரும் வழக்கம் சீனப்பேரரசில் அடிப்படையான ஒன்றாக இருந்தது. சீனர்களின் கட்டொழுங்கும் கடமைப்பாடும் பொருளாதார ஆர்வமும் நமது சிந்தனைக்குள் மீண்டும் நிலை பெற வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டு வணிகம் பற்றி பேசுகின்ற இத்தகைய நூல்கள் பற்றிய செய்திகள் நம்மிடையே அதிகம் வலம்வர வேண்டும்.
நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள். இந்த நூல் பென்குவின் வெளியீடாக வந்துள்ளது. விலை இந்திய ரூபாய் 299.
-சுபா
18.12.2024
கோயில்களில் புத்தத் தடயங்கள் - முனைவர் ராஜேஸ்வரி செல்லய்யா
15.12.2024
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 3
நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் - முனைவர் க. சுபாஷிணி
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 2
08.12.2024
களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் - முனைவர் ஆ.பத்மாவதி
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 1
01.12.2024
பொதுவாகவே மலேசியாவில் அகழாய்வுகள் என ஆராயும் போது நமக்குத் தெரிவது பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுகள் பற்றிய செய்திதான். ஆனால் தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் ஸ்ரீ விஜயப் பேரரசு காலத்து வரலாற்றுச் சான்றுகள் பல, அகழாய்வுப் பணியின் போதும் கட்டுமான பணிகளின் போதும் கிடைத்துள்ளன.
"The Silk Road Journey with Xuanzang"- Sally Hovey Wriggins திறனாய்வு முனைவர் சுபாஷினி
யுவான் சுவாங்கின் பட்டுப் பாதை வரலாற்றுப் பயணம் - நூல் திறனாய்வு
அ. குமரேசன்
நூல் அறிமுகம்: ‘தமிழர் புலப்பெயர்வு’ (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு)
‘தமிழர் புலப்பெயர்வு’ Tamizhar Pulapeyarvu (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு)
ஒரு புத்தக அறிமுகத்திலிருந்து….
திக்கெட்டும் சென்ற தமிழர்களின் வரலாறும் வாழ்க்கையும்
அ. குமரேசன்
ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் புலம் பெயர்தலைத் தொடங்கினார்கள். உணவைத் தேடி, உறைவிடம் தேடி, இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடங்களைத் தேடி அந்தப் புலப்பெயர்வுகள் நடந்தன. அதனால் சென்று பரவிய பூமிப் பகுதிகளின் தட்ப வெப்பம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப மனிதர்களின் உடல் தோற்றத்தில், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தொடக்கக் காலத்தின் அந்தப் புலப்பெயர்வு நிகழ்ந்ததால்தான் மனித இனம் பிழைத்தது. இல்லையேல் டைனசோர் போல அழிந்தே போயிருக்கும் அல்லது ஏதுமறியாக் குறுங்கூட்டமாகச் சுருங்கிப் போயிருக்கும். புலப்பெயர்வால் சமூக நாகரிகங்கள் தோன்றின.
புலம் பெயர்ந்ததால் பிழைத்தது அன்று நிகழ்ந்தது. பிழைப்புக்காகப் புலம் பெயர்வது இன்று நிகழ்கிறது. புலம் பெயர்ந்து வேறொரு புலத்தில் வாழ நேரிடுவதன் வேதனைகள், சந்திக்கும் கொடுமைகள், தாங்கிக்கொள்ளும் அவமானங்கள் பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம். சொந்த அனுபவக் குறிப்புகளாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும், நாவல் சிறுகதை கவிதைப் புனைவுகளாகவும் எழுதப்படுகின்றன. திரைப்படங்கள் வருகின்றன. போய்ச் சேர்ந்த நாட்டிலும் சேர்த்துக்கொள்ளப்படாதவர்களாக, தாய்நாட்டிற்கும் திரும்ப முடியாதவர்களாக லட்சக் கணக்கானவர்கள் குழந்தைகளோடு தவித்துக்கொண்டிருக்கிற செய்திகளைப் பார்க்கிறோம்.
தமிழ் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற பலர் தொழில், வணிகம் என காலூன்றி, சென்றடைந்த நாடுகளின் குடிமக்களாகவே மாறிவிட்ட வரலாறுகளும் இருக்கின்றன. அங்கே அவர்களும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள், சுமார் 160 நாடுகளில் இன்று தமிழ் மக்கள் வேரூன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பில் அந்த நாடுகளும் வளர்ச்சியடைந்தன..
எடுத்துக்காட்டாக, இந்தியாவை பிரிட்டன் அரசு அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது இங்கேயிருந்து அங்கே சென்று குடியேறியவர்களின் உழைப்பாலும்தான் அந்த நாடு வளர்ந்தது. இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் அங்கே தலைமுறை தலைமுறையாக பிரிட்டிஷ் மக்களாகவே குடியுரிமையோடு வாழ்கிறார்கள். இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷப் சுனக் அந்நாட்டின் பிரதமராகவே ஆக முடிந்தது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் அடையாளங்களில் தமிழர்கள், சீனர்களின் உழைக்கும் கரங்கள் பதிந்திருக்கின்றன. இலங்கையில் தொன்மைக் காலத்திலிருந்தே வாழ்கிற தமிழர்களும் இருக்கிறார்கள். பிற்காலத்தில், பிரிட்டிஷ் முதலாளிகளின் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து கங்காணிகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களும் இருக்கிறார்கள். சிங்கள இனவாத அரசால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதும், உரிமைகளை மீட்க இயக்கங்கள் புறப்பட்டதும், அரசுப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்ததும், அது ரத்தச் சகதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுமான வரலாற்றுப் பக்கங்களும் இருக்கின்றன.
அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து குடியேறி, குடியுரிமை பெற்று வாழ்கிற பல நாட்டவர்களும் இனத்தவர்களும் தலைமுறைகளைத் தாண்டியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே இனக் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து, தமிழகத்திலிருந்து சென்ற ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தற்போது அங்கே அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கறுப்பின மக்கள் இன்று அமெரிக்காவின் சம உரிமை பெற்ற குடிமக்கள். அந்தச் சம உரிமையை நிலைநாட்ட நடைபெற்ற போராட்டங்கள் எழுச்சி மிக்கவை. அத்துமீறல்களை எதிர்கொண்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைபெற்ற “பிளாக் மேட்டர்ஸ்” போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தவை.
இன்றைக்கும் பட்ட மேற்படிப்பு படித்த தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் வேலை செய்கிறவர்களாகப் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களான அவர்களுக்கு அங்கே நிலையாகக் குடியிருக்கும் உரிமையை வழங்கும் பச்சை அட்டை வழங்கப்படுகிறது. அமெரிக்கக் குடிமக்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறவும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பாரசீக வளைகுடா நாடுகளில் நிறுவனங்களின் பொறியியலாளர்களாகவும் அலுவலர்களாகவும் வேலை செய்யச் சென்றவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாகக் கேரளத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் நிறையப் பேர் சென்றிருக்கிறார்கள். நல்ல ஊதியம் கிடைப்பதால் நிறைய சேமித்து வைத்து நாடு திரும்பும் எண்ணத்துடன் ஏராளமானோர் கட்டுமானத் தொழிலாளர்களாகப் போயிருக்கிறார்கள். அந்தக் காலக் கங்காணிகள் போல ஏமாற்றுகிற இந்தக் கால ஏஜென்டுகளால் கொண்டு செல்லப்பட்டு, ஆடு, ஒட்டகம் மேய்ப்பவர்களாகப் பலர் நைந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஆடு ஜீவிதம்’ நாவலும் திரைப்படமும் இதைக் காட்டியிருக்கின்றன.
புலம் பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க, புலம் பெயர்க்கப்பட்டவர்களின் கதைகள் மறுபுறத்தில் கசப்பான உண்மைகளையும் கடுமையான நிலைமைகளையும் உணர்த்துகின்றன. பல நாடுகளில் தோட்டத் தொழிலாளர்கள் தேவைப்பட்டபோது, அங்கெல்லாம் சொர்க்க பூமி திறந்து வைக்கப்பட்டிருப்பதாக மாய பிம்பம் காட்டித் தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு, வியர்வையுடன், ரத்தத்துடன் மனித மரியாதையும் உறிஞ்சப்பட்டவர்கள் அப்படிப் புலம் பெயர்க்கப்பட்டவர்கள்தான். “பிறப்பொக்கும்” என ஏற்க மறுக்கிறவர்களால் ஏற்பட்ட தலைமுறை அவமானங்களிலிருந்தும் சாதியப் பாகுபாட்டு வன்மங்களிலிருந்தும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறும் கனவோடு அந்த நாடுகளுக்குச் சென்றார்கள். ஆனால் அங்கெல்லாம் அவர்களுக்குக் கூலி கிடைத்தாலும், சக மனிதர்கள் என்ற மதிப்பு கிடைத்ததாகக் கூறுவதற்கில்லை.
போர்களில் தோற்கடிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களை அடிமைகள் என்று அறிவித்து அரண்மனைகளில் இழிவான வேலைகளில் ஈடுபடுத்திய அரசர்கள் பற்றிப் படித்திருக்கிறோம். கடத்தி வரப்பட்ட அடிமைகளை வணிகக் கோமான்கள் பொது இடத்தில் நிறுத்தி ஏலம் விட்ட கதைளைக் கேட்டிருக்கிறோம். கைப்பற்றப்பட்ட பொருள்களோடு கூடுதல் பொருளாகவே அடிமை மனிதர்களைக் கருதி விற்பனை செய்திருக்கிறார்கள். மற்ற கோமான்களுக்குப் பரிசாகக் கொடுக்கும் பொருள்களாகவும் அடிமைகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆம் மாளிகைகளின் இதர தட்டுமுட்டுச் சாமான்களோடு அந்த மனிதர்களும் வெறும் பொருள்கள்தான். புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
‘தமிழர் புலப்பெயர்வு’ Tamizhar Pulapeyarvu (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு) என்ற புத்தக அறிமுகத்தின்போது விரிந்தவையே மேற்கண்ட சிந்தனைகள். ஆய்வாளர் முனைவர் க. சுபாஷிணி இந்த நூலை வழங்கியிருக்கிறார். மலேசியாவில் பிறந்து ஜெர்மனியியில் குடியேறியிருப்பவர் அவர். இணையவழிக் கூடுகைகள் மூலமாக நூல் திறனாய்வுகளைச் செய்துவரும் ‘வாருங்கள் படிப்போம்’ குழுவின் நிகழ்வில் இதனை அறிமுகப்படுத்தினார் புத்தகக் காதலர் அர்ஷா. இலங்கையில் பிறந்து இந்தியாவில், தமிழ்நாட்டில் குடியேறியிருப்பவர் அவர். ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் புத்தகத்தைப் பற்றி இன்னொரு புலம் பெயர்ந்த தமிழர் பேசிய அந்த நிகழ்வு உணர்ச்சிகரமாகவும் அமைந்தது.
“நம் குடும்பங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பல பழக்கங்களை இன்று நாம் மறந்துவிட்டோம் அல்லது அவற்றிலிருந்து வெளியே வந்துவிட்டோம். ஆனால், பல நாடுகளிலும் குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள் அந்த நடைமுறைகளை மறக்காமல் பின்பற்றுகிறார்கள்,” என்று திறனாய்வாளர் சொன்னபோது ஒரு கேள்வி முளைத்தது. “இங்கே ஒவ்வொரு சடங்கிலும் சாதி அடையாளம் இருக்கிற நிலையில், அவர்கள் அந்தக் குடும்ப நடைமுறைகளைக் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுசென்றபோது, அவற்றோடு பின்னியிருக்கிற சாதியமும் புலம் பெயர்ந்ததா?”
“முன்னோடிகளாகக் குடியேறிய தமிழர்கள் காலப் போக்கில், அந்த நாடுகளின் பண்பாடுகளோடு கலந்தார்கள். அந்த நிகழ்வுப்போக்கில் சாதி அடையாளங்களைத் துறந்தார்கள். அவர்களின் தலைமுறைகள் தாங்கள் என்ன சாதி என்று தெரியாமலே வளர்ந்தார்கள். இடைக்காலத்தில் பெயர்களின் பின்னால் பிள்ளை, நாடார், முதலியார், செட்டியார் போன்ற ஒட்டுகளை இணைத்துக் கொள்கிற பழக்கம் ஏற்பட்டது. அவற்றைக் குடும்பப் பெயர்கள் என்று நினைத்துக்கொண்டுதான் இணைத்துக்கொண்டார்களே தவிர, சாதி அடையாளமாக நினைக்கவில்லை,” என்றார் நூலாசிரியர். தொடர்ந்து அவரே, “ஆனால், அண்மைக்காலமாகப் புலம் பெயர்ந்து செல்கிறவர்கள் இங்கேயுள்ள அதே சாதி உணர்வையும், பாகுபாட்டையும் கொண்டு போகிறார்கள். நன்கு படித்தவர்களே இதைச் செய்கிறார்கள்,” என்றார்.
இதைப் பற்றி யோசிக்கிறபோது, தொடக்கத்தில் தொழிலுக்காகவும வணிகத்திற்காகவும் சென்றவர்கள் சாதி அடையாளங்களைத் துறந்தது மேல்தட்டுகளில் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களை ஒதுக்கி ஒடுக்குவதில் அவர்கள் கவனமாகவே இருந்திருப்பார்கள். ஒருவேளை, அந்தத் தொடக்கக் காலத்தில் உடனடியாக அடித்தட்டினர் புலம் பெயர்ந்திருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களோடும் கலந்து சாதி அடையாளங்களைத் துறப்பது நிகழ்ந்திருக்காது. ஒதுக்கப்பட்டவர்கள் கொண்டுசெல்லப்பட்டது பிற்காலத்தில்தான் நடந்ததென்பதால் அங்கேயும் ஒதுக்கப்பட்டவர்களாகவே அவர்கள் நடத்தப்படுவது தொடர்ந்திருக்கும்.
தமிழர்களின் புலப்பெயர்வுகளுக்குப் பல நூற்றாண்டுத் தொடர்ச்சி இருக்கிறது. பதினைந்து ஆண்டுகாலத் தேடல்களும் பயணங்களும் பதிவுகளும் இந்த நூலை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பதைத் தெரிவித்தார் ஆய்வாளர். அந்த உழைப்பின் கனியாக வரலாற்றுத் தடங்களோடும் வாழ்க்கை நடப்புகளோடும் இந்த நூல் தனித்துவமான வாசிப்புச் சுவையையும் தருகிறது என்ற கருத்துகள் நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
அறிமுகத் துளிகளை ஏந்தியதிலேயே இவ்வளவு தகவல்கள் கிடைக்கும், இப்படிப்பட்ட சிந்தனைகள் துளிர்க்கும் என்றால், புத்தகத்திற்குள் நேரடியாக நுழைந்தால் எவ்வளவு வெளிச்சம் கிடைக்கும்! புலம் பெயர்ந்த, பெயர்க்கப்பட்ட மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வராலாற்றுடன் இணைந்த உண்மைகளின் ஆதாரங்கள் தேவை. ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் முனனுரையுடன் வந்திருக்கிற இந்த நூல் அத்தகைய ஆதாரங்களை வழங்கும் என்று தெரிகிறது. முழுமையாகப் படித்தேயாக வேண்டும்.
நூல்: தமிழர் புலப்பெயர்வு (உலகளாவிய பயணங்கள் – குடியேற்றங்கள் – வரலாறு) – Tamizhar Pulapeyarvu
ஆசிரியர்: க. சுபாஷிணி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
மின்னஞ்சல்: mythforg@gmail.com
பக்கங்கள்: 370
விலை: ரூ.450
எமரால்டு பதிப்பகம், பனுவல் உள்ளிட்ட நிலையங்களிலும் காமன்ஃபோக்ஸ் வலைத்தளத்திலும் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கிறது.
‘தமிழர் புலப்பெயர்வு’ (Tamizhar Pulapeyarvu) நூல் அறிமுகம் எழுதியவர்:
அ. குமரேசன்
https://bookday.in/dr-k-subashinis-tamizhar-pulapeyarvu.../