https://www.youtube.com/live/5qgsp8oW22g?si=R0QXxr-TsPImGhMS
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
Saturday, October 19, 2024
Monday, October 14, 2024
Friday, September 13, 2024
Wednesday, September 11, 2024
பள்ளூர் புத்தர் சிற்பங்கள்
அண்மையில் அரக்கோணத்திற்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 புத்தர் சிற்பங்களைக் காணச் சென்றிருந்தோம். இச்சிற்பங்கள் பற்றி ஆவணம் இதழில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. - சுபா
https://archive.org/.../Avanam%202009.../page/212/mode/1up ஆவணம் இதழ் 20 - பக்கம் 212
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வேலூருக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்றும், மேல்காவனூர் என்றும் அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர், இரும்பு காலம் மற்றும் வரலாற்று ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் பகுதியாகும். இவ்வூரில் சில புத்த சமயச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் புத்தசமயம் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுரம் மாநகருக்கு மேற்கே அமைந்துள்ள வேலூர் மாவட்டத்திலும் புத்தசமயம் பரவியிருந்தமையை அம்மாவட்டத்தின் சில இடங்களிலிருந்து கிடைத்த புத்தசமயச் சான்றுகளின் மூலம் அறியலாம். அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பள்ளூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், புத்தமேடு என்றழைக்கப்படும் பழங்கால வசிப்பிடப் பகுதியும் இவ்வூரில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வாலாஜாப்பேட்டை நகரத்திற்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைச் சேரியில் புத்தசமயத்தைச் சேர்ந்த தேரர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.
Tuesday, September 10, 2024
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கிடைத்த வெண்கல பௌத்த சிற்பங்கள்
முனைவர் க.சுபாஷிணி
லியோன்பெர்க், ஜெர்மனி
பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பட்ட புத்த சமய சிற்பங்கள் மற்றும் சின்னங்கள் பற்றிய தகவல்கள் அப்போதைய அரசு ஆவணங்களில் பதியப்பட்டன. முன்னர் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் இயக்குநராகப் பொருப்பேற்றிருந்த திரு.டி.என்.ராமச்சந்திரன் தொகுத்து எழுதிய அகழாய்வு அறிக்கைகளில் முக்கியமான ஒன்று அவரது நாகப்பட்டின அகழாய்வுச் செய்திகளைத் தாங்கி எழுதப்பட்ட ஒரு நூல். The Nagapattinam and other Buddhist Bronzes என்ற தலைப்பைக் கொண்ட இந்த நூல் முதன் முதலில் 1954ஆம் ஆண்டு மெட்ராஸ் அருங்காட்சியத்தின் வெளியீடாக வந்தது. பின்னர் இந்நூல்1965,1992, 2005ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. இந்த நூலின் தனிச்சிறப்பு - நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வெண்கல புத்தர் திருமேனிகளும் ஏனைய புத்த சின்னங்களும் பற்றிய விரிவான் பட்டியலை இது கொண்டிருக்கின்றது என்பதே.
இந்திய துணைக்கண்ட நிலப்பகுதியில் வெண்கல சிற்பங்களில் பழமையானது எனும் போது சிந்துவெளி அகழாய்வுக்களமான மொஹஞ்சதாரோவில் இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் வெண்கல சிலையைக் குறிப்பிடலாம். இச்சிலை ”நடனப் பெண்” என அழைக்கப்படுகிறது. ”நடனப் பெண்” என அழைக்கப்பட்டாலும் மனதில் உறுதியோடு கம்பீரமாக நிற்கின்ற ஒரு பெண்ணின் சிற்பமாகவே இது வடிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
பாடலிபுத்திராவில் மாமன்னர் அசோகனின் முன்னிலையில் நிகழ்ந்த மூன்றாவது மிகப்பெரிய புத்த மாநாட்டில் மோகிலிபுத்த திசா (Moggaliputta Tissa) தலைமையில் புத்த பிக்குகள் கலந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் அங்கிருந்து புத்தபிக்குகள் இந்திரபிரஸ்தம் (டெல்லி) முதல் தமிழ்நாடு வரையிலும் மட்டுமின்றி இலங்கைக்கும் பௌத்த நெறிகளைப் பரவலாக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது பௌத்த சமயம் இந்தியா முழுமைக்கும் மற்றும் கிழக்காசிய நாடுகளில் விரிவாக்கம் காண அடிப்படையை உருவாக்கியது. அது தொடக்கம், பௌத்த சின்னங்களும் வழிபாட்டுத் தலங்களும், சிற்பக் கூடங்களும் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ச்சி காணத் தொடங்கின. இது தமிழ்நிலப்பகுதியிலும் நிகழ்ந்தது.
இந்திய சிற்பங்களை ஆழ்ந்து ஆராயும் போது அவற்றுள் பெரும்பாலானவை இறை வடிவங்களாக இருப்பதைக் காண்கிறோம். சமயச் சார்புடன் கூடிய வகையிலான கடவுள் வடிவங்கள் வெண்கலத்தை கொண்டு உருவாக்கப்பட்டன. மொகஞ்சதாரோ அகழாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடனப் பெண் சிற்பம் போல பொதுவான மனிதர்களைப் பற்றிய சிலைகள் என்பவை மிக மிகக் குறைவாகவோ, அரிதாகவோ தான் இதுவரை கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியத் துணை கண்டத்தை எடுத்துக் கொண்டால் சிற்பக்கலைக்கு பௌத்த மதம் ஆற்றிய கொடை மிகப் பெரிது. ஆரம்பகால பௌத்த சமய சிற்ப வடிவங்களின் தாக்கத்தைப் பிற்காலத்தில் இந்தியாவில் உருவாக்கம் கண்ட அல்லது வழக்கில் இருந்த எல்லா சமயங்களிலும் காண முடிகின்றது.
எடுத்துக்காட்டாக கிபி 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த மத்திய இந்தியாவின் அமராவதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களைக் கூறலாம். மாறுபட்ட பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்ப வடிவங்கள் இக்காலகட்டத்தில் இங்கு உருவாக்கப்பட்டன. முதலாம், இரண்டாம் நூற்றாண்டு காலவாக்கில் தட்சசீலம் பகுதியில் வடிக்கப்பட்ட சிற்பப் படைப்புகளில் சிறிய அளவிலான வெண்கல வடிவங்களைக் காண்கின்றோம்.
வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற வகையிலான சிற்பக்கலை பள்ளிகள் இயங்கிய ஒரு பகுதியாக மதுராவை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். கி.பி 1ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலவாக்கில் கலைத்திறன் மிக்க சிற்பிகள் அழகிய வெண்கல வடிவங்களிலான பெண் உருவம் மற்றும் இயற்கை வடிவங்களை வடித்திருக்கின்றார்கள். இப்படி இந்தியாவின் வடபகுதியில் உள்ள சில இடங்களைக் குறிப்பிடலாம்.
இன்று நமக்குக் கிடைத்திருக்கின்ற வெண்கல சிற்பங்களில் பௌத்த மதம் சார்ந்த வெண்கல சிற்பங்கள் தென்னிந்தியாவில் கிடைக்கின்றன என்றாலும் கூட அப்படி கிடைக்கின்ற சிலைகள் பெரும்பாலானவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவை கிபி 11லிருந்து 15ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்பதும் அவற்றில் பெரும்பாலானவை நாகப்பட்டினத்தைச் சார்ந்தவை என்பதையும் தமிழக அரசின் தொல்லியல் அறிக்கை வழி காண்கின்றோம்.
இன்று சென்னை அருங்காட்சியகம் என அழைக்கப்படும் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் முன்னாள் இயக்குனர் திரு.டி என் ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவில் 1856 முதல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் ஏறக்குறைய 850 புத்தரின் வெண்கல சிலைகள் கிடைத்ததாகவும் அவை மகாயான வகையைச் சேர்ந்தவை என்றும், சில எழுத்துப் பொறிப்புகளுடன் அவற்றுள் சில உள்ளன என்றும், சில பௌத்த பள்ளிகள் இருந்த பகுதிகளில் இவை இருந்தவை என்றும் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீவிஜயப் பேரரசு ஆட்சி செய்த இன்றைய இந்தோனேசியாவில் கிபி 5 முதல் பௌத்தம் மிகச் செழித்து ஓங்கி வளர்ந்திருந்ததைக் காண்கிறோம். சைலேந்திர பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு மன்னர்கள் ஆட்சி செய்த அக்காலகட்டத்தில் அவர்களது சோழமண்டலக் கடற்கரை வணிகமும் அதனால் ஏற்பட்டிருந்த நல்லுறவும் நீடித்திருந்தது. குறிப்பாகச் சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் காலம் இரு பேரரசுகளுக்கும் இடையிலான செழிப்பான வணிகத்தை காலத்தில் இவ்வுறவு நன்கு தொடர்ந்தாலும் 1017, 1025 ஆகிய காலகட்டங்களில் சோழ மன்னர்களின் படையெடுப்பு இரு நாடுகளுக்குமான உறவை பாதிப்புறச் செய்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆயினும் கூட இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை, அதாவது கிபி 871 முதல் கிபி 1150 காலகட்டத்தில் மிக அதிகமான பௌத்த பள்ளிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நாகப்பட்டினம் பகுதியில் இயங்கியத்தை வரலாறு நமக்குச் சுட்டுகிறது.
நாளந்தா, மதுரா போன்ற புகழ்மிக்க பௌத்த தளங்களில் சிற்பக்கலைக் கூடங்களும், அதில் பணியாற்றிய சிற்பிகளும் வடித்த புத்தரின் வடிவங்கள் மற்றும் புத்தர் கதைகளின் அடிப்படையில் உருவாக்கம் கண்ட சிற்பங்கள் தனித்துவமிக்கவை. அதேபோல, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் அகழாய்வுகளில் கிடைத்த ஏராளமான கற்சிலைகளையும், செப்புச் சிலைகளையும் காணும் போது நாகப்பட்டின சிற்பக்கலையும் தனித்துவமிக்க ஒரு கலையாக இருந்திருக்க வேண்டும் என்பது ஐயத்திற்கு இடமின்றி அமைகிறது. அதில் குறிப்பாக நாகப்பட்டின புத்தர் சிலைகளை ஆராயும்போது சோழர்கால சிற்பக் கலை கருணையுடன் கூடிய அமைதி தவழும் வடிவத்துடன் இச்சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆழ்ந்த, அமைதியான தியான நிலையில் தியான முத்திரைகளோடு இச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சென்னை அருங்காட்சியகத்தின் மேனாள் இயக்குநர் திரு. டி.என். ராமச்சந்திரன் தனது நூலில் பதிவு செய்திருக்கும் பட்டியலின் அடிப்படையில், 1954ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியத்தில், பிரித்தானிய ஆட்சி காலத்தில் குறிப்பாக 1926 மற்றும் 1934 கால வாக்கிலும் மற்றும் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரும் நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம், நாணயக்கார தெரு ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட 86 சிற்பங்கள் அங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டன என்ற செய்தி நமக்குக் கிடைக்கின்றது. அப்பட்டியலில் உள்ள 20 சிற்பங்கள் பற்றி சில தகவல்களைக் காண்போம்.
1. பட்டியல் எண் 1: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலை. இதன் உயரம் 29.3 சென்டிமீட்டர். வலது கை அபய முத்திரை காட்டி நிற்கும் வகையில் இச்சிற்பம் உள்ளது.
2. பட்டியல் எண் 2: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம். அடிப்பகுதியும் முழு உயரமும் மொத்தம் 49 சென்டிமீட்டர்; அடிப்பகுதி இல்லாமல் 34.5 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. நின்ற நிலை வடிவில் அபயமுத்திரையுடன் இச்சிற்பம் காணப்படுகிறது.
3. பட்டியல் எண் 3: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 51.2 சென்டிமீட்டர். அடிப்பகுதி நீங்கலாக 38 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. அபய முத்திரையுடன் கூடியுள்ள ஒரு சிற்பம் இது.
4. பட்டியல் எண் 4: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 52 சென்டிமீட்டர். அடிப்பகுதி இல்லாமல் 35.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். "உமையர் திருவாலியாழ்வார் நாயகர்" என்ற எழுத்துப் பொறுப்புகளுடன் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
5. பட்டியல் எண் 5: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 27.2 சென்டிமீட்டர் அடிப்பகுதி நீங்கலாக 23.5 சென்டிமீட்டர் உயரம்.
6. பட்டியல் எண் 6: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 16.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 14 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. நின்ற நிலையில் அபய முத்திரையுடன் இச்சிற்பம் உள்ளது. "தாரயர் மடமுடையான்" என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் இது அமைந்துள்ளது. ஏறக்குறைய கிபி 1500 என இதனை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
7. பட்டியல் எண் 7: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதி நுணுக்கமான வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய வகையிலான உயரம் 10.2 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீக்கமாக 6.3 சென்டிமீட்டர் உயரம்.
8. பட்டியல் எண் 8: நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் இதன் உயரம் 47.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 35 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு கால சிற்பம் இது. சிற்பத்தின் அடிப்பகுதியில் "நாயகர்" என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
9. பட்டியல் எண் 12: அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி இல்லாமல் 67 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இது தஞ்சாவூரில் வழிபாட்டில் இருந்த ஒரு புத்தர் சிற்பம். ஏதோ ஒரு வகையில் அங்கிருந்து சென்னை அருங்காட்சியத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
10. பட்டியல் எண் 19: நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் 1934 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 58.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட சிற்பம் இது.
11. பட்டியல் எண் 20: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடியவகையில் 23.8 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 18 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் கிபி 12 அல்லது 13. இதில் கீழ்க்காணும் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன.
கா ழு …. ஈ
த்து வி ….து
னண்…. ய ன
பொ த்த … நாய கர்
12. பட்டியல் எண் 22: நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மெட்ராஸ் அருங்காட்சியத்திற்கு 1910 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 20.8 சென்டிமீட்டர் உயரமும், அடிப்பகுதி நீங்கலாக 17.7 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இதன் அடிப்பகுதியில் "அரைசர்" என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது.
13. பட்டியல் எண் 24: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இச்சிற்பம் அமர்ந்த நிலையில் வலது கர விரல்கள் தரைப்பகுதியைத் தொடுகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு சிற்பம் என அறியப்படுகின்ற இச்சிற்பத்தின் அடிப்பகுதியில் "நத்தன் கூடிய வந்தாள் நாயகர்" என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது.
14. பட்டியல் எண் 28: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிற்பத்தில் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 20 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 11 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. "உடையார்" என்ற சொல் இதில் கீழ்ப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
15. பட்டியல் எண் 30: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் முகப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. முக்கோண பத்மாசன வடிவில் அமர்ந்த நிலையில் இருப்பது போல் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதியும் மேற்பகுதியு கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது.
16. பட்டியல் எண் 32: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 12 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது. இச்சிற்பம் இந்தோனேசியாவின் பெரும் பௌத்தப்பள்ளியான போரபுதூர் கோயில் புத்தர் சிற்பங்களின் வடிவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு.
17. பட்டியல் எண் 37: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 29.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. இரண்டு யாழிகள் ஒவ்வொரு பக்கத்திலும் இருப்பது போன்றும் தலைக்கு மேல் அரசருக்கான பீடம் அமைக்கப்பட்டது போன்றும், அரசர்கள் அமரும் சிம்மாசனம் போன்ற பீடமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட சிற்பம் இது.
18. பட்டியல் எண் 45: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நின்ற நிலையில் உள்ள மைத்திரேயரின் சிற்பம் இது. பீடத்தோடு கூடிய வகையில் 29 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. பீடம் நீங்கலாக 21.5 சென்டிமீட்டர் உயரத்துடன் உள்ளது. "திருவுடையார் அம்மை அ களங்கம் பெருமாள்" என்ற சொற்கள் இதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அமைக்கப்பட்ட அழகிய சிற்பம் இது.
19. பட்டியல் எண் 63: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. ஜம்பாலா மற்றும் அவரது பெண்துணை வசுதரா இருவரும் அமர்ந்த நிலையில் இருப்பது போன்று அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் உயரம் அடிப்பகுதியோடு கூடிய வகையில் 10 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.
20. பட்டியல் எண் 80: புத்தரின் தலை மட்டுமே இருக்கின்ற வகையில், ஓரளவு சிதையுண்ட வகையில் உள்ள சிற்பம் இது. 9 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு சிற்பம் என அடையாளப்படுத்தப்படுகிறது. சிற்பத்தின் நெற்றிப் பகுதியும் கண்களும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. ஆயினும் தங்கத் தகடுகள் நீக்கப்பட்ட நிலையிலேயே இச்சிற்பம் கிடைத்துள்ளது.
நாகப்பட்டினத்தில் 1856 முதல் அகழாய்வுப் பணிகளின் போதும் வேறு வகையிலும் சேகரிக்கப்பட்ட 86 வெண்கல புத்தர் சிற்பங்களில் 20 சிற்பங்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே மேற்காணும் பட்டியலில் வழங்கப்பட்டுள்ளன. இந்த 86 சிற்பங்களும் அக்காலகட்டத்தில் இன்றைய சென்னை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டன, அங்கு பாதுகாக்கப்பட்டன என்று அச்செய்திகளை ஆய்ந்து தொகுத்து The Nagapattinam and other Buddhist Bronzes நூலில் வழங்கியிருக்கின்றார் திரு.டி.என் ராமச்சந்திரன். அவர் 1954ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த அரிய நூல் தருகின்ற செய்திகளின் அடிப்படையில் இன்றைய சென்னை அருங்காட்சியகத்தின் அரும்பொருட்களின் பட்டியலை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த ஆய்வின் வழி இச்சிற்பங்கள் அனைத்தையும் ஒன்றாக இதே அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்புப் பகுதியில், ”நாகப்பட்டின வெண்கல புத்தர் சிற்பங்களுக்கான கண்காட்சி” ஒன்றை உருவாக்க தமிழக அரசின் அருங்காட்சியகப் பிரிவை அனுபுகது அவசியம். இப்பணியைத் தொடங்குவதன் வழி மறைந்துபோன நாகப்பட்டினத்தின் பௌத்த சிறப்புகள் மீண்டெழவும், அதே வேளை பௌத்த மதத்தை அரசமதமாகக் கொண்டிருக்கின்ற பெரும்பாலான கிழக்காசிய தூரக்கிழக்காசிய நாடுகளுடனான தமிழ்நாட்டின் சுற்றுலா துறையையும் வளர்க்க இது உதவும். அதன் வழி நட்புறவு வலுப்பெறவும் இது வாய்ப்பளிக்கும்.
குறிப்பு: The Nagapattinam and other Buddhist Bronzes நூலில் மேலும், இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள, நாகப்பட்டினத்தில் கிடைத்த 186 பௌத்த சின்னங்களைப் பற்றிய தகவல்களையும் தனது நூலில் வழங்கியுள்ளார். இது மீளாய்விற்கு தேடுதலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
Saturday, September 7, 2024
பள்ளூர் புத்தர் திருக்கோயில். இந்தப் பகுதியில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் இங்கு பொது மக்களால் சிறிய கோயிலாக எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. இந்த புத்தர் திருக்கோயிலை மேலும் வழிபாட்டினை முன்னெடுக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இங்குள்ள மூன்று சிற்பங்களும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமையானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து சிற்பங்களின் தன்மை அவ
ற்றின் காலம் ஆகியவற்றை கண்டறியும் வகையில் இன்று கல்வெட்டியல் அறிஞர் முனைவர் பத்மாவதி மற்றும் ஆய்வாளர் முனைவர் சசிகலா நான் மூவரும் சென்றிருந்தோம்.
ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டு திருவருவங்கள் இவை. சிறிதளவு சிதைக்கப்பட்ட நிலையில் சிற்பங்கள் இருந்தாலும் பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்ட சிறப்புடன் இவை திகழ்கின்றன. பண்டைய வணிகப் பெருவழி பகுதியில் அமைந்திருக்கும் இப்பகுதி பௌத்த மதம் செழித்துப் பரவிய நகரங்களில் ஒன்றாக இணைந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
-சுபா
Thursday, May 30, 2024
தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்
இந்திரன் ராஜேந்திரன்
தமிழகத்தில் புத்தமதத்தின் தொடக்கநாள்களில் புத்தரின் முழு உருவச்சிலை வழிபாடு இல்லை. பாதங்களும் பீடிகையும் திறந்த வெளியில் வைத்து வழிபடப்பட்டன. காவிரிப் பூம்பட்டினத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுண்ணாம்புக்கல்லில் செய்யப்பட்ட புத்தரின் பாதங்கள் சான்று.
சங்க காலம் கி.மு. 3 முதல் கி.பி. 2 வரை தமிழுக்கும் சங்க இலக்கியத் திற்கும் பவுத்த சமயமும் அதன் தத்துவமும் புதிதில்லை. ஒரு வளமையான தத்துவ விசாரம் தமிழிலும் பாலியிலும் காஞ்சியில் நிகழ்ந்திருக்கிறது.தமிழகத்தில் பவுத்தம் குறித்து முதலில் பேசியது ‘மணிமேகலை’ காப்பியம்.
” பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை”யில் மணிமேகலை புத்த பீடிகையின் அமைப்பைப் பேசுகிறது. “பவத்திறம் அறுக” எனப் பாவை நோற்றக் காதையில் மணிமேகலை திருவடியே சரண் எனச் சங்கத்தில் சரணாகதி அடைவதை சாத்தனார் பேசுகிறார்.
பெளத்த மரபின் இப்பாதவழிபாட்டினைப் பின்னாளில் வைணவ மரபும் ஏற்றுக் கொண்டது. ”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று சைவமும் திருவடி பெருமை பேசத் தொடங்கியது.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்” என்பது குறள்.
கல்லாயிருந்த அகலிகை ராமனின் திருவடி தீண்டியபடியால் பெண்ணானாள். பலிச்சக்கரவர்த்தியின் சிரசில் தன் திருவடி அழுந்த அவன் பாதாள உலகின் அதிபதியானான். அனுமன் சிறிய திருவடி., கருடன் பெரிய திருவடி. என்று அறியப்பட்டனர். ஆண்டவனையும் குருவையும் திருவடி என்று குறிப்பிடப்படும் பாதம் மூலமாக வழிபடுவது பல மதங்களிலும் ஊடுருவியது.
Sunday, May 12, 2024
ஹங்கேரி பூடாபெஸ்டில் புத்த விகாரைகள்
ஹங்கேரியின் தலைநகர் பூடாபெஸ்டில் இருந்து மேற்காக ஏறக்குறைய 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த புத்த ஸ்தூபா.
ஹங்கேரியில் மொத்தம் ஏழு புத்த விகாரைகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று.
ஹங்கேரி மக்களும் வந்து வழிபடுகின்ற இந்த புத்த விகாரை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து காட்டுப்பகுதிக்குள் ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு இந்த அழகிய வளாகம் வருகின்றது. உள்ளூர் மக்களும் வெளிநாட்டு மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றார்கள்.
-சுபா
12.5.2024
Saturday, May 4, 2024
திசைக்கூடல் 356: கொரியப் பேரரசியான இந்திய இளவரசி ஆய்வுகளில் திருப்பம்
கொரியப் பேரரசியான இந்திய இளவரசி ஆய்வுகளில் திருப்பம்: முனைவர் மெய் சித்ரா
Thursday, May 2, 2024
திருவள்ளுவர் யார் ? - திறனாய்வு
முனைவர் தேமொழி
திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை, சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்றுப் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத ஓர் இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.
தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன. அவற்றை மீள்பார்வை செய்து “திருவள்ளுவர் யார்?” என்று ஆராய்ந்து கௌதம சன்னாவால் அவர் கோணத்தில் அளிக்கப்படும் விளக்கமே 150 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூல். திருவள்ளுவர் யார் என அறிந்து கொள்ள முற்படுகையில் திருக்குறளின் நீண்ட புனைகதை வரலாற்றையும் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
நூலின் முதல் பகுதி, பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை குறித்தும், சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் என்பவர்தாம் தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை அச்சுப் பதிப்பிற்குக் கொடுத்து உதவிய பெருந்தகை. இதனால் திருக்குறள் அச்சுப் பதிப்பு முயற்சிகளின் வரலாற்றை அறிவதும் தவிர்க்க இயலாத தேவையாகிறது.
எனவே, நூலின் இரண்டாம் பகுதி குறளின் பதிப்பு வரலாறு குறித்து விரிவாக விவரிக்கிறது. திருக்குறளின் முதல் பதிப்பு எது, எந்த ஆண்டில் அது யாரால் பதிப்பிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி இது. ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்கிறது மற்றொரு குறிப்பு. இத்தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் இக்குறிப்புகள் கொடுக்கும் ஆண்டுகள் முரண் என்று ஆய்வு கூறுவதை அடியொட்டி முதலில் ஞானப்பிரகாசர் வெளியிட்ட நூலுக்கான சுவடி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆராய முற்பட்டு, 1812இல் வெளியான திருக்குறள் நூலானது கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட சுவடியின் பதிப்பே என்பது காட்டப்படுகிறது. கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட அந்த குறளின் சுவடியை எல்லீஸின் பதிப்பு நிறுவனத்தின் மேலாளர் முத்துசாமிப்பிள்ளையும், ஞானப்பிரகாசரும் அச்சு நூலக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஞானப்பிரகாசர் அச்சகத்தார் என்பதால் அக்காலப் பதிப்பு வழக்கப்படி அவர் பெயர் திருக்குறள் பதிப்பின் மேலட்டையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே ஞானப்பிரகாசர் அச்சகத்தார், பதிப்பித்தவர் அல்ல. வேப்பேரியில் இருந்த அவரது அச்சகத்தை எல்லீஸ் பயன்படுத்த வேண்டிய நிலைக்குக் காரணம், பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டில் எல்லீஸின் சொந்த அச்சகம் உருவாகாததால், எல்லீசிடம் இருந்த திருக்குறள் சுவடி ஞானப்பிரகாசர் அச்சகத்தால் அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்.
மூன்றாம் பகுதி, “திருக்குறளா அல்லது திரிகுறளா” எது சரி என்ற கேள்வியை எழுப்பி, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்ற விளக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அதற்கான பண்டிதர் அயோத்திதாசர் கொடுத்த விளக்கத்தை விரிவாக நூல் அலசுகிறது. அதாவது பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்.
வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்:
இதுவரை கூறப்பட்ட அறிமுகப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் நூலின் நான்காம் பகுதியானது நூல் உருவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. ‘புனைவுகளில் சிக்கிய வள்ளுவர்’ என்ற இப்பகுதியே ‘திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?’ என்று கேள்விகளுக்குப் பல நூல்கள் வழியாகவும் ஆவணங்கள் வழியாகவும் விடை காண முற்படுகிறது. வள்ளுவரின் வரலாறு என்று பலர் கூறிச்சென்ற, சான்றுகளற்ற புனைவுகளின் தொகுப்புகளை படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இப்பகுதிக்கு உதவிய ஆவணங்களை நூலாசிரியர் நூலில் பின்னிணைப்பாகவும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.
பார்ப்பன குல தந்தைக்கும், பறையர் குல தாய்க்கும் பிறந்தவர் வள்ளுவர் என்ற புனையப்பட்ட கதைகளின் பின்னணிக்குக் காரணம், வள்ளுவர் குலத்தில் பிறந்த ஒருவருக்கு மிக்க அறிவுத் திறத்தை வெளிப்படுத்தக்கூடிய நூலொன்றை இயற்றும் திறன் இருந்திருக்க வழியில்லை என்ற கருத்தில் மக்களைச் சாதி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் கோணத்தில் உருவான சிந்தனையன்றி வேறில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கிவிட மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டுப் புனைவுகளை உருவாக்கினர் என்பது ஒரு கசப்பான உண்மை.
எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.
திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார் என்கிறார் நூலாசிரியர் சன்னா.
முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.
அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.
மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.
வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.
இருப்பினும், இக்கதைகளுக்கும் மூலக்கதைகளை வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன, அவை பின்னர் மெக்கன்சி ஆவணங்களின் தொகுப்பில் இடம் பிடித்தவை என்கிறார் நூலாசிரியர். அக்கதைகள் இராம அவதாரம் வரை கற்பனைகளை நீட்டிச் செல்பவை என அறிய நேர்கையில், உண்மையிலேயே மக்களின் மிதமிஞ்சிய கற்பனைத் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணப் பகுதி காட்டும் கதை (1772), விசாகப்பெருமாள் ஐயர் (1831), சரவணப் பெருமாள் ஐயர் (1837), வேதகிரி முதலியார் (1850) காட்டிய பதிப்புக் கதைகளை மேலதிகத் தகவலாகப் பின்னிணைப்பாக நூலில் கொடுத்துள்ளார் கௌதம சன்னா. உருவாக்கப்பட்ட ஒரு கதை ஒவ்வொரு முறையும் வளர்ந்து பல துணை கதைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடையும் இந்தக் கதைகள் வளரும் முறையானது, புராணக் கதைகள் உருவாகிப் பல்கிப் பெருகி வளர்ந்த விதம் குறித்து ஆய்வோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு கருவூலம். மேலும் இத்துறையில் ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு உதவும் பகுதி இது. புனைவுகளின் நோக்கம் வழியே அக்கால மக்களின் சிந்தனை ஓட்டத்தையும், அவர்கள் சிந்தனை மீது சமூகம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் எடைபோடலாம்.
இவற்றில் சிலவற்றில் ஆதி பார்ப்பனக் குடும்பத்துப் பெண் என்ற கோணங்களும் உண்டு. இக்காலத் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று, பிரிந்து போன குடும்பத்தினர் தங்களின் குடும்பப் பாடலைப் பாடி தொலைந்து போனவரைத் தேடிப் பிடிக்கும் முறையில் கூட ஒரு கதை இருந்திருக்கிறது (பக்கம்-58, 118) என்பதும் படிக்கும் பொழுதே புன்முறுவலை வரவழைக்கும் ஒரு வேடிக்கை. கடவுளர் ஒருவர் மீது ஒருவர் சாபம் விட்டுக் கொண்டு பூமியில் பிறப்பது முதற்கொண்டு இக்கதைகளில் புராணப் புனைவு இலக்கணங்கள் எவையும் விட்டுவைக்கப் படவில்லை. இவற்றுடன் ‘கபிலர் அகவல்’ பாடலையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம்.
பின்னிணைப்புகள் காட்டும் அனைத்து திருவள்ளுவர் வரலாற்றுப் புனைவுகளுக்கும் மூலக்கதை ‘கபிலர் அகவல்’ என்றே இருந்திருக்க வாய்ப்புண்டு (பார்க்க – கபிலக்கல், குடவாயில் பாலசுப்பிரமணியன்). சோழர், பாண்டியர் ஆட்சிகள் தமிழகத்தில் சரிந்த 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சாதிச் சண்டைகள் கட்டுக்கடங்காமல் உச்சக்கட்டத்திற்குப் போன ஒரு காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் சாதிகளைக் குறிப்பிட்டவாறே எழுதப்பட்டது வழக்கமானது. எடுத்துக்காட்டாக காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம். இப்போக்கைக் கட்டுப்படுத்த எண்ணி பேதங்களைச் சாடும் உள்ளம் கொண்டோரும் அக்காலத்திலிருந்துள்ளனர். எல்லா சாதியிலுள்ளோரையும் மனிதர்கள் தான் எனக் காட்ட இக்காலகட்டத்தில் எழுந்த நூல்கள் பெரிய புராணம், கபிலர் அகவல் போன்றவை.
கபிலர் அகவலில் சங்கப்புலவர்கள், சங்ககால மாந்தர்களை உள்ளடக்கி அறிவுக்குச் சாதி பேதமில்லை எனக்காட்ட வள்ளுவர், கபிலர், ஔவையார், அதியமான், உப்பை, உருவை, வள்ளி என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அவர்கள் பெற்றோரே பறையரும்-பார்ப்பனரும் கலப்பு மணம் செய்தோர்தான் எனக் காட்ட ஒரு புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனைவில் பெற்றோர் பெயர் தேர்வுக்கு ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற குறளின் வரியே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. இப்பிள்ளைகள் எழுவரும் வள்ளுவர், பார்ப்பனர் (கபிலர்), பாணர் (ஔவை), வேளிர் (அதியமான்) எனக் கொடுக்கப்படும் குலப்பிரிவுகள் யாவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடும் உண்மைச் செய்திகள்தான். மனிதர்கள் எவ்விடத்தில் வளர்க்கப்பட்டாலும் மேன்மையானவர்களே என்று காட்டும் ஒரு முயற்சியே கபிலர் அகவல் பாடல் உருவான நோக்கம். “தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்” என குடவாயிலாரும் தம் கட்டுரையில் குறிப்பிடுவார். அவ்வாறுதான் பெரியபுராணமும் அனைத்துக் குலத்தில் பிறந்தோரையும் கடவுளின் அன்பர்களாக உயர்த்திக் காட்ட முயலும். ஆனால் நம் மக்கள் படிப்பதில் கொள்ள வேண்டிய கருத்தைக் கொள்வார் இல்லை என்பதுதான் நடைமுறை வழக்கு.
கபிலர் அகவல் கொடுத்த செய்திகளையே சான்றாக வைத்து மேலும் மேலும் சாதி கதைகளை எழுதி வள்ளுவர் மேல் திணித்தார்கள். ஆக, இக்கதைகள் “கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்” என்று குடவாயிலார் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இக்கதைகளையே நூல் வெளியிட்ட விசாகப்பெருமாள் ஐயர், அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர், வேதகிரி முதலியார் போன்றோர் தாம் ஆற்றும் இலக்கியப் பணியாக நினைத்து தாங்கள் வெளியிட்ட திருக்குறள் நூல்களில், தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி இணைத்து விட்டிருக்கின்றனர். இவையாவும் மக்கள் அறிந்து அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் புழங்கிக் கொண்டிருந்த வள்ளுவரின் பிறப்பு வரலாற்றுப் புனைவுகள்தாம். வைதீக சமயம் இதுபோன்ற கற்பனைக் கதைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்போராகவே பக்தி என்ற பெயரில் தமிழரின் அறிவை மழுங்கடித்து வைத்திருந்தது, இன்றும் வைத்திருக்கிறது.
வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.
திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி’ என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.
உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். 'சிலசாசனத் தியான பஞ்சரத்தினப்பா' என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.
வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.
சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோ அல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).
இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.
திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?
- பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:
திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசரின் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே கூட ஆய்வாளர்களால் மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).
வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.
சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.
மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.
மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.
அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.
அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.
“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.
கட்டுரை வெளியான நாள்: பிப்ரவரி 1, 2020
---
நூல் குறிப்பு:
நூல்: திருவள்ளுவர் யார் ?
கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்
ஆசிரியர்: கௌதம சன்னா
முதற்பதிப்பு – டிசம்பர் 2019
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு
விலை: ரூ.200/-
---
நூலைப் பெற:
https://www.commonfolks.in/books/d/thiruvalluvar-yaar
Tuesday, March 5, 2024
தமிழர் புலப்பெயர்வு - திறனாய்வு (காலச்சுவடு இதழ்)
தேமொழி
காலச்சுவடு இதழில் முனைவர் தேமொழி எழுதிய தமிழர் புலப்பெயர்வு என்ற எனது நூலுக்கான திறனாய்வு.
தமிழர் புலப்பெயர்வு:
உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு
க. சுபாஷிணி
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை
பக்.370 ; ரூ.450
தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்ந்து பல தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.
புலம் பெயர்தல் பொருளியல், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இருப்பினும், “எத்தனையோ சிரமங்களும் துன்பங்களும் இருந்தாலும் மனிதர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறார்” க. சுபாஷிணி.
தமிழ் மக்களின் தொடக்கக் கால வெளிநாடுகளுக்கான பயணங்கள் பெரும்பாலும் தன் விருப்பத்துடன் பொருள் திரட்டும் நோக்கில் அமைந்தவை. வணிகப் பயணங்கள்தான் என்றாலும் சமயம் பரப்புதல், தூது, போர் போன்ற காரணங்களுக்காகவும் தமிழர்களின் பயணங்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாகத் தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரங்கள் சிலவற்றிலும் அவற்றைச் சுற்றியும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகச் சூழலை விவரிக்கும் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளதை நூல் சுட்டிக்காட்டுகிறது.
பண்டைய தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் குழுக்களாக ஐயப்பொழில் ஐநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார் இருந்துள்ளதை அறிகிறோம். தமிழர்களின் பல தடயங்கள் அயல்நாடுகளிலும் கிடைத்துள்ளமை தமிழர்களின் வணிகப் பரவலை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. இவை வரலாறு நெடுகிலும் பல காலகட்டங்களைச் சார்ந்தவை. இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த “ணந்தை கீரன்” என்று ‘தமிழி’ எழுத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று. பொ.ஆ.3 அல்லது 4ஆக இருக்கக்கூடிய, ‘பெரும் பத்தன் கல்’ (பெரிய பொற்கொல்லனின் கல் எனப் பொருள் தரும்) கல்வெட்டு ஒன்று தென் தாய்லாந்தில் கிடைத்துள்ளது. அதன் தகுவாபா பகுதியில் கிடைத்த பொ.ஆ. 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்மனின் அரசு அதிகாரி மணிக்கிராமத்தார் வணிகக் குழுவினரின் பயன்பாட்டிற்காக ஒரு குளத்தை அப்பகுதியில் வெட்டியதாகக் கூறுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் லாபூ தோவா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு திசை ஆயிரத்து ஐநூற்றுவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. நியூசிலாந்து நாட்டின் மேற்குக் கரையோரம் கிடைத்த வெண்கல மணி ஒன்றின் உடைந்த பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி’ என்ற சொற்கள் இன்னொரு சான்று. இது பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பழவேற்காட்டிலிருந்து இந்தோனேசியா வழியாக நியூகினியா சென்று பின்னர் நியூசிலாந்து அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கும் சென்ற முகைதீன் பக்ஸ் என்பவரின் கப்பலின் மணி என்று இந்த நூலின் வழி அறிகிறோம்.
முற்காலத்தில், வணிகம் தவிர்த்துச் சமயம் தொடர்பான பணிகளுக்காகவும் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றனர். ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்று புத்த மதம் பரப்பியவர் பல்லவ இளவரசன் போதி தர்மர் என்ற புத்த வர்மன். அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பௌத்த சமய விரிவாக்கம் தமிழ் நிலப்பகுதியிலிருந்து வணிகர்களின் உதவியால் கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவு கண்டது. இது தமிழ் பௌத்தப் பிக்குகளின் நாடுகடந்த பயணங்களுக்கும் காரணமாகியது. இப்பயணங்கள் பெரும்பாலும் கடல்வழிப் பயணங்களாகவும் நிலவழிப் பயணங்களாகவும் அமைந்தன. போதி தர்மர்போல தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்த மற்றொரு தென்னிந்தியப் பௌத்த பிக்கு வஜ்ரபோதி. இவர் ஒரு பெர்ஷிய வணிகக் கப்பலில் பயணம்செய்து ஸ்ரீவிஜயப் பேரரசின் துறைமுக நகரம் ஒன்றிற்கு பொ.ஆ. 719இல் வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அக்கப்பல் சீனாவின் குவான்சோவ் நகருக்கு வந்தபோது அதே கப்பலில் பிக்கு வஜ்ரபோதியும் பயணம்செய்து சீனா வந்துசேர்ந்தார் என்ற அறியப்படாத தகவலையும் பெற முடிகிறது.
கிறிஸ்துவப் பணிகளில் ஐரோப்பியரோடு உள்ளூர்த் தமிழ் மக்களும் உதவியாளர்களாக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் இக்காலகட்டங்களில் அடங்கும்.
வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் பயணம் செல்வதும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு தங்குவதும் நிகழ்ந்தாலும்கூட பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அத்துடன் அவை தமிழர்கள் வணிகம் மூலம் செல்வம் திரட்டச் செல்லாமல் வாழ்வாதாரம் தேடி விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யும் பயணங்களாகவும் அமைந்தன. துருக்கியின் ஒட்டமான் பேரரசின் உச்சக்கட்ட விரிவாக்கம் காரணமாக 14ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்துடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என்று விரிந்து பரவிவிட்ட ஒட்டாமன் பேரரசு வணிக வரிகளை உயர்த்தியதால் மாற்று வணிக வழி தேடி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழி தேடியதும், வாஸ்கோ-ட-காமா 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் புதிய வழிமூலம் வந்து கரை இறங்கியதும் உலக வணிக வரலாற்றில் புதிய திருப்புமுனையாகும். போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கடற்கரையோர நகரங்களில் தங்களின் வணிக மையங்களை உருவாக்கிக்கொண்டன.
ஐரோப்பியரின் விரிவாக்கத்தை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோள் “God, Gold, and Glory” என்று இருந்ததாக விளக்குவார்கள். வெடிமருந்து கொண்ட புதிய தொழில்நுட்பப் போர்க்கருவிகளும், பலமற்றுப் பிரிந்துகிடந்த உள்நாடுகளின் அரசுகளும் மற்ற நாடுகளில் ஐரோப்பியர் வணிகத் தொழிலையும் சமய வளர்ச்சியையும் விரிவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கின. உலக நாடுகளில் தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் உழைப்பாளர் தேவைகளுக்கு இந்தியாவின் உள்ளூர் மக்களை முதலில் அடிமைகளாகவும், அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த உழைப்பாளர்களாகவும் அழைத்துச் சென்றனர் ஐரோப்பியர். அவ்வாறு புலம் பெயர்ந்த இடங்கள் எந்த ஐரோப்பிய நாட்டின் வணிகக் கட்டுப்பாட்டில் இருந்ததோ (இங்கிலாந்தின் பிரித்தானிய காமன்வெல்த் நாடுகள்போல) அந்தந்த நாடுகளாக அமைந்தன. அவை உழைப்பாளர் தாங்களே தேர்வுசெய்து சென்ற நாடுகள் அல்ல. இவ்வாறாக, தமிழர்கள் புலம் பெயர நேரிட்ட காரணம் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய வறட்சியும் பஞ்சங்களுமாகும். தமிழ் மக்கள் பெருமளவில் அயல் நாடுகளில் பரவுவதற்கு அவர்களின் வறுமையான சூழ்நிலை காரணமாகியது.
பஞ்சம் காரணமாக அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டவர்கள் 17ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவுக்கு அனுப்பப்பட்டுப் போர்த்துக்கீசியர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறே மணிலாவில் ஸ்பானியர் வசம் சென்ற அடிமைகளைப் பற்றி அவர்களின் ஆவணங்களும் காட்டுகின்றன. இந்தோனேசியா, மலாக்கா, மெக்சிகோ, இலங்கை, ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன், டென்மார்க் என மேலும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகச் சென்றனர். ஸ்பெயின், போர்த்துகல், டேனிஷ், டச்சு, பிரஞ்சு, பிரிட்டிஷ் என அனைத்து ஐரோப்பிய வணிக நிறுவனங்களும் தமிழ் அடிமைகளை விற்பதில் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் வழி அறியும்போது தலைக்குனிவும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன. குறிப்பாக 1834ஆம் ஆண்டு முற்றிலும் தடைசெய்யப்படும்வரை அடிமை வணிகம் தமிழ் மக்களின் வலுக்கட்டாயமான புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகியது. ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கு முன்னர் பெருமளவில் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அடிமை வணிகத்தின் வழிதான் நடந்தேறியது.
‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ’ என்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்கள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட அல்லல் நிறைந்த வாழ்வின் அவலத்தை “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற கவிதையாக வடித்து மனம் குமுறினார் பாரதி.
அந்தத் ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே தன் சிறுகதைக்கும் தலைப்பாகத் தேர்வு செய்து, பஞ்சம் பிழைக்க இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியேற்று, கோழிக் கூடுகள் போன்று இருந்த காரைக் குடிசைகளில் வாழ்ந்து, உழைத்து ஓடாகிப்போன தமிழர்களின் துன்பநிலைமையைச் சிறுகதையாக வடித்தார் புதுமைப்பித்தன். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற புதினம் மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் சித்திரித்தது. பஞ்சம் பிழைக்க அடிமைகளாக நெரிசலான அறையில் கப்பலில் அடைக்கப்பட்டவர்களும், பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று, சரியான உணவும் ஊதியமும் இல்லாமல் துன்பத்தில் உழன்றவர்களும் உண்டு. ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களும், ஆப்ரிக்காவிற்குச் சுரங்கத் தொழிலாளர்களாகச் சென்றவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவர்களே.
க. சுபாஷிணி ஒரு மலேசியத் தமிழர். மலேசியாவில் பிறந்து, அங்கும் ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்று ஜெர்மனியில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டையும் புலம்பெயர் வரலாற்றையும் அறியவும் வாய்ப்புக் கொண்டிருந்தவர். கடந்த 15 ஆண்டு காலப் புலம்பெயர் தமிழர்கள் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேகரித்த குறிப்புகளையும் நூல் வடிவில் வெளிக்கொணர்வதின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இந்த நூலை விரிவாக எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களும் அரசும் செய்ய வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்திச் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
தேமொழி: புலம்பெயர் தமிழர், சான்ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா
தே மொ ழி
// https://www.kalachuvadu.com/magazines/காலச்சுவடு/issues/291/articles/17-கடல்-பயணம்-அவலங்களின்-வரலாறு
Saturday, February 10, 2024
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பௌத்தச் சுவடுகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வெளிப்புற சுற்றுச் சுவரில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்வையிட்ட போது..
Sunday, January 28, 2024
பேரரசர் பிம்பிசாரர் திருக்கோயில், அசோக விகார் - செய்யாறு
செய்யாறு நகரில் இன்று ஒரு புத்தர் ஆலயம் திறக்கப்பட்டது.
பேரரசர் பிம்பிசாரர் புத்தர் திருக்கோயில் மற்றும் அசோக விகார்.








































