Sunday, April 10, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 7



மலேசியாவின் கெடா மாநிலத்தில் இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய 37 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று என்பதோடு பண்டைய ஸ்ரீவிஜயப் பேரரசு அதன் தலைநகராகக் கடாரத்தைக் கொண்டிருந்த ஒரு நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மிக முக்கியம் வாய்ந்த துறைமுகப் பகுதியாகவும் பண்டைய காலத்தில் இருந்தது.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடல் வழி பயணம் செய்து கிழக்காசிய நாடுகளுக்கு வந்த பௌத்த பிக்குகளும், பௌத்தத்தைத் தழுவிய வணிகர்களும் இப்பகுதிகளில் பௌத்தம் மிக ஆழமாக வேரூன்றி வளர அடிப்படையை உருவாக்கியிருந்தனர்.

காலப்போக்கில் அரசியல், சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களை விட சீனர்களும், தாய்லாந்து சயாமிய மக்களும் இப்பகுதியில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக அமைகின்றனர்.

நான் கடந்த சில தினங்களுக்கு முன் கெடா மாநிலத்தில் சிக் மற்றும் ஜெனியாங் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற போது அப்பகுதியில் மட்டுமே இருந்த சில பௌத்த விகாரைகளுக்குச் சென்றிருந்த செய்தியை எழுதி இருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது வாட் விசுத்திப்ரதராம் (Wat Visuthipradittharam) பௌத்த விகாரை.

இந்த பௌத்த விகாரையின் வரலாற்றைப் பற்றி இணையத்திலும் கோவில் வளாகத்திலும் தேடிப்பார்த்தேன். ஆனால் தகவல்கள் கிட்டவில்லை. ஒரு ஆய்வுக் கட்டுரை மட்டும் கெடா மாநில பௌத்த விகாரைகளின் பட்டியலில் இந்த விகாரையின் பெயரையும் இணைத்து வழங்கியிருக்கிறது. மேலும் ஒரு கட்டுரை இந்த பௌத்த விகாரை கெடாவில் இருக்கும் அனைத்து பௌத்த விகாரைகளிலும் மிகப்பெரியது என்று குறிப்பிடுகிறது. விகாரையின் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ஆனால் இந்த விகாரை அமைந்திருக்கும் நிலப்பகுதியின் சுற்றளவை ஏனைய நான் நேரில் சென்று பார்த்த விகாரைகளுடன் ஒப்பிடும்போது பள்ளி  அமைந்திருக்கும் நிலப்பகுதி அவ்வளவு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தோன்றியது.

கோயிலின் அமைப்பு தாய்லாந்து பவுத்த விகாரை கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. பௌத்த பள்ளியின் சந்நிதிகள், மைய விகாரையைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பௌத்த விகாரையில் தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதற்குச் சான்றாக ஆங்காங்கே பவுத்த பிக்குகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நான் சென்றிருந்த நேரம் நன்பகல் 12:00 மணி என்பதால் பௌத்த பிக்குகள் மதிய உணவிற்காக அவர்கள் இருப்பிடம் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பௌத்த பிக்கு நான் கோயில் பகுதிக்குச் செல்லும் பொழுது எனக்கு கோயிலின் கதவை திறந்து விட்டு மலாய் மொழியில் உள்ளே சென்று என்னை வழிபடச்  சொல்லிவிட்டு அவர் தங்குமிடம் சென்றுவிட்டார்.

இந்தப் பௌத்த விகாரையில் மிகப் பெரிய வடிவிலான நாக வடிவம் வாயில் பகுதியில் இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. எழு தலைகொண்ட நாகத்தின் வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளது. இதே வகை உருவ அமைப்பில் புத்தரின் தலைப் பகுதியைச் சுற்றி பாதுகாக்கும் வகையில் ஏழு தலை நாகம் இருக்கும் சிற்பங்களை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் நான் பல பௌத்த விகாரைகளில் பார்த்திருக்கின்றேன்.

புத்தர் தனது அரசைத் துறந்து ஞானம் பெற பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற போது அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் நாகர்கள் என்ற கருத்து உண்டு. நாகர்கள் இனம் பண்டைய இந்தியாவின் பூர்வ குடி இனம் என்பது மட்டுமன்றி இலங்கையின் பூர்வ குடி இனம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதில் குறிப்பாக ஏழு தலை நாகம் எனும் உருவ அமைப்பு நாகர்களில் ஏழு வகை குழுக்கள் புத்தருக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கிறது. நாகர்கள் இனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏழு தலை நாகம் என்ற உருவகம் நாளடைவில் புத்தர் சிலைகளில் இணைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த உருவ அமைப்பை மானுடவியல் பார்வையில் வரலாற்று கோணத்தில் ஆய்வு செய்வது தேவையாகின்றது.

இந்தப் பௌத்த விகாரையின் நுழைவாயில், சன்னதிகள், மையக் கோயில் என அனைத்துமே பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கெடா மாநிலத்தின் இன்றும் வழிபாட்டில் இருக்கக்கூடிய முக்கிய பௌத்த விகாரையின் பட்டியலில் இந்தக் கோயிலும் இடம் பெறுகின்றது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி

Wat Visuthipradittharam

Kg.Titi Akar Mk.Padang, Kerbau Jln Sg. Tiang Pendang, Kedah

-சுபா

10.4.2022

#subastravels

#subainmalaysia

#BuddhismInMalaysia 






























Friday, April 8, 2022

திசைக் கூடல் 275: அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர்: வழக்கறிஞர் கௌதம சன்னா சிறப்புரை






Thursday, April 7, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 6


வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்குக் கிழக்காசியா மற்றும் தூர கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் வரலாறு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அடங்கவில்லை. உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக, கிழக்காசிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த, இருக்கின்ற தொடர்புகள் என்பவை மிக முக்கியமானவை.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பௌத்த விகாரைகளைப் பற்றி சில பதிவுகளைக் கடந்த சில நாட்கள் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தேன். இணையத்தில் மேலும் தேடியபோது கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலும் சில செய்திகள் கிட்டின.
இன்று கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைந்துள்ளது. ஆயினும் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும்போது தாய்லாந்து, அதாவது பண்டைய சயாம் நாட்டுடன் நீண்ட தொடர்பு கொண்ட நிலப்பகுதியாக அமைந்தது என்று கூற வேண்டும்.

இப்பகுதியில் ஆட்சி அமைத்திருந்த பண்டைய பேரரசனான பூஃனான், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் ஆகும். இவற்றின் காலம் கிபி 11 வரை எனக் கூறலாம். இதன் பின்னர் ராஜேந்திர சோழனின் படை எடுப்பு இப்பகுதியில் நிகழ்ந்த பின்னர் மலாய் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். 

 அரேபிய இஸ்லாமிய வணிகர்களின் வருகை இப்பகுதியில் படிப்படியாக இஸ்லாமிய மதம் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கிபி 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்பகுதி தொடக்கம், மலாக்கா, தீபகற்ப மலேசியா ஆகிய பகுதிகள் முழுமையாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய வகையில் இஸ்லாமிய நாடாக சமய அடிப்படையில் மாற்றம் பெற்றது.

இத்தகைய சமய பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த போதிலும் கூட கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்க்கும் உள்ள தொடர்பு என்பது இன்றும் தொடர்கின்றது. கெடா மாநிலத்தின் ஒரு பகுதி தாய்லாந்தில் எல்லையாகவும் அமைகிறது.
1909ஆம் ஆண்டு Anglo-Siam Treaty அடிப்படையில் இன்று நாம் காண்கின்ற பிரித்தானிய மலாயாவிற்கும் தாய்லாந்து நாட்டிற்குமான எல்லை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.  Satun பகுதி மலையாவிற்கும், Patani பகுதி சயாம் நாட்டிற்கும் எனப் பிரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் வாழ்ந்த சயாமிய மக்கள் தனித்துவத்துடன் கூடிய பண்பாட்டு கூறுகளைக் கொண்டவர்களாகத் தொடர்கின்றனர். 

இன்றும்கூட தாய்மொழியை(தாய்லாந்து மொழி) இப்பகுதி மக்கள் ஓரளவிற்கு இயல்பாகப் பேசுகின்றனர். தாய் மொழியைப் பேசுகின்ற இம்மக்களை சாம்சாம்ஸ் (The Samsams) என்று அழைக்கின்றனர். இவர்களில் சிலர் இஸ்லாமியர்களாகவும் பெரும்பான்மையோர் பௌத்தத்தைதா தொடர்ந்து சமயமாகக் கொண்டிருப்பவர்களாகவும் அதிலும் குறிப்பாகத் தேரவாத பௌத்தத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகின்றனர். இந்த சாம்சாம்ஸ் இனத்தவர்கள் பற்றிய எண்ணிக்கை தகவல்கள் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

The Siamese  in Kedah under nation state making (Keiko Kuruda, Kagoshima University) என்ற கட்டுரை 1892 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அன்றைய கெடா மாநில சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களது கடிதங்களின் வழி பென்டாங் பகுதியில் 13 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் அதில் வாட் லம்டின் விகாரையில் மட்டும் 22 பௌத்த பிக்குகள் பதிவு செய்திருந்தார்கள் என்ற தகவலையும் வழங்குகிறது.

இதே கட்டுரை 1974-ஆம் ஆண்டு அறிக்கையின்படி கெடா மாநிலத்தில் மட்டுமே 26 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் 27 கிராமங்கள் இருந்ததாகவும், அதில் ஏறக்குறைய 3500 குடும்பத்தினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
கெடா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பவுத்த விகாரைகள் இன்று புதிய கட்டிடங்களில் அழகுறத் திகழ்கின்றன. ஆனால் இவை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இவை. பண்டைய பேரரசுகளின் அரச சமயமாக பௌத்தம் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட விகாரைகளின் எச்சத்தின் தொடர்ச்சி. பழைய கட்டுமானப் பகுதி சிதலம் அடையும்போது புதிய கட்டுமானங்களை உருவாக்கி வழிபாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

கெடா மாநிலத்து சயாம் பௌத்த பின்னணி கொண்ட மக்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்திலும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முக்கிய ஆண்டு விழாக்கள், பண்டிகைகள் நிகழும்போது பினாங்கிலிருந்து பெருவாரியாக மக்கள் வழிபாட்டிற்கு வருகிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

-சுபா
7.4.2022



Wednesday, April 6, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 5

 


மலேசியா கெடா மாநிலத்தில் சிக் மற்றும் ஜெனியாங் பகுதியில் மட்டுமே ஏறக்குறைய 12 க்கும் மேற்பட்ட பவுத்த விகாரைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய செய்தியைக் கடந்த வாரம் நான் அங்கு நேரில் சென்றிருந்தபோது பார்த்து பதிவு செய்திருந்தேன். அதில் அடுத்ததாக நான் விவரிக்கவிருப்பது வாட் புக்கிட் பேராக் ( Wat Bukit Perak / Samnak Ratchakhiri) என அழைக்கப்படும் ஒரு பவுத்த விகாரையாகும்.

இப்பகுதியில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம் இப்பகுதி மலைப்பாங்கான ஒரு பகுதிதான். சாலையை ஒட்டியவாறு 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த பௌத்த விகாரை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

தாய்லாந்து வகை பவுத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த பௌத்த விகாரை. இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் தாய்லாந்து மட்டுமன்றி குறிப்பாகக் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் வசிக்கின்ற சீன மக்கள் என்று அங்கு பேசிய போது அறிந்து கொண்டேன்.

வளாகம் அமைந்திருப்பது காட்டுப் பகுதி என்றாலும் சீர்படுத்தி தோட்டங்கள் உருவாக்கி அதற்குள் ஆங்காங்கே சிறிய சிறிய சன்னதி போல பௌத்த விகாரைகளை அமைத்திருக்கின்றார்கள்.

சாய்ந்து உறங்கும் நிலையில் அமைந்த புத்தரின் சிலை மற்றும் ஒரு சிறிய கோயிலில் தாரா தேவியின் சீன வடிவ சிற்பம், ஆங்காங்கே புத்தரின் சிற்பம் மற்றும் நின்ற நிலையில் அமைந்திருக்கும் சிற்பங்கள் இங்கு அமைத்திருக்கின்றார்கள்.
உள்ளே பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் அமர்ந்து தியானம் செய்யும் வகையிலும் தியான மண்டபமும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
பௌத்த பிக்குகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
ஏனைய பௌத்த விகாரைகளில் இருப்பது போல யானை, புலி போன்ற வடிவங்களுடன் குரங்கின் சிற்பமும் இங்கே புத்தர் சிலைகளோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பௌத்த விகாரையின் முகவரி
K556, Kampung Gajah Putih, 08210 Sik, Kedah, Malaysia
-சுபா
6.4.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia



















Tuesday, March 29, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள் - 4




Wat Thammasirivararam (Wat Kura / wat Ruesee Kura) தம்ம ஸ்ரீ வரராம் பௌத்த விகாரை கெடா மாநிலத்தின் சிக் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மேலும் ஒரு பவுத்த விகாரையாகும்.


முதலில் பார்த்த இரண்டு பவுத்த விகாரைகளில் இருந்து மாறுபட்ட வகையில் இந்த பௌத்த விகாரை அமைந்துள்ளது. ஆமையின் வடிவம் கோயிலின் எல்லா பகுதிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறது. விகாரையின் உள்ளே செல்லும்போது வாசலில் இரண்டு பெரிய ஆமை உருவங்கள் நிற்கின்றன.  உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆமை உருவங்கள் பொண் வண்ணத்தால் வர்ணம் பூசப்பட்ட வகையில் காட்சி அளிக்கின்றன.


இந்த பௌத்த விகாரை கடந்த 200 வருட காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஆயினும் இந்தப் பகுதியில் பழைய கட்டுமானங்களில் சிதலமடைந்த பகுதிகள் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றன.


பௌத்த விகாரையில் புத்தரின் சிலை என்பதைவிட ஒரு அவலோகிதரின் பொன் வண்ண சிலை பிரமாண்டமான வகையில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஏனைய பௌத்த விகாரைகளில் தென்படும் சிறிய சிறிய பௌத்த விகாரைகள் இந்தக் கோவில் வளாகத்திலும் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அறைக்குள் இளம் வயது புத்தர் நடப்பது போன்ற அழகிய பளிங்கு நிற சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

ஆமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பௌத்த விகாரை தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது. இந்த விகாரை அமைந்திருக்கும் ஒரு பகுதியும் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது.


முற்காலத்தில் மலைகள் நிறைந்த இப்பகுதியில் தியானம் செய்வதற்காகவும் பௌத்த நெறிகளைப் கற்பதற்காகவும் பௌத்தர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக இது அமைந்திருக்கலாம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பெரிய கல்லூரி போன்ற ஒரு கட்டடம் ஒன்றும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி


Kura

08210, Jeniang Kedah

-சுபா

29.3.2022

#subastravels

#subainmalaysia

#BuddhismInMalaysia