Wat Charok Padang (Glass bottle temple)
வாட் சாரோக் பாடாங் எனப் பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை கண்ணாடி பாட்டில் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பௌத்த விகாரை தாய்லாந்து பௌத்த கட்டுமானக் கலை அமைப்புடன் அமைந்தது. இது கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் அமைந்திருக்கின்றது.
அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் நேர்த்தியாக அமைந்திருக்கும் கிராமத்து சாலையிலிருந்து சற்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் வழியில் இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கின்றது.
இந்த பௌத்த விகாரையின் சிறப்பு வியக்கத்தக்க வகையில் ஒன்றுள்ளது. அதாவது, இங்குள்ள ஒரு விகாரையின் கூரைப் பகுதி ஒரு லட்சம் (100,000) பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கூரை அமைப்புடன் அமைந்துள்ளது. (இதனை முதல் புகைப்படத்தில் காணலாம்) தாய்லாந்திலும் இதேபோல கண்ணாடி பாட்டில்களில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறிய கண்ணாடி பாட்டில் கூரை அமைப்பு கொண்ட விகாரை மட்டுமன்றி விரிவான பெரிய 2 மாடிக் கட்டிடம் ஒன்றும் அதோடு சிறிய சிறிய வழிபாட்டுப் பகுதிகளும் போதிசத்துவர் சிலையும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் உருவச் சிலைகளும் இந்த பௌத்த விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்திற்கு உள்ளே மிகப் பழமையான உடைந்த படகு ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. அதன் சிறப்பு என்ன என்ற தகவல் தெரியவில்லை.
இந்த வளாகத்திற்குள் சீன காலண்டரில் இடம்பெறுகின்ற 12 விலங்குகளின் சிறிய உருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குளத்தில் ஆமைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.
இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கும் பகுதியின் முகவரி:
Kampung Charok Padang, 08200 Sik, Kedah
-சுபா
29.3.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia






















No comments:
Post a Comment